search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islamic Laws"

    • சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
    • அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

     

    இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

    சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார். 

     

    முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது. 

     

    ×