search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former military officer"

    சென்னையில் இருதய அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே முன்னாள் ராணுவ அதிகாரி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #SathiyaBalan
    சென்னை:

    ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் எந்த நிலையிலும் கடமை தவற மாட்டார்கள்.

    இதை தனது 82-வது வயதிலும் நிரூபித்து காட்டி உள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.

    டாக்டர் சத்யபாலன் (82). ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    சத்யபாலனுக்கு இதயத்துக்கு ரத்தம் செல்லும் வால்வு கால்சியம் படிந்து குறுகி சுருங்கி விட்டது. இதனால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபட்டது. வயதான காலத்தில் இந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுவது உண்டு என்கிறார்கள் டாக்டர்கள்.

    மருத்துவ பரிசோதனையின்போது இதை கண்டு பிடித்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்றனர்.

    கடந்த 17-ந்தேதி ஆபரேசன் நடந்தது. அவரது காலில் இருந்து நரம்பை எடுத்து இதயத்தில் பழுதான நரம்புக்கு பதிலாக பொருத்த முடிவு செய்தனர். ஆனால் கால் நரம்பிலும் கால்சியம் காறை படிந்து இருந்தது. இதையடுத்து கால் நரம்பில் பலூன் வெடித்து சீர் செய்யப்பட்டது.

    பின்னர் அந்த நரம்பை எடுத்து இதயத்தில் பழுதடைந்த நரம்பை அகற்றி விட்டு அதற்கு பதிலாக பொருத்தினார்கள். ஆபரேசன் அரை மணிநேரத்தில் முடிந்து விட்டது. அன்று மாலையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

    மறுநாள் வாக்குப்பதிவு நாள். சுயநினைவோடு இருந்த சத்யபாலன் கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று விரும்பினார்.



    இதையடுத்து மருத்துவர்களும் அவரை ஓட்டளிக்க செல்ல சம்மதித்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சத்யபாலன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி மகிழ்ந்தார்.

    நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வாக்களிக்காமல் இருந்து விடுகிறார்கள். ஆனால் இருதய ஆபரேசன் செய்த மறுநாளே தவறாமல் வாக்களித்த சத்யபாலனின் நாட்டுப்பற்றும், ஜனநாயக கடமை உணர்வும் பாராட்டுக்குரியது. #SathiyaBalan
    ×