search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery scam"

    • நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
    • மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
    • மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 42). இவர் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு தனக்கு சொந்தமான 246 பவுன் தங்கநகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவலால் வியாபாரம் சரியாக நடக்கவில்லை.

    இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் திணறி வந்துள்ளார். உடனே அவர் பாளை கே.டி.சி.நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் சென்று, நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

    உடனே கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனாலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.

    ஆனால் கோமதிநாயகம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர் ரமேஷ்குமாரை அழைத்து, கொடுத்த பணத்தை வாங்கி கொள்ளவேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் நடத்திய விசாரணையில், 246 பவுன் நகையை வங்கியில் இருந்து திருப்பி வைத்துக்கொண்டு அடகு வைத்த தொகையை மட்டும் திருப்பி தருவோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகோதரர் மிரட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை மோசடி செய்து அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விட்டுள்ளார்.

    அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்துகேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    நேற்று கேத்தனூரில் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகம் தரப்பில் மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர் என தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்குவந்தது. இதையடுத்து நேற்று மாலை கேத்தனூர் வங்கிக் கிளையில், பாரத் ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஸ்வரி, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்ட அதிகாரிகள், வங்கி நகை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நகை மீட்பு இயக்கத்தினர், விவசாயிகள்பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நகை மோசடியால் பாதிக்கப்பட்ட 584 பேருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டது. வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்களின் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றும், வங்கியில் இருந்து நகை திருப்பி எடுத்தவர்களுக்கு, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். 31ந் தேதி திங்கள்கிழமை முதல் டோக்கன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்தொகையை பெற ஆதார் கார்டு, இரண்டு போட்டோ, வங்கி ரசீது நகல் கொண்டு வர வேண்டும் என்று வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திற்கும், பல்லடம் வருவாய் துறைக்கும், காவல் துறைக்கும் கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

    • வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

    நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    ×