search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judge Pugazhendhi"

    சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக புகழேந்தி இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். #MadrasHC #Pugazhendhi
    சென்னை:

    தமிழக கூடுதல் அட்வகேட் ஜெனரலாக, ஐகோர்ட்டு மதுரை கிளையில் பணியாற்றியவர் புகழேந்தி. இவரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக் கொண்டது.

    இதையடுத்து, புகழேந்தியை, ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பி.புகழேந்தி இன்று காலையில் பதவி ஏற்றார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், புதிய நீதிபதி புகழேந்தியை வரவேற்று பேசினார்.

    அவரை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியே‌ஷன் செயலாளர் கமலநாதன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி உள்பட பலர் வரவேற்று பேசினர்.

    இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதி புகழேந்தி பேசினார். அப்போது, தன்னை 2012ம் ஆண்டே ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பானுமதி பரிந்துரை செய்தார் என்றும் அதை தொடர்ந்து பல நீதிபதிகள் இப்பதவிக்கு தன் பெயரை பரிந்துரைத்தனர் என்றும் அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நீதிபதி புகழேந்தி பேசினார்.


    நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு நீதிபதிகள், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் நடராஜன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அரவிந்த் பாண்டியன், நர்மதா சம்பத், அரசு பிளீடர் ஜெய பிரகாஷ் நாராயணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வக்கீலும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ். இன்பதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அதில் தலைமை நீதிபதி உள்பட 59 நீதிபதிகள் உள்ளனர். தற்போது நீதிபதி புகழேந்தி பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 15 ஆக உள்ளது. #MadrasHC #Pugazhendhi
    ×