search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gotabaya"

    இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய போட்டியிடுகிறார். #Rajapaksa #Gotabaya

    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பதவிக் காலம் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

    அதற்கான வேட்பாளர் தேர்தலில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரம்காட்ட தொடங்கிவிட்டனர். இலங்கையில் ஒருவர் 3வது முறையாக அதிபர் பதவி வகிக்க முடியாது. அதுகுறித்த சட்ட திருத்தம் 2015-ம் ஆண்டில் இயற்றப்பட்டுள்ளது.

    அதன்படி முன்னாள் அதிபர் ராஜபக்சே வர இருக்கின்ற தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கனவே அவர் 2 தடவை அதிபராக பதவி வகித்துள்ளார். கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    தற்போது அவர் இலங்கை பொது ஜன பெரமுன என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் தனது தம்பி கோத்த பய ராஜபக்சேவை (69) அதிபர் தேர்தலில் நிறுத்த முடிவு செய்துள்ளார்.

    இவர் ராஜபக்சே அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடத்தி உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்.

    இவரை அதிபர் தேர்தல் வேட்பாளராக நிறுத்துவது குறித்த முடிவு கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ராஜபக்சேவின் குடும்பத்தினர் விருந்து நிகழ்ச்சி நடத்தினர். கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து இருந்தாலும் அதை தற்போது பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

    தேர்தல் வரை அதை ரகசியமாக பாதுகாக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் தேர்தலில் போட்டியிட கோத்தபய தயாராகி வருகிறார். இலங்கை அரசியல் சட்டப்படி இரட்டை குடியுரிமை உள்ளவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

    எனவே தனக்கு உள்ள அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும்படி கோத்தபய விண்ணப்பித்துள்ளார். தேர்தலில் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டணியில் போட்டியிட கோத்தபய திட்டமிட்டுள்ளார். #Rajapaksa #Gotabaya

    ×