search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grain export"

    • ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
    • 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

    போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

    இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

    இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

    இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.

    இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    ×