என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAF"

    அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய விமானப்படைக்கு நவீன தாக்குதல் ரக ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் ஒப்படைத்தது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் அந்த நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்க போயிங் முன்வந்தது. இந்த ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி இதில் முதல் ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் தற்போது இந்திய விமானப்படைக்கு வழங்கி உள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்துக்கு உட்பட்ட மேசா பகுதியில் அமைந்திருக்கும் போயிங் விமான உற்பத்திப்பிரிவில் வைத்து முறைப்படி இந்த தாக்குதல் ஹெலிகாப்டர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஏ.எச்-64 இ (1) என்ற ரகத்தை சேர்ந்த இந்த அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை ஏர் மார்ஷல் புடோலா தலைமையிலான இந்திய விமானப்படை குழுவினர் பெற்றுக் கொண்டனர். அப்போது போயிங் நிறுவன பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

    இந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அலபாமாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர்தான் இந்திய விமானப்படையிலும் மேற்படி ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய விமானப்படைக்கான எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த ஹெலிகாப்டர்களில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரகத்தை சேர்ந்த இந்த அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தரை இலக்குகளின் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் போர் புரிய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருப்பதுடன், தரைப்படையினருக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்த அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்களால் விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவு மேலும் வலுவடையும் என அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
    பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை என்று பார்த்திபன் ட்விட்டரில் கோரியுள்ளார்.
    பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை நேற்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம். கைதான சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்துடன் அபிநந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைராக பரவியது. அபிநந்தனை விரைவில் மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



    இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

    கணவனின் கடமையும்
    தந்தையின் வீரமும்,

    மனைவியின் மனதையும்
    மகனின் கண்களையும்,

    ஈரப்படுத்தாமல் 
    சேதப்படுத்தாமல்
    எத்தனை நிமிடங்கள்
    காக்கும்?

    அதற்குள் காக்குமா
    இந்தியா அந்த வீரத்
    திருமகனை?

    இவ்வாறு கூறியிருக்கிறார். #Abhinandan #BringBackAbhinandan #Parthiban

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. #IAFAttack #LoC
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.

    இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  #IAFAttack #LoC

    முதல் ரபேல் போர் விமானம் இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) இந்திய விமானப்படையில் சேரும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #FranchAmbassador #India
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.



    இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பெங்களூருவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கான சிறப்புரிமை எனக்கு கிடைத்தது. அப்போது ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்தோம். மேலும், சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், எல்லா வடிவத்திலுமான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதற்கு இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று குறிப்பிட்டேன்” என கூறி உள்ளார்.

    டி.வி. சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரபேல் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது, எங்களுக்கு கவுரவம். இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) முதல் விமானம் இந்திய விமானப்படையில் சேரும்” என குறிப்பிட்டார்.

    பெங்களூருவில் விமான கண்காட்சியில் ரபேல் போர் விமானம் கலந்து கொண்டு சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
    ரபேல் ஊழல் மூலம் இந்திய விமானப்படையை பிரதமர் மோடி விற்று விட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #ModisoldIAF #RahulGandhi
    புதுடெல்லி:

    நாடு தழுவிய அளவிலான காங்கிரஸ் இளைஞர் அணியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பிரன்சிங் முறையில் இன்று பங்கேற்று பேசினார்.

    ‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனது நண்பரான அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்ததன் மூலம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மோடி திருடி விட்டார். இது இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும்.

    மோடி அவர்களே! உங்களால் மட்டுமல்ல, ரபேல் விவகாரத்தில் உண்மையை மறைக்க யாராலும் முடியாது. உண்மை எப்படியாவது வெளிப்பட்டே தீரும். உங்களால் இரவில் தூங்க முடியாது. தூங்கும்போது அனில் அம்பானியின் முகமும் ரபேல் போர் விமானத்தின் படமும், இந்திய விமானப்படையில் பணியாற்றி உயிர்நீத்த தியாகிகளின் முகங்களும் உங்கள் கண் முன்னே வந்து நிற்கும்.  

    நீங்கள் இந்திய விமானப்படையையே விற்று விட்டீர்கள். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டீர்கள்’ என இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் குறிப்பிட்டுள்ளார். #ModisoldIAF #RahulGandhi 
    உத்தரப்பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் திடீர் கோளாறு காரணமாக அவசரமாக வயலில் தரையிரக்கப்பட்டது, அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். #IAF
    லக்னோ :

    உத்திரப்பிரதேச மாநிலம், பாக்பட் மாவட்டம் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் அவசரமாக வயல்வெளியில்  தரையிரக்கப்பட்டதால் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமனாக விமானி உயிர் தப்பினார்.

    இந்திய விமானப்படை தினம் வருகிற 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், காசியாபாத்தில் உள்ள ஹிண்டோன் விமானப்படை தளத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் சாகச நிகழ்சிக்கான சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டது.

    ஆனால், நடுவானில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை அவசரமாக வயல்வெளியில் விமானி தரையிரக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. #IAF
    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. #Palasore #IAF #AstraMissile #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று பிற்பகல் செலுத்தப்பட்டது. இது வானில் பறந்த பான்ஷி ரக ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    வானில் இருந்து பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 7 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.



    அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் ஆகியோருக்கு பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #Palasore #IAF #AstraMissile #NirmalaSitharaman
    ×