என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Honors of Ramadan Fasting"
- நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
- ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.
இஸ்லாமியர் களிடத்தில் நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.
`நோன்பு' எனும் வார்த்தை அரபு மொழியில் `ஸவ்மு' என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் `தடுத்துக்கொள்ளுதல்' ஆகும். அதாவது, சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து மறையும் நேரம் வரையில் எதையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமல் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் இறையச்சத்துடன் இருப்பதே ரமலான் நோன்பு ஆகும்.
நோன்பின் மாண்புகள் குறித்தும், சிறப்புகள் பற்றியும் திருக்குர் ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான நபி மொழிகளிலும் ரமலான் நோன்பின் சிறப்புகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: "நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்". (2:183)
இந்த ரமலான் மாதத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக விளங்கும் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் ஒரு ரமலான் காலத்தில் தான்.
இதையே திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு கூறுகின்றது: "ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது".
ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்த நபி மொழிகள் வருமாறு:
`எவர் இறை நம்பிக்கையுடனும்' மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
`நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அது `ரய்யான்' என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்'.
'ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'.
`அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை''.
`நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்.
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:- ``நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னை சுவனத்தில் நுழைவிக்கக்கூடிய ஒரு செயலைக்கொண்டு எனக்கு தாங்கள் ஏவுங்களேன் என வேண்டினான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்வீராக. ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவும் கிடையாது என பதில் கூறினார்கள். திரும்பவும் நான் நபியிடம் வந்து முறையிட, அண்ணலார் எனக்கு அதே பதிலைச் சொன்னார்கள்''. (நூல்: அஹ்மது)
நோன்பு இருக்கும் ரமலான் காலத்தில் அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும். மேலும் `ஜகாத்' எனப்படும் தர்மத்தையும் ரமலானில் நிறைவேற்றுவது கடமையாகும். நமது வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தர்மம் செய்வது ஜகாத் ஆகும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:- இறை வழியில் ஹலால் (ஆகுமான) செல்வத்தையே செலவு செய்யுங்கள். தூய்மையான பொருட்களையே இறைவன் ஏற்றுக்கொள்கிறான். 'இறை நம்பிக்கை கொண்டோர்களே, நீங்கள் சம்பாதித்த பொருட்களில் இருந்தும், பூமியில் நாம் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தவற்றிலும் சிறந்தவற்றை (தூய்மையானவற்றை- இறைவழியில்) செலவு செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:267)
நோன்பு இருக்கும் போது மனது கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களில் இருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு குறைக்கிறது.
உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, நோன்பு மேற்கொள்வதால் அது உடல் கழிவுகள், ரத்தக்குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.
ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் உள்ளது.
`எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்தில் இருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்' என்பது நபி மொழியாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் பார்ஸி (ரலி), நூல்: பைஹகி).
நோன்பின் மகிமையை உணர்வோம், நன்மைகள் பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்