search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GO Cancel"

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. #SecretariatCase
    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து இந்த புதிய கட்டிடத்துக்கு தலைமை செயலகம் மாற்றப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் பழைய இடத்துக்கே தலைமை செயலகம் மாற்றப்பட்டது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதன்படி, நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை நடத்தினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி நீதிபதி ஆர்.ரெகுபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனுக்கும், விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அமைக்கும் விசாரணை ஆணையம் என்பது கண் துடைப்பு நாடகம் என்றும், விசாரணை ஆணையம் அமைப்பதால், எந்த ஒரு பலனும் இதுவரை ஏற்பட்டது கிடையாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர், நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தை கலைத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தார். நீதிபதி ஆர்.ரெகுபதியும் விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இதுவரை நடத்திய விசாரணையின் விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.


    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதை பார்த்த பின்னர், போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்காமலேயே, நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.

    தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் சுமார் ரூ.629 கோடி ஊழல் நடந்துள்ளது, இவ்வளவு பெரிய ஊழலை சும்மா விட்டு விட முடியாது. இந்த ஊழலுக்கு முகாந்திரம் உள்ளது என்பதால் தான் போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி ஆர்.ரெகுபதியின் விசாரணை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் படிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், நீதிபதி ஆர்.ரெகுபதி தன் விசாரணையை முடிக்கவில்லை. ஆதார ஆவணங்களை எல்லாம் திரட்டி, முழுமையாக விசாரணை முடிந்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே, போலீஸ் விசாரணைக்கு மாற்ற முடியும்.

    எனவே அரைகுறை ஆவணங்களை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார். #SecretariatCase
    ×