search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Greece boat tragedy"

    • படகு விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது.
    • லிபியாவிலிருந்து, மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோத பயணம் தொடங்குவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், வேலையின்மை, வறுமை, போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும், சில வருடங்களாகவே பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற பாகிஸ்தானியர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இதற்கென இருக்கும் மனித கடத்தல்காரர்களிடம் பெரும் பொருட்செலவு செய்து, ஆபத்தான முறையில் நீண்ட காலம் பயணித்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் சில சமயம் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேர்வது பல வருடங்களாக தொடர்கிறது.

    அது போன்றதொரு சம்பவம் கிரீஸ் நாட்டில் சமீபத்தில் அரங்கேறியது. கிரீஸ் நாட்டில் ஒரு படகு விபத்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தனர். 750 பேரை ஏற்றிச் சென்ற அந்த படகு பாரம் தாங்காமல் கிரீஸ் கடல் பகுதியில் மூழ்கியது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானின் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி மனித கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

    கிரீஸ் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த படகு விபத்து பற்றிய உண்மைகளை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். மேலும் மனித கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு (LEAs) உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து செயல்படும் பாகிஸ்தானிய மனித கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க, வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு வெளியுறவு அலுவலகத்திற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஜூன் 19 ஆம் தேதி நாடு முழுவதும் துக்க நாள் என்றும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல், கராச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் ஏற முயன்ற ஒருவர் உட்பட, மனித கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 பேரைக் கைது செய்துள்ளதாக மத்திய புலனாய்வு முகமை (FIA) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "இந்த நபர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்களை கடத்தும் முயற்சிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களில் சிலர் கிரீஸில் மூழ்கிய படகில் பாகிஸ்தானியர்களை அனுப்புவதிலும் ஈடுபட்டுள்ளனர்" என்று டிஐஜி ஆலம் ஷின்வாரி கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குய்ராட்டா மற்றும் சார்ஹோய் பகுதியைச் சேர்ந்த 21 பாகிஸ்தானியர்கள் அந்த படகில் இருந்தனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷின்வாரி கூறினார்.

    மற்றொரு மூத்த புலனாய்வு அதிகாரி கூறுகையில், ஐரோப்பாவிற்கு மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள சவுத்ரி சுல்கர்னைன், தலாத் கியானி, மற்றும் காலித் மிர்சா போன்ற பாகிஸ்தானியர்களில் சிலர் லிபியாவில் உள்ளனர்.

    "பாகிஸ்தானில் அவர்களுக்கு துணை முகவர்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நபரிடமிருந்தும் 1 முதல் 2 மில்லியன் ரூபாய் மற்றும் அதைவிட அதிகமாக வசூலித்து அவற்றை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்கின்றனர். "அவர்கள் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சட்டப்பூர்வமாக விமானம் மூலம் அனுப்பப்படுகின்றனர். பின்னர் எகிப்து மற்றும் லிபியாவிற்கு மாற்றப்படுகின்றனர். பின்பு, லிபியாவிலிருந்து, மத்தியதரைக் கடல் வழியாக சட்டவிரோத பயணம் தொடங்குகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

    முகவர்களுக்கு அதிக தொகையை செலுத்திய போதிலும், இந்த சட்டவிரோத மனித கடத்தல் மோசடியில், அப்பாவி பாகிஸ்தானியர்கள் எப்படி உயிர் இழக்கின்றனர் என்பதை சமீபத்திய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் செல்வதில் ஒரு சிலர் அடையும் வெற்றி, மற்றவர்களுக்கு இப்பாதையைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலை உருவாக்குவதாக தெரிகிறது.

    ×