search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indoor Stadium"

    பெரம்பலூரில் ரூ.3 கோடி செலவில் நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உள்விளையாட்டு அரங்கம் 52 அடி நீளம், 34 அடி அகலத்துடன், மரத்தினாலான தரைத்தளம் 40 மீ நீளம், 20 மீ அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, இறகுப்பந்து, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, டேபிள்டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதற்கு மின்னொளி வசதியுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 1½ கோடியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ. 3 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைக்கப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்த கலெக்டர், உள் விளையாட்டு அரங்கின் கட்டுமானப்பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிக்கும் அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். 
    ×