search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interval"

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் 20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. #Petrol #Diesel #Chidambaram
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினசரி அடிப்படையில் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது.

    ஆனாலும் கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 20 நாட்களாக உயர்த்தவில்லை. கடந்த மாதம் 24-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.



    கடந்த 12-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் கடுமையாக உயர்த்தின. நகரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலை 17 மற்றும் 18 காசுகள் விலை உயர்த்தப்பட்டது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.74.80 ஆக இருந்தது. 20 நாட்களுக்கு முந்தை விலை ரூ.74.63 ஆகும்.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.61க்கு விற்பனை செய்யப்பட்டது. இது முன்பு ரூ.77.43 ஆக இருந்தது. அதாவது சென்னையில் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்தது.

    கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.50 ஆகவும்(முந்தைய விலை ரூ.77.32), மும்பையில் ரூ.82.65 ஆகவும் (முந்தைய விலை ரூ.82.48) இருந்தது.

    இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.66.14 ஆகும். இது ஏப்ரல் 24-ந்தேதி ரூ.65.93 ஆக இருந்தது. அதாவது 21 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.79 ஆகும். முந்தைய விலை ரூ.69.56. சென்னையில் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    மும்பையில் நேற்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.43 ஆகவும்(முந்தைய விலை ரூ.70.20), கொல்கத்தாவில் ரூ.68.68 ஆகவும்(முந்தைய விலை ரூ.68.63) இருந்தது.

    டெல்லியில் பெட்ரோல் விலை 56 மாதங்களில் இல்லாத அளவிற்கும், டீசல் விலை இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை தினசரி விலை மாற்றம் கொண்டு வரப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் 46 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 56 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பார்த்தால், அன்றிலிருந்து நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 12 ரூபாய் 15 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 13 ரூபாய் 66 காசுகளும் அதிகரித்துள்ளது. தினசரி விலை மாற்றும் செய்து இன்னும் ஓர் ஆண்டு நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதுபற்றி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், “நாம் பழைய நிலைக்கு மீண்டும் செல்கிறோம். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் டீசல், பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர் மீது சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இடைவேளை விடப்பட்டு இருந்தது” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.  #Petrol #Diesel #Chidambaram 
    ×