search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iaf claims"

    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது. #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. 

    அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது. 

    நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. 

    இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது. 

    மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் விமானப்படை தகவல் தொடர்புத்துறை உயரதிகாரி மைக் மூலம் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துவதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison 
    ×