search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junk foods"

    உங்கள் குழந்தைகளை சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
    வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

    வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.
    குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

    ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.

    அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.

    சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.



    அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.

    மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.

    அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

    குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.
    ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரசனை சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது.

    அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள் குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன. இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச் சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன.

    கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது.



    அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

    எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட் விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும்.

    சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க வேண்டும். 
    நொறுக்குத் தீனிகளை நாம் விரும்பும் காரணம் என்ன? அவைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.
    ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை என்பது பற்றியும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் எவை என்பது பற்றியும் நமக்குத் தெரியும். ஆனாலும், நொறுக்குத் தீனிகளை நாம் விரும்பும் காரணம் என்ன? அவைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.

    புரதச்சத்துக்கள் நம் உடலின் கட்டுமானத்துக்கும் இயக்கத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த புரதச்சத்துப் பற்றாக்குறையும் நொறுக்குத் தீனிகள் எடுத்துக் கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    பொருளாதார வசதி மிக்கவர்களும் இப்போது பட்டினியோடுதான் உறங்கச் செல்கிறார்கள். ருசியான, விதவிதமான உணவுகளை அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டாலும் போதுமான புரதச்சத்தினை அவர்கள் தங்கள் உணவின் மூலம் பெற்றுக் கொள்வதில்லை.

    இதை மறைமுகமான பட்டினி(Hidden hunger) என்று குறிப்பிடலாம். இதனால், ரத்தசோகை, கல்லீரல் பாதிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய உடல் நலக்குறைபாடுகள் வரும். மேலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் கெடும். இப்படி போதுமான புரதச்சத்து கிடைக்காத காரணத்தால்தான் பசி உணர்வு ஏற்பட்டு, ஏதேனும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இதை மாற்றியும் சொல்லலாம். அதிக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதால் போதுமான புரதச்சத்தும் கிடைப்பதில்லை. எனவே, புரதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து போதுமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏனெனில், நம்முடைய உடல்நலத்திற்கும், இயக்கத்திற்கும் தேவையான சத்துக்களில் புரதச்சத்து தவிர்க்க முடியாத இடம்பெறுகிறது. துவரை, காராமணி, பட்டாணி போன்ற சைவ உணவிலும், முட்டை, கோழி இறைச்சி, மீன் முதலான அசைவ உணவிலும் நமக்குத் தேவையான அளவு கிடைக்கிறது. அடுத்தது பால், தயிர் ஆகியவற்றில் இருந்தும் நமக்குத் தேவையான புரதச்சத்தினைப் பெற்றுக் கொள்கிறோம். காய்கறிகளிலும் புரத சத்தினை ஓரளவு பெற்றுக் கொள்கிறோம்.
    பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.
    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.

    ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!

    * PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.



    * உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!

    * தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    * பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..

    * குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
    உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
    குழந்தை பராமரிப்பு ஒரு கலை என்பார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் பெரும்பாலும் அந்த கலையில் வல்லவர்களாக இருப்பதில்லை.

    குறிப்பாக குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்க்க வேண்டிய விஷயத்தில் நாகரிக உலகின் பெற்றோர் பலரும் தோற்றும் விடுகிறார்கள். காரணம் நிகழ்கால உலகம் ஆரோக்கியத்தை விட நாவின் கோரிக்கைக்கு அடிபணிந்து ருசிக்குத் தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஆனால் பழையக் காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியம் நிறைந்தவர்களாக பெற்றோர் வளர்த்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுத்தனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவுகளை பார்த்து பார்த்து தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். உடலுக்கு வலிமை தரும் கம்பு, சோளம், கேப்பை மற்றும் பயறு வகைகளை அன்றாட உணவுகளில் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணினர்.

    அதிலும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். தாங்கள் பெற்ற ஆரோக்கியத்தை குழந்தைகளும் பெற அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் ஏற்பட்ட தொய்வு, நிகழ்கால தாய்மார்கள் பலருக்கும் ஆரோக்கியத்தை அட்சய பாத்திரமாய் அள்ளித்தரும் நம் பாரம்பரிய உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

    நவநாகரிக உலக பெற்றோர் பாக்கெட்டில் அடைத்த ‘ரெடிமேட்’ உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தான் பெரிதும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இல்லையென்றாலும், குழந்தைகள் அடம்பிடித்து கேட்டு நொறுக்குத்தீனிகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு விபரீதமானதாக இருக்கிறது.

    குழந்தைகளின் எடை வயதுக்கும், உயரத்துக்கும் தொடர்பற்றதாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பலரும் உடல் பருமனால் பெரிதும் அவதிபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து, நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம்.

    அதிலும் குறிப்பாக, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தினமும் உணவு உண்பதில் ஆர்வம் காட்டுவதை விட செயற்கை ரசாயன கலவைகளோடு தயாரித்து சந்தைப்படுத்தப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தம், கற்பதில் குறைபாடு போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கைவிடுக்கிறது.



    இன்றைய குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை விரும்புவதற்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சிப்ஸ், பர்க்கர், பீட்சா, ரசாயன வகை குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்கள் வீடுகளில் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளை தூண்டுகிறது.

    ஒரு ஆய்வு தரும் தகவல்படி, உலகம் முழுவதும் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்தில் டி.வி., இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் (கிட்டத்தட்ட 2 கோடி முறை) அவற்றை ருசித்து பார்க்கும் ஆவல் அவர்களின் மனதில் உதிக்கிறது.

    அதிலும், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மாதத்தில் சுமார் 21 நாட்கள் வரை நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை காண அதிகம் ஆர்வம்காட்டுகிறார்களாம். இதுவும் நொறுக்குத்தீனிகளை அவர்கள் அதிகம் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கிறது.

    நொறுக்குத்தீனிகளின் விபரீதம் உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அதுபோன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை தடை செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.

    இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை முக்கியம்தான். ஆனால் நாகரிக உலகின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அதை காட்டிலும் முக்கியமானது.

    நாம் உணவு விஷயத்தில் முன்னோக்கி செல்வதை காட்டிலும் பின்னோக்கி செல்வது சாலச்சிறந்தது. நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பாரம்பரிய உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க முன்வாருங்கள். அப்போதுதான் நம் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மனிதனின் ஆரோக்கியம் தான் படிப்பு, வேலை, விளையாட்டு என அத்தனை அம்சங்களுக்குமான அடிப்படை.

    ஆக, உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் இனி பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.

    -மாசு 
    ×