search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gupta scam"

    குட்கா முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலக்கட்டத்தில் பணியில் இருந்த 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #CBI #GutkaScam
    சென்னை:

    செங்குன்றம் அருகே உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

    குடோன் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறார்கள். இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதேபோல குட்கா முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலக்கட்டத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.



    இதன்படி துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றும் 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    குட்கா முறைகேடு குற்றச்சாட்டு கூறப்பட்டபோது, வடசென்னை பகுதியில் பணியாற்றிய 3 போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த 3 போலீஸ் அதிகாரிகளில் 2 பேர் தற்போது ஐ.ஜி. அந்தஸ்தில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி வெளிமாவட்டத்தில் பணியில் உள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் தகவலை சென்னை போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CBI #GutkaScam
    ×