search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Instructions"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
    • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-

    சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.

    பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    • இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
    • புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.

    உடுமலை:

    படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த, பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. படைப்புழு தாக்குதலால் மகசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறையும் வாய்ப்புள்ளது. இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. படைப்புழு ஆறு நிலைகளை கொண்டது. இளம்புழுப்பருவம் கருப்புத்தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிறக்கோடுகளும், புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப்பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1,500 முதல் 2,000 முட்டைகளை குவியலாக இடுகிறது. பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்ளும். இளம்புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் வாயிலாக காற்றின் திசையில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் குருத்து மற்றும் முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும், நடு மற்றும் காம்பு பகுதிகளையும் அதிகம் சேதப்படுத்தக்கூடியது. இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நாக பசுபதி கூறியதாவது:-

    படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். உழவு செய்த பின், கடைசி உழவில், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி., சையாண்டரினிலிபுரோல் - 19.8 மற்றும் தியோமெத்தாக்சம் - 19.8 மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊடு பயிர், வரப்புப் பயிராக தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை பயறுகளை சாகுபடி செய்ய வேண்டும். தாய் அந்து பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை நிலத்தில் நிறுவ வேண்டும். பயிரின் 15 முதல் 20 நாட்கள் வளர்ச்சி நிலையில் குளோராண்ரடினிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது புளுபெண்டமைட் 480 எஸ்.சி., பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். பயிரின் 35 முதல் 45 நாட்கள் வளர்ச்சி நிலையில் மெட்டாரைசியும், அணி சோபிளே என்ற பூச்சிகளை தாக்கும் பூஞ்சையை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பிறகு எமாமெட்டின் பென்சோயாட் அல்லது நல்லூரான் அல்லது ஸ்பைனிடோரம் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.காலை அல்லது மாலையில் மட்டும் ஒட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், ஒரு முறை தெளித்த மருந்தை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி கைத்தெளிப்பான்களை கொண்டு செடியின் குருத்து பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    • ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது.

    உடுமலை: 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பி தண்ணீரில் கிடந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் இதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள் மழை நீரில் மூழ்கினால், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்னல் மற்றும் இடியின் போது டி.வி., கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. இடி, மின்னலின் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோகக்கம்பி வேலிகள், திறந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்ககூடாது. சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இயக்கும் போது உலர்ந்த, ரப்பர் பாய்களின் மீது நிற்க வேண்டும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங்கிகளாக பயன்படுத்த கூடாது. மேலும் மின் விபத்துக்கள் குறித்து 'மின்னகம்' 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 4-ந்தேதி நடக்கிறது
    • மாணவர்களிடம் கல்வி நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு வேலைவாய்ப்பு மையம் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வருகிற 4-ந்தேதி தனியார் நிறுவ னங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூடத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-

    ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், அரசினர் வேலை வாய்ப்பு மையம், ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் வருகிற 4-ந்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

    எனவே நீலகிரி கல்லூரிகளில் படித்து முடித்த மாணவ-மாணவிகள் மேற்கண்ட முகாமில் பங்கேற்க ஏதுவாக அந்தந்த கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் இளைஞர்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மேற்கண்ட முகாம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

    அங்கு குடிநீர் வசதி மற்றும் துப்புரவு பணிகளில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    ஊட்டி தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மண்டல வேலைவாய்ப்பு மைய இணை இயக்குநர் ஜோதி மணி, உதவி இயக்குநர் சாகுல்ஹமீது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சண்முகசிவா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஊழல் தடுப்பு வாரமாக கொண்டப்படுகிறது.
    • ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    திருப்பூர்,அக். 26-

    கல்லூரிகளில் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்ேததி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த தினத்தையொட்டி, ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தலைப்பின் கீழ் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கல்லூரிகளில் கடைபிடிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

    அதில், ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, இ மெயில், வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    • தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.

    குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சௌமியா, அரசு மருத்துவா் கலைச்செல்வன் ஆகியோா் பேசியதாவது:-

    குழந்தைகளின் முக்கிய உணவுப்பொருள் தாய்ப்பால். இது, குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வயிறு, குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தைகளின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிா்ப்புத் தன்மையை பெருக்குகிறது.பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, காது சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். 

    • கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
    • அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

    காங்கயம்:

    கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கரூா், திருச்சி, நாகப்பட்டினத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் சூலூா், பல்லடம், அவிநாசிபாளையம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, பரமத்தி ஆகிய ஊா்கள் உள்ளன.

    இந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளை கோவையில் பேருந்து நடத்துநா்கள் முதலில் ஏற்றுவதில்லை. தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகளையே முதலில் ஏற்றுகின்றனா். இதனால் கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் வடிவேல் என்பவா் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் கோவை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்பொது மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவையிலிருந்து குறிப்பிட்ட வழியாகச் செல்லும் பேருந்துகளில் பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள் மூலம் அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.
    • நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

    தாராபுரம்,ஜூலை. 5-

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.சின்னசாமி நகரவை மேல்நிலைப்ப ள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர் கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வையும், வழிகாட்டு தலையும் அளிப்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவு த்தேர்வு, கல்விக்கடன் அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வு களும் அதற்கான அணுகுமுறைகளும், இலவச பயிற்சி மையங்கள் போன்றவை குறித்த விபரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. அனைவரும் கட்டாயம் கல்லூரி படிப்பில் சேர வேண்டும். அதற்கு உங்களுக்கு ஏதாவது தடை இருப்பின் உடனடியாக எங்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். கல்லூரி காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் உயர்ந்த பொறுப்பிற்கு வரவேண்டும். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வேண்டும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் மாணவ,மாணவிகளாகிய நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கையேடுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் தென்மேற்கு பருவமழை மாதிரி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கொடுத்த கையேடுகளை வெளியிட்டனர். அதனைத்ெதாடர்ந்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தாராபுரம் வட்டம், சித்தாரவுத்த ன்பாளையம் ஊராட்சியில் பழங்குடியினர் நலம் - நரிக்குறவர் இன மக்களுக்கான கோட்ட அளவிலான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து நரிக்குறவர் இன மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்க ளை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு ஆலோசகர் (பாராதியார் பல்கலைக்கழகம்) மீனாட்சி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட சமூக நலஅலுவலர் ரஞ்சிதாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனித உடலின் தோலில் உள்ள சுரப்பிகள் வாயிலாக வேர்வையாக வெளியே தள்ளுகிறது.
    • ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடலின் இயக்கம் பாதிக்கப்படும்.

    குடிமங்கலம் :

    கோடை காலத்தில் வேகமாக பரவும் வைரஸ்களாலும், அதிகமாக தோன்றும் தூசுகளாலும், மரங்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத வெப்பத்தினாலும், உடல்நிலை பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், இயற்கையாகவே கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, மனித உடலின் தோலில் உள்ள சுரப்பிகள் வாயிலாக வேர்வையாக வெளியே தள்ளுகிறது. இதனால் உடல் சூடு சமநிலை அடைகிறது.கோடைகாலத்தில் வெறும் காலில் நடப்பது காலை 11மணியிலிருந்து, மாலை 4மணி வரை வெயிலில் இருப்பது, அதிகப்படியான சட்டைகளை அணிந்து நீண்ட நேரம் வெயிலில் சுற்றுவது, கட்டட பணியாளர்கள், கைவண்டியை இழுத்து கொண்டு நடந்து செல்லுதல் உள்ளிட்டவர்களின் உடலில் வெப்ப சமநிலை அடையாததால், அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடலின் இயக்கம் பாதிக்கப்படும்.

    இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். தர்பூசணி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்தலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது குறையும். தண்ணீர் வசதி இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கலாம். மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதல்ல. குறிப்பாக, கோடைகாலத்தில் அதிக கலோரி கொண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

    ஊறுகாய், உப்பு, சிவப்பு நிற இறைச்சி தவிர்க்க வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் யோகாசன முறை செய்வதால், உடலில் உள்ள வெப்பத்தை கணிசமாக வெளியேற்ற முடியும்.

    கோடைகாலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள் வெயிலில் அதிகமாக நடமாடுவதை தவிர்த்தல் வேண்டும்.இது போன்ற அறிவுரைகள் ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு மட்டுமே. சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்று கோடைகால நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

    • உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம்.
    • கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

     பல்லடம்:

    பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது.

    எனவே கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை பராமரித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு கால்நடைதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அரசு கால்நடை மருத்துவர் கூறியதாவது:-

    கால்நடைகளை வளர்ப்போர் மழை காலங்களில் பராமரிப்பு முறைகளில் சில மாற்றங்களை செய்து சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். அவைகளை ஆட்டு பட்டியிலேயே வைத்து உணவாக இலை, தழைகள், காய்ந்த சோளதட்டு உள்ளிட்டவற்றை கொடுக்கலாம். அனைத்து ஆடுகளுக்கும் பட்டியிலேயே வைத்து தீவனம் வழங்க முடியாத சூழ்நிலையில் குறைந்த பட்சம் சினை ஏற்பட்டுள்ள ஆடுகளுக்கும், பாலூட்டும் தாய் ஆடுகளுக்கும் மட்டும் தீவனம் தருவது அவசியம். மழைக்காலம் என்பதால் ஆடுகளின் குளம்புகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இதனை தவிர்க்க ஆடுகள் பட்டிக்குள் நுழையும் பகுதியில் ஆடுகளின் குளம்புகள் நனையும்படி பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை நிரப்பி வைத்திட வேண்டும்.

    ஆடுகள் தங்கும் ஆட்டுபட்டியை சுற்றி மழை நீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள்உருவாக வாய்ப்புகள் ஏற்படும். இவையே ஆடுகளில் நீல நாக்கு நோய் ஏறபடுத்தும் கிருமிகளை பரப்பும் இடைநிலை காரணிகளாகும். மாடுகளை போலவே ஆடுகளுக்கும் இப்பருவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்ய வேண்டும்.மாடுகளை பண்ணை அளவில் வைத்து வளர்ப்போர் மாட்டு கொட்டகைக்குள் மழை நீர் புகாதபடி பார்த்து கொள்ள வேண்டும். கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    சேறும் சகதியுமாக கொட்டகைக்குள் இருந்தால் மாடுகளின் உடல் நலத்தை பாதிப்பதோடு மாட்டின் பாலின் தரமும் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் கறவை மாடுகளுக்கு மழைக் காலங்களில் மடி வீக்க நோய் தாக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் மாடுகளிலிருந்து பால் கறப்பதற்கு முன்னர் மாட்டின் மடியையும், காம்புகளையும் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவி பின்னர் பால் கறக்க வேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது. மாட்டின் கன்றுகளுக்கு கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் தர வேண்டும். மாடுகளின் தீவனப் பொருட்களான வைக்கோல், கலப்பு தீவனங்கள் போன்றவைகளை மழை நீரிலிருந்து நனையாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைநீரில் இவை நனைவதால் பூஞ்சக்காளான் நச்சு ஏற்படலாம். எனவே பருவகாலங்களில் இதுபோன்ற சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு கால்நடைகளை பராமரித்து அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அவைகளை பாதுகாத்து கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.
    • ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

    திருப்பூர்:

    விலை மலிவாக கிடைக்கும் உரங்களில் யூரியா முதன்மையானது. இதற்கு மத்திய அரசு அதிகளவில் மானியம் வழங்குகிறது. ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.

    விலை மலிவாக கிடைப்பதால் பல ஆண்டுகளாக சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

    சில ஆண்டுகள் முன் இதற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்பொழுது ஒரு மாவட்டத்தில் உள்ள வினியோகஸ்தர் அந்த மாவட்டத்திற்குள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். வேறு மாவட்டத்திற்கு விற்க முடியாது. உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் வாங்கப்படுகிறது.

    அவர்களது ஓடிபி எண் கொடுத்து உரம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. யூரியா அதிகம் வாங்கினால் அவர்கள் வயல்கள் ஆய்வு செய்ய ப்படுகிறது. ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

    இதனால் கள்ளச் சந்தையில் விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் உர மானியத்திற்காக அரசு செலவிடும் தொகை குறைந்துள்ளது. இருந்த போதிலும் விலை மலிவாக கிடைப்பதால் யூரியாவை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். யூரியா அதிகம் இடுவதால் நன்மைகளை விட கெடுதலே அதிகம். யூரியாவை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    இது குறித்து பொங்கலுார் வேளாண் துறை உதவி இயக்குனர் பொம்முராஜ் கூறியதாவது:-

    விவசாயிகள் பெயரில் மட்டுமே ரசீது போட முடியும். முறைகேடு கண்டறியப்பட்டால் லைசென்ஸ் ரத்தாகிவிடும். விற்பனை சென்னையில் இருந்தே கண்காணிக்கப்படுகிறது. பயிருக்கு பயிர் யூரியா போடும் அளவு மாறுபடும்.சோளத்துக்கு 10 கிலோ போடலாம். 20 நாட்களுக்கு ஒரு முறை சிறிது சிறிதாக போட்டால் வீணாகாது. மேலும், ஆவியாகாது. யூரியா அதிகம் இடுவதால் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழு உரத்தை சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும் என ேவளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    கலைஞர் திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள 60ம் குறுவை சாகுபடி பயிர்களை பார்வையிட்டார்.

    பின்னர் வயல்வரப்புகளில் விதைப்பதற்காக துவரை விதைகளை விநியோகம் செய்தார். வயல் வரப்புகளில் பயறு வகைகள் பயிரிடு வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

    அட்மா திட்டத்தில் தொழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்ட உதவி இயக்குநர் தொழு உரத்தை அப்படியே விதைக்காமல் சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும். அதனால் மண் வளம் காக்கப்படும். வேர்கள் செழித்து வளரும் என்றார்.

    பின்னர் வளநாடு கிராமத்தில் பிரதம மந்திரி யின் நிதி திட்டத்தில் நடை பெற்று வரும் கே.ஒய்.சி. பணிகளை ஆய்வு செய்தார். பயனாளிகள் தங்கள் கைபேசியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    விவசாயிகள் கே.ஒய்.சி. செய்தால் மட்டுமே அதன் பயன்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர்வேளாண்மை உதவி இயக்குநர் கேசவ ராமன், உதவி வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×