search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydrocarbon project"

    • தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
    • இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.

    காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு மார்க்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வலா, நீதிபதி மரகத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் மற்றும் வேளான் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசு உரிமம் வழங்காத காரணத்தால், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்த பணியும் துவங்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்கள் மேம்பாட்டு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி இருக்கிறது.

    அந்த சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹி ருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் 3-வது சுற்றுத்திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

    தற்போது அப்பகுதியில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்கத் திட்ட மிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

    சோதனை கிணற்றுக் கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணை யத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித் துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை வட்டத்தில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.

    இந்த திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓ.என்.ஜி.சி. நிறு வனத்தின் செயலுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.

    அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வில்லை. இதனை முன்மா திரியாகக் கொண்டு ராம நாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாடு சுதந்திரமடைந்தவுடன் நேரு கையில் நாடு இருந்தால்தான் வளர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கும் என காந்தி நாட்டை ஒப்படைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு நேரு முக்கியத்துவம் அளித்தார்.

    பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அணைகள், மின்நிலையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகங்களும், பத்திரிகைகளும் காங்கிரஸ் கட்சியை பற்றி பலவிதமான செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை. யாரும் முன்வரவில்லை. பலமான எதிரணி என்பதால் வெற்றி அவர்களுக்குத்தான் என கூறினர்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தேர்தலில் நிறுத்தினோம். அவரும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். இதற்காக வேறு ஒரு வேட்பாளரை தயார் செய்த பின்னர் கட்சித்தலைமைக்கு விருப்பத்தை தெரிவித்து வேட்பாளராகினார்.

    காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு, பகலாக பாடுபட்டீர்கள். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தீர்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார் என கூறி வந்தேன். ஆனால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதோடு மட்டுமின்றி புதுவையில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் கொடுத்துள்ள அங்கீகாரம். இந்த வெற்றிக்கு 6 நாள் போராட்டமும், போராட்டத்திற்கு காரணமானவர்களும் ஒரு காரணம்தான்.

    வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினருக்கும் தலைவணங்குகிறேன். மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மீதமுள்ள காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணியும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதோடு தொண்டர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். இதை நன்றிக் கடனாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.



    மோடி 2-வது முறை பிரதமராக வெற்றி பெற்றவுடன் பாகுபாடின்றி அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் அவரை சந்தித்து புதுவைக்கு தேவையான நிதி, திட்டங்களை கேட்டுப்பெறவுள்ளோம். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் அமைச்சரவை பங்கேற்கும்.

    புதுவை, காரைக்கால் பகுதியில் எரிபொருள் எடுக்க ஆய்வு மையம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதுவை அரசு எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.

    மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. எங்கள் அனுமதியின்றி பணியை தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவோம். இதை சட்டமன்றத்திலும் நான் உறுதியளித்துள்ளேன். புதுவைக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    தமிழகத்தில் நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவற்றை எடுக்க மத்திய அரசு வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா பகுதிகள் அனைத்தும் அழிந்து நிலத்தடி நீர்மட்டம் இறங்கி பாலைவனமாகிவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை ரத்து செய்ய அனைத்து பகுதிகளிலும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில் விவசாயிகள், மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத்தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில், விவசாயிகள் உளுந்து வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த தமிழகம் முழுவதும் கைவிட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர். 
    பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க .தலைமையிலான கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோல் இந்திய அளவில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக வருவார். இது கருத்து கணிப்பு மட்டுமல்ல. இதை தான் நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லிக்கொண்டே வந்தது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் மோடி ஆட்சி தொடரும.

    தற்போது தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனைகள் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவதினாலே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இது திடீரென்று வந்தது இல்லை. இன்னும் வருகிற காலங்களில் அதிகமான வறட்சி ஏற்படும், வெள்ளமும் வரலாம். ஆட்சியாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இது ஒரு ஐம்பது ஆண்டுகால பிரச்சனை. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க வேண்டும். முக்கியமாக கோதாவரி காவிரி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் அப்பொழுது தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.


    நாங்கள் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை எப்பொழுதும் விட்டுத்தர மாட்டோம். டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்.

    நாங்கள் கூட்டணிக்குள்ளே இருந்து அதை எதிர்ப்போம். மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதை எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது. 

    மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மரக்காணம்:

    டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கிழக்கு கடற்கரையோரம் மரக்காணம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இன்று காலை நடுக்குப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வயல்களில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கக் கூடாது. இந்த திட்டம் தொடங்கினால் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிந்து விடும். உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத அவலநிலை ஏற்படும்.

    எனவே விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.

    இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

    1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

    மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

    வேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?

    தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

    காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.

    எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். #PazhaNedumaran #Hydrocarbon

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.

    கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.

    இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030-ம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடைக்காது என மோடி அரசு அறிவித்துள்ளது.

    இதன் பின்னர் மின்சார கார்கள் தான் 2030-க்குப் பிறகு வர உள்ளது. எனவே இன்னும் 11 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன்? காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.

    எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.

    இவ்வாறு நெடுமாறன் தெரிவித்தார். பேட்டியின் போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உடன் இருந்தார்.

    திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி குடியரசு தினத்தன்று போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி பி.ஆர்.பாண்டியன் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று தினம் திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் தினமும் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டம் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்திருந்தது.

    அதன்படி திருக்காரவாசல் கடைவீதியில் போராட்ட குழு தலைவர் தியாகராஜன் மற்றும் சுப்பையன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய அதிகாலை வரை தொடர்ந்து நடந்தது. இதில் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள், கலந்து கொண்டனர். அங்கேயே படுத்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தமத்திய அரசையும், வேதாந்தா நிறுவனத்தையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இன்று காலை 6 மணியுடன் போராட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் போராட்டம் நடைபெறும் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #HydroCarbonProject
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்து நாட்டின் லங்காஷையர் மாவட்டத்திலுள்ள லிட்டில் பிளம்ப்டன் நகரில் பாறை எரிவாயு எடுப்பதற்காக பூமியைத் துளையிட்ட போது அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டாவில் அடுத்தடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    இங்கிலாந்தில் இந்த அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் 2016-ம் ஆண்டில் கனடாவில் இதைவிட அதிக சக்தி கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தத் திட்டத்தால் ஏற்படும் ஆபத்தைக் கருதி தான் கடந்த அக்டோபர் 13-ம் தேதி உலகம் முழுவதும் பூமியை துளையிட்டு எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து சுற்றுச்சூழல் மற்றும் பசுமை அமைப்புகளின் சார்பில் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    ஆனால், இதையெல்லாம் உணராமல் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைக் கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களிலும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு கடலில் 170 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    பழங்காலத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை நினைத்தாலே மிகவும் அச்சமாக உள்ளது.

    காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டேன். நான் சந்தித்த லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அத்திட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, அனைத்து மக்களுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்; காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.

    பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தும், காவிரி டெல்டா மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #HydroCarbonProject
    காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss
    சிதம்பரம்:

    காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி கடலூர் தெற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    சிதம்பரம் பா.ம.க.வின் கோட்டை. டெல்டா பகுதிக்கு மோடி அரசால் ஆபத்து வந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்க 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும். 85 கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். மக்கள் அகதியாகி விடுவார்கள்.

    கடலூர், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கொள்ளிடம் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பெரும் ஆபத்தை உண்டாக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் 30 அடி அகலத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். இதற்காக பூமிக்கு கீழே உள்ள பாறைகள் சக்திவாய்ந்த வெடி வைத்து தகர்க்கப்படும். இதனால் நில அதிர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படும்.

    தமிழகத்தில் உள்ள பூமி இன்னும் ஆயிரமாயிரம் காலம் நன்றாக இருக்கவேண்டும். நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழவேண்டும். இந்த பகுதியில் யாராவது ஆழ்துளை கிணறுகள் அமைக்க குழாய்களை இறக்கினால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்களை கண்டு கொள்வதில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். போராட்டமும் நடத்துவோம்.

    மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் முன்வருவோம். எனக்கு பதவி ஆசை கிடையாது. நான் 35 வயதினிலேயே பதவியை பார்த்துவிட்டேன். மக்களை பற்றி நினைக்காமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது.

    நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரப்போகின்றது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர நாங்கள் விடமாட்டோம் இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss
    ×