search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interacted"

    பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர்களை பொய் எந்திரங்கள் என வர்ணித்தார். #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கலந்துரையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    அந்த வகையில் அவர் 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர், கட்சித் தொண்டர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அவரிடம் ஒரு தொண்டர், “நீங்கள் எப்போதெல்லாம் இந்தியாவை காப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறீர்களோ, அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சேர்கின்றனவே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், “எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் எதிர்மறையான வேலைகளால், நாட்டில் நடைபெறுகிற நற்பணிகளை அங்கீகரிக்காத தன்மையினால், ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதால் மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள்” என்று கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, “சில எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்லும் எந்திரங்களாக உள்ளனர். அவர்கள் வாயைத் திறந்தால் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளைப் போல பொய்களை சுடுகிறார்கள். ஆனால் நீங்கள் மக்களிடம் போய் உண்மையான தகவல்களை சொல்லி, அவர்களின் பொய்களை கலையுங்கள்” என்று குறிப்பிட்டார்.

    சில எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரே நாளிலே பல மாதிரி வேஷம் போடுகிறார்கள் எனவும் பிரதமர் மோடி சாடினார்.

    “அதே நேரத்தில் மக்கள் உண்மைகளை அறிவார்கள். நமது கட்சித் தொண்டர்களில் ஒருவர், 100 பேரிடம் போய்ப் பேசினால், அவரது நம்பிக்கை பல மடங்கு வளரும்” என குறிப்பிட்டார்.

    மத்திய அரசு, பாரதீய ஜனதா கட்சி ஆளுகிற மாநில அரசுகள் பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிடத் தவறவில்லை.

    இதுபற்றி அவர் கூற வந்தபோது, “நாங்கள் எல்லோரும் நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியோ குடும்ப ஆட்சியைப் பற்றித்தான் கவலை கொள்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் மகன்களுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என கூறினார். 
    ×