search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry cheating"

    • கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டியன் (வயது 32). இவர் திருப்பூர் கரட்டாங்காடு, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் (25), திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (26) ஆகியோர் ஊழியராக வேலை செய்து வந்தனர். அருண்குமாரின் நண்பர் பொள்ளாச்சியை சேர்ந்த பிரதீப் (27).

    சுரேஷ்பாண்டியன் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடகு கடையில் உள்ள இருப்பு நகைகள், அடகு விவரங்களை சரிபார்ப்பது வழக்கம். அதன்படி கரட்டாங்காடு நகை அடகு கடையில் நகை இருப்பு விவரங்களை சுரேஷ்பாண்டியன் சரிபார்த்தார். இதில் அடகு வைத்த ரசீதில் குறிப்பிட்ட பணத்தை விட நகை இருப்பு குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கடை ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். இதில் அவர்கள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இவ்வாறு கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரூ.80 லட்சத்தை முறைகேடு செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சுரேஷ் பாண்டியன் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். துணை போலீஸ் கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பத்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், காளிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அருண்குமார், சக்திவேல், பிரதீப் ஆகிய 3 பேரை தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நகை அடகு கடையில் வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைத்தது போல் போலியான ரசீது தயாரித்து நகையை வைக்காமலேயே பணத்தை மட்டும் எடுத்து செலவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சுரேஷ் பாண்டியன் கணக்கு பார்க்கும்போது மட்டும், ரசீதுக்கு ஏற்ப நகைகளை, மற்றொரு கிளையான ராக்கியாபாளையம் நகை அடகு கடையில் இருந்து கொண்டு வந்து சரிகட்டியுள்ளனர். மேலும் பிரதீப்பும் கொஞ்சம் நகையை கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு 2020-ம் ஆண்டு முதல் மொத்தம் ரூ.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபிநாத் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் சுரேஷ்பாண்டியனுக்கு சொந்தமான நல்லூர் கிளை நகை அடகுக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் 2.50 கிலோ எடையுள்ள 304 பவுன் நகைகளை இங்கிருந்து வேறு ஒரு நகைக்கடையில் அடகு வைத்து ரூ.1.20 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. கைதான 4 பேரும் நகை மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கடந்த தீபாவளி அன்று 4 பேரும் கேரளாவுக்கு சென்றதுடன் அங்குள்ள ரிசார்ட்டில் அழகிகளுடன் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு அழகிகளுக்கும் தினசரி ரூ.20ஆயிரம் கொடுத்துள்ளனர். ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர். மேலும் சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்துள்ளனர். கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழகிகளுடன் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கைதான ஒருவர் தனது கள்ளக்காதலிக்கு சொந்த செலவில் மருந்து கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார்.

    கைதான கோபிநாத் ஆடிட்டர்கள் நகைகடைக்கு ஆய்வு செய்ய வருவதை அறிந்ததும் மோசடி செய்த நகைகளுக்கு பதில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் கடையில் இருந்து நகைகளை வாங்கி கொண்டு வந்து வைத்து கணக்கு காட்டியுள்ளார். இப்படியாக தொடர்ந்து கோபிநாத் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் நகைகளை அடகு வைத்த வாடி க்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது நகைகளை மீட்டு கொடுக்குமாறு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமங்கலத்தில் போலி நகை கொடுத்து நகைக்கடையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம்- உசிலம் பட்டி சாலையில், ராதா கிருஷ்ணன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இங்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்தனர். பழைய நகையை கொடுத்து புதிய கே.டி.எம். நகை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    கடை ஊழியர்கள் புதிய நகைகளை காட்டினர். பழைய நகைகளை பெற்றுக் கொண்டு புதிய நகைகளை கொடுத்தனர். அதன் பிறகு பழைய நகைகளை சோதித்த போது, அது போலி நகை என தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள், பல்வேறு இடங்களில் இது போன்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மதுரை சோலையழகுபுரம் கணேசன் மனைவி மீனாட்சி, ஜெய்ஹிந்துபுரம் ஆறுமுகம் மகன் சசிகுமார் (40) ஆகியோர் தான் மோசடியில் ஈடுபட்டவர்கள் என தெரியவர, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
    கிருஷ்ணகிரியில் உள்ள வங்கியில் கவரிங் நகைகளை வைத்து பெண் ஊழியர் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ஒரு பெண் உள்ளார். இவர் நகையை தரம்பார்த்து விட்டு அனுமதி கொடுத்த பிறகு தான் நகை கடன் கொடுப்பார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண் ஊழியர் சிலரது துணையுடன் கவரிங் நகைகளை தங்க நகை என்று கூறி அடகு வைத்து பணம் மோசடி செய்து உள்ளார். இதேபோல வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளையும் மாற்றி அதற்கு பதிலாக கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து உள்ளார்.

    சமீபத்தில் வங்கி லாக்கரை மானேஜர் திறந்து பார்த்தபோது நகைகள் கருத்திருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து இது குறித்து அந்த பெண் ஊழியரிடம் கேட்டார். அப்போது தான் கவரிங் நகைகளை தங்க நகை என்று கூறி அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு அந்த பெண் ஊழியரின் கணவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசில் எதுவும் புகார் செய்யவில்லை. தற்போது அந்த வங்கியில் நகை கடன் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நகைக்கடன் வாங்கியவர்கள் தொடர்பான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆய்வு பணி முடிந்த பிறகு தான் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பது தெரியவரும். அதன் பிறகு போலீசில் புகார் கொடுத்து அந்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க மானேஜர் திட்டமிட்டுள்ளார்.
    ×