search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAF Attack"

    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமையும், தகுதியும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் புகழாரம் சூட்டி உள்ளனர். #IAFAttack
    சென்னை:

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய விமானப்படையின் பதிலடி தாக்குதலுக்கு சென்னையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 1962-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை ராணுவத்தில் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆர்.கார்த்திகேயன் கூறியதாவது:-

    காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு பல வாய்ப்புகளை இந்தியா வழங்கியது. ஆனால் அந்நாடு அதனை ஏற்காமல் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதுடன், புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்துதான் ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் விமானப்படை வான்வழி தாக்குதலை மிக நேர்த்தியாகவும், திறமையாகவும் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை பெரிய அளவில் பார்க்க வேண்டும். தனிமைப்படுத்தி பார்க்கக்கூடாது. பாகிஸ்தானின் மோசமான செயல்களால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எந்த வெளிநாட்டினரும் இதனை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பயங்கரவாத செயலை அழிக்க ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். பொதுமக்களும் சாதி, மத உணர்வுகளை கடந்து அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் அணிவகுக்க வேண்டும். தாக்குதல் நடத்த அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், விமானப்படை மற்றும் ராணுவத்துக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனியாவது பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற லெப்டினட்-கர்னல் என்.தியாகராஜன் கூறியதாவது:-

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட், முசாபராபாத் மற்றும் சாக்கோட்டி ஆகிய இடங்களில் 12 மிரஜ் வகை விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை வேகமாகவும் துல்லியமாகவும் தாக்கி அழிக்கும் செயல் (ரேபிட் ஆக்சன்) என்று கூறுவோம்.

    தாக்குதல் நடத்தப்பட்ட பாலகோட்டில் பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு மிக அருகில் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 5½ ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இந்த முகாமில் தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் பதுங்கி இருந்ததுடன், பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுதல், பயிற்சி அளித்தல் போன்றவை நடந்து வந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    குறிப்பாக தாக்குதல் நடத்திய 3 இடங்களிலும் தலா ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் திறமையும், தகுதியும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இந்த செயலை வரவேற்க வேண்டும்.

    மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் மிகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த தாக்குதலை அரசியல்ரீதியாக கொண்டு சென்று கொச்சைப்படுத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்னல் பி.கணேசன் - லெப்டினட் ஜெனரல் பாபி மாத்யூஸ்

    ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் பாபி மாத்யூஸ் கூறும் போது, ‘மத்திய அரசின் நடவடிக்கை சரியானது, பாராட்டுக்குரியது. இனிமேலாவது பாகிஸ்தான் அரசு இதுபோன்ற நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை யோசனை செய்யும். இந்த தாக்குதலுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார்.

    ஓய்வு பெற்ற லெப்டினெட் கர்னல் ராஜன் ரவீந்திரன் கூறுகையில், ‘புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நல்ல முயற்சி. அரசின் நடவடிக்கையை முழுமையாக வரவேற்கிறேன்’ என்றார்.

    ஓய்வு பெற்ற கர்னல் பி.கணேசன் கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் என்ற நாடே இல்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீர் நிலப்பகுதி இருந்தது. ஆனால் தற்போது ஜம்மு-காஷ்மீர் எங்கள் பகுதி என்று அந்த நாடு கூறுவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார். அவர்களின் தேவையில்லாத நடவடிக்கையால் கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடந்தது. அதற்கு பிறகும் தொடர்ந்து மோசமான செயல்களில் அந்நாடு இறங்கி வருகிறது.

    புல்வாமா தாக்குதல் ஏற்புடையது அல்ல. இதுபோன்ற தாக்குதலை அவ்வப்போது நடத்திவிட்டு நாங்கள் செய்யவில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்தது. சரியான நேரத்தில் சரியான பாடத்தை ராணுவம் புகட்டி உள்ளது. ராணுவ வீரர்களின் திறமை வெளிப்பட்டுள்ளது. இனியும் தேவையில்லாத நடவடிக்கையில் இறங்கினால் பெரிய இழப்பை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியது வரும். நாட்டு மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IAFAttack

    இந்தியாவின் எல்லைதாண்டிய வரம்புமீறல் பற்றி ஐ.நா.வில் புகார் செய்யப்போவதாக பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. #IAFAttack #UN
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் துரிதமான, துல்லியமான வான் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் என அதிக அளவிலான எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.



    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அவசரமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மக்கள் சமுதாய தலைவர்கள், ராணுவ தலைவர் ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா உள்ளிட்ட ராணுவ தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவின் தாக்குதல் குறித்தும், தற்போது அங்குள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.

    பின்னர் கூட்டத்தில், “இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வரம்புமீறல் குறித்து உடனடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளிடம் புகார் தெரிவிப்பது” என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை எழுப்பும் வகையில் அவர்களை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவு மந்திரி குரேஷி ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதோடு பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கூட்டுக்கூட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    உயர்நிலை கூட்டத்தையொட்டி முன்னதாக வெளியுறவு மந்திரி குரேஷி தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்ததும் அவர் கூறும்போது, “தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடவும், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக திருப்பி தாக்கவும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது” என்றார்.

    தேசிய பாதுகாப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தையும் பிரதமர் இம்ரான்கான் கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் கூறும்போது, “ஆயுத படைகளும், பாகிஸ்தான் மக்களும் எந்த நடவடிக்கைகளுக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.

    தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா அறிவிப்பின்றி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதால், இதற்கு பாகிஸ்தான் உரிய நேரத்தில், உரிய பதிலடி தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. #IAFAttack #UN

    எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை அழித்த இந்திய விமானப்படைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
    சென்னை:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு தலைவர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    தமிழக மக்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமானப்படைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டால் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.



    பயங்கரவாத முகாம்களை அழித்த வீரர்களால் நாட்டுக்கு பெருமை என்றும், பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு வணக்கங்களை தெரிவிப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

    மோடியின் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக பாஜக கூறியுள்ளது. நமது வீரர்கள் உயிரிழந்ததால் மிகுந்த வேதனையில் இருந்த ஒவ்வொரு இந்தியனுக்கும், இன்று காலை நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

    நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நமது படை வீரர்களுக்கு பின்னால் மக்கள் உறுதியாக இருந்து ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.

    இந்திய விமானப்படை வீரர்களை நாட்டின் அற்புதமான வீரர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
    பயங்கரவாத முகாம்களை அழித்ததையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால், இந்திய விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #IAFAttack #LOC #PakistanAction
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



    இதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால், பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்கும்படி விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானங்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #IAFAttack #LOC #PakistanAction
    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.

    இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய கொடி லோகோவையும் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், ‘‘இந்தியர்களை பாதுகாக்க இந்திய விமான படை மேற்கொண்ட உறுதியான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் ஜெய்ஹிந்த்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.



    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி பெருமைப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில், ‘‘சகோதி, முசாபராபாத், பாலாகோட் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. உண்மையில் இந்தப் பகுதிகள் நமக்கு சொந்தமானவை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் நமது மண்ணில்தான் குண்டுவீசி இருக்கிறோம். இதில் தவறு இல்லை. நம் பகுதியை காக்க நாம் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

    இதுவே அவர்களது (பாகிஸ்தான்) எல்லை என்றால் ஐ.நா. படை மூலம் தான் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். எங்களை தாக்கினால் நாங்கள் இந்தியாவை ஆயிரம் கூறு போடுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டி இருந்தது. எனவே 1000 குண்டுகளை இந்தியா வீசியிருப்பது சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கூறுகையில், “40 வீரர்கள் பலியானபோது வேதனை அடைந்தோம். இப்போது பதிலடி கொடுப்பது ஆறுதல் அளிக்கிறது” என்றார். #PulwamaAttack #IAFAttack #LoC
    ×