என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "give charity"
- தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.
- `ஜகாத்’ என்பதன் மூலம் கட்டாயமாக்கி உள்ளது.
தான தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது. மேலும் ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தில் இருந்து தானம் செய்வதை `ஜகாத்' என்பதன் மூலம் கட்டாயமாக்கி உள்ளது. ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வருமானம் மற்றும் சொத்துக்களை கணக்கிட்டு அதற்கு ஏற்ப பணமாகவோ, பொருளாகவோ, தானியமாகவோ ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.
தர்மம் செய்வதன் அவசியம் குறித்து திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது. பல்வேறு நபிமொழிகளும் தர்மத்தின் பலன்களை பட்டியல் இடுகின்றது. `தர்மம் செய்வது ஒரு மனிதனின் பாவத்தை அழித்து விடுகிறது' என்பது நபி மொழியாகும். இது போல, 'பேரிச்சம் பழத்தின் ஒரு பகுதியையாவது தர்மம் செய்து நரகத்தை விட்டு உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று தர்மத்தின் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். இதுபற்றி நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாவது:-
`தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல'. (அறிவிப்பாளர்: இப்னு மாஜா, நூல்: அஹ்மது, திர்மிதி) 'ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. (நூல்: புகாரி)
தர்மம் கொடுப்பது வெளிப்படையாக இருக்க வேண்டுமா?, ரகசியமாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு விளக்கி உள்ளது:
"தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே. ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்; எனினும் அவற்றை மறைத்து ஏழை-எளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:271).
இந்த நபிமொழியும் தானம் எவ்வாறு செய்வது நல்லது என்பதை இவ்வாறு கூறுகின்றது: ``இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில், அல்லாஹ் தன் நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். அவர்களில் ஒருவர் தன் வலக்கை செய்யும் தர்மத்தை தன் இடக்கை அறியாதவாறு ரகசியமாக தர்மம் செய்தவர்'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மேலும் தர்மம் செய்வது என்பது நமக்கு தேவையற்ற, பழைய பொருட்களை கொடுப்பது அல்ல. நாம் நேசிக்கும் பொருட்களில் இருந்து கொடுப்பது தான் தர்மங்களில் சிறந்தது ஆகும். இது குறித்த நிகழ்வு வருமாறு:-
நபித்தோழர்களில் ஒருவரான அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்கு பேரீச்ச மரத்தோட்டங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
'நீங்கள் நேசிக்கும் பொருட்களில் இருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற (திருக்குர்ஆன் 3:92)
இறைவசனம் அருளப்பட்டதும், அபூ தல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, '`இறைத்தூதர் அவர்களே, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என அல்லாஹ் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்ய விரும்புகிறேன்'' எனக்கூறினார்.
நபிகள் நாயகம் அவர்கள், இதை அவரது உறவினர்களுக்கு கொடுக்குமாறு தெரிவித்தார். அபூ தல்ஹா (ரலி) இதை ஏற்றுக்கொண்டு தன் தோட்டத்தை தம் நெருங்கிய உறவினருக்கும், தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
இந்த தகவல்களை புகாரி நூலில் நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார். தர்மம் குறித்த மற்றொரு நபி மொழி வருமாறு:
`தர்மத்தில் சிறந்தது எது?' என மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். `குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), (நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்).
``தர்மம் செய்வதால் செல்வத்தில் எதையும் குறைத்துவிடாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை மேலும் அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்). மனமகிழ்வுடன் தர்மம் செய்வோம், நாம் விரும்பிய பொருட்களில் இருந்து கொடுப்போம், இறையருள் பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்