search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbhapureeswarar"

    • துலாபாரப பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை இங்கு பிரசித்தம்.
    • பாற்குளம் காமதேனு என்ற தெய்வ பசு தம் காலால் உருவாக்கிய குளம்.

    நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவார திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18-வது சிவத்தலம்.

    திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    நாற்புறம் இருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

    இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவை காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை.

    அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூஜை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர்.

    அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு புத்திர பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வ பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரி காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

    கோவில் அமைப்பு:

    மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது.

    கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் கோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடதுப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

    ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன.

    மேற்குபுறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன. துலாபாரப பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

    கல்வெட்டுகள்

    திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் தனது தொகுபில் கூறி இருப்பதாவது:-

    திருக்கருகாவூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும்.

    இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907-953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், ராச ராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் ராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்சனின் சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பவுர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்தான் அதன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பவுர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

    திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

    தேவேந்திராணி நமஸ்துப்யம்

    தேவேந்திர பிரியபாமினி

    விவாக பாக்யம் ஆரோக்யம்

    புத்ரலாபம்ச தேஹிமே

    பதிம் தேஹி சுதம் தேஹி

    சௌபாக்யம் தேஹிமே சுபே

    சௌமாங்கல்யம் சுபம் ஞானம்

    தேஹிமே கர்ப்பரஷகே

    காத்யாயிணி மஹாமாயே

    மஹாயோகின்யதீஸ்வரி

    நந்த கோப சுதம் தேவி

    பதிம் மே குருதே நம

    இன்னொரு ஸ்லோகம்

    ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி

    மன்னாத சாம்ப சசிசூட

    ஹரதிரிசூலின் சம்போஸ¨கபிரசவ க்ருத்பவமே

    தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    ஓம் கர்ப்ப ரக்-ஷாம்பிகையே போற்றி

    ஓம் கருகாவூர்தேவியே போற்றி

    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் தாயையும் காப்பவளான தேவியே, உன்னை துதிக்கும் எல்லா பக்தர்களையும் நீயே காக்கவேண்டும். உலகத்தை காப்பவளும், மங்களத்தை கொடுக்க கூடியவளும், அனைவருக்கும் தாயானவளுமான உன்னை பூஜிக்கிறேன்.

    ஆடி வெள்ளிக்கிழமையில் சந்தனகாப்பு அலங்காரத்துடன் அழகான பட்டாடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேவியே உன்னை வணங்குகிறேன். எங்களை காக்கவேண்டும்.

    வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தை காத்தவளே, குழந்தைகளால் எப்போதும் நமஸ்கரிக்கப்பட்டவளே, எங்கள் கர்ப்பத்தைக் காக்கவேண்டுமென்று உன்னை நமஸ்கரிக்கிறேன்.

    உலகத்திற்கு தாயுமானவளும், தேவர்களால் போற்றப்படுபவளும், வாத்யகோஷத்தில் ஆனந்தமடைபவளை நான் பூஜிக்கிறேன்.

    • பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
    • சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

    தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.

    ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.

    அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.

    பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.

    அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.

    பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.

    வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?

    அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.

    வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.

    உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.

    குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.

    பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.

    காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).

    பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

    ``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''

    நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.

    அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.

    • திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
    • முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.

    சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்

    அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை

    தலமரம் : முல்லை

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.

    பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1

    பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.

    இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.

    சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.

    கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

    திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.

    அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

    முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.

    இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

    சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.

    பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.

    மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.

    கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.

    இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.

    மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

    திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.

    இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.

    பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

    ×