search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "housewives worried"

    • தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
    • மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    போரூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

    பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

    தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×