என் மலர்
நீங்கள் தேடியது "Hyderabad-Bangalore"
- 70 பேர் பயணம் செய்ய முடியும்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விமான சேவை தொடங்கி வைக்க அழைப்பு.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை யில் உள்ள விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க இண்டிகோ நிறுவனம் முன்வந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புதுச்சேரி விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன சேவைக்காக பிரத்தியேக அலுவலக அறைகள், தொழில்நுட்ப அறைகள், இண்டிகோ நிறுவனம் ஊழியர்கள் பணியாற்றுவதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விமான சேவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளது.
புதுவையில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.
அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில் 70 பேர் பயணம் செய்ய முடியும்.
இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை சட்டசபை வளாகத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.