என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Japan Quake"

    ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புதையுண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 16 ஆக அதிகரித்தது. #Japanquake #Hokkaidoquake
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் நேற்று அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.



    அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    விமான சேவைகள், ரெயில் சேவைகள், புல்லட் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டது.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Japanquake  #Hokkaidoquake

    ×