search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalikambal"

    • யாது மாகி நின்றாய் - காளீ! எங்கும் நீநி றைந்தாய்
    • சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்

    பாரதியார் சென்னை, பிராட்வேயில் பணிபுரிந்தபோது அருகிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாக இருந்தது

    அப்போது காளிகாம்பாள் முன் மெய்மறந்து நின்று பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள், `யாதுமாகி நின்றாய் காளீ' என்னும் இப்பாடல் குறிப்பிடத்தக்கது.

    காளி ஸ்தோத்திரம்

    யாது மாகி நின்றாய் - காளீ!

    எங்கும் நீநி றைந்தாய்

    தீது நன்மை யெல்லாம் - நின்றவன்

    செயல்க ளன்றி யில்லை

    போதும் இங்கு மாந்தர் - வாழும்

    பொய்மை வாழ்க்கை யெல்லாம்

    ஆதி சக்தி, தாயே! - என்மீ

    தருள் புரிந்து காப்பாய்!

    எந்த நாளும் நின்மேல் - தாயே!

    இசைகள் பாடி வாழ்வேன்;

    கந்தனைப் பயந்தாய் - தாயே

    கருணை வெள்ள மானாய்!

    மந்தமாரு தத்தில் - வானில்

    மலையி னுச்சி மீதில்

    சிந்தை யெங்கு செல்லும் - அங்குன்

    செம்மை தோன்று மன்றோ!

    கர்ம யோக மொன்றே - உலகில்

    காக்கு மென்னும் வேதம்

    தர்மநீதி சிறிதும் - அங்கே

    தவற லென்ப தின்றி

    மர்ம மான பொருளாம் - நின்றன்

    மலரடிக் கண் நெஞ்சம்

    செம்மையுற்று நாளும் - சேர்ந்தே

    தேசு கூட வேண்டும்.

    என்ற னுள்ள வெளியில் - ஞானத்

    திரவி யேற வேண்டும்;

    குன்ற மொத்த தோளும் - மேருக்

    கோல மொத்த வடிவும்

    நன்றை நாடு முனமு - நீயெந்

    நாளு மீதல் வேண்டும்;

    ஒன்றைவிட்டு மற்றோர் - துயரில்

    உழலும் நெஞ்சம் வேண்டா

    வான கத்தி னொளியைக் - கண்டே

    மன மகிழ்ச்சி பொங்கி

    யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி

    எந்த நாளும் வாழ்வேன்;

    ஞான மொத்த தம்மா! - உவமை

    நானு ரைக்கொ னாதாம்!

    வான கத்தி னொளியின் - அழகை

    வாழ்த்து மாறி யாதோ?

    ஞாயி றென்ற கோளம் - தருமோர்

    நல்ல பெரொ ளிக்கே

    தேய மீதோர் உவமை - எவரே

    தேடியோத வல்லார்?

    வாயி னிக்கும் அம்மா - அழகாம்

    மதியின் இன்ப ஒளியை

    நேயமோ டுரைத்தால் - ஆங்கே

    நெஞ்சி ளக்க மெய்தும்

    காளி மீது நெஞ்சம் - என்றும்

    கலந்து நிற்க வேண்டும்;

    வேளை யத்த விறலும் - பாரில்

    வேந்த ரேத்து புகழும்

    யாளி யத்த வலியும் - என்றும்

    இன்பம் நிற்கும் மனமும்

    வாழி யீதல் வேண்டும் - அன்னாய்!

    வாழ்க நின்றன் அருளே.

    சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும்

    சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும்

    சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்

    சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும்

    என்ற பாரதியார் வாக்கிற்கிணங்க சக்தி சக்தி என்று சொல்லி சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    ஸ்ரீ காளிகாம்பாள் துதி -பொன்மணி வைரமுத்து

    ஓம்காளி ஓம் காளி ஓம் காளி ஓம்

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம்காளி)

    உலகையாளும் ஓங்காரி ஓம் காளி ஓம்

    உனதுபாதம் வேண்டும் வேண்டும் ஓம் சக்தி ஓம்

    திசைகளெங்கும் நடனமாடும் ஓம் காளி ஓம்

    தீயசக்தி மாயவேண்டும் ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    கரியமேனி கொண்டதாயே ஓம் காளி ஓம்

    கண்திறந்து பார்க்கவேண்டும் ஓம் சக்தி ஓம்

    அரியகாட்சி உந்தன்காட்சி ஓம் காளி ஓம்

    அண்டமெங்கும் உந்தன் ஆட்சி ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    ஜதிகளிட்டு ஆடுகின்ற ஓம் காளி ஓம்

    ஜயமளித்து பயமொழிக்கும் ஓம் சக்தி ஓம்

    தகதகத்து ஆடுகின்ற ஓம் காளி ஓம்

    பகைமுடித்து வரமளிக்கும் ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    பத்ரகாளி ருத்ரகாளி ஓம் காளி ஓம்

    பக்தருக்கு சாந்தகாளி ஓம் சக்தி ஓம்

    சத்யகாளி நித்யகாளி ஓம் காளி ஓம்

    சக்தியூட்டி முக்திகாட்டு ஓம் சக்திஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    வேண்டுதலை சொல்லுங்கள் -கவிக்குயில் விசாலி மனோகர்

    விளக்கேற்றி வைக்கையிலே வீடுதேடி வந்தவளே

    வீடுவந்து சௌந்தர்யம் கோடி கோடி தந்தவளே

    உனக்கென்ற ஈடுஇணை உலகினிலே இல்லையடி

    ஒருகோடி பிறப்பெனிலும் உனக்கே நான் பிள்ளையடி

    யார்தடுத்த போதிலும்உன் சக்தியது குறைவதில்லை

    போர்மூளும் போதிலும் நின் பக்கபலம் மறைவதில்லை

    ஆதிசக்தி அன்னையிடம் அருள்கூர்ந்து வேண்டியபின்

    பாதிமனம் தேவையில்லை பார்த்தருளுவாள் காளிகாம்பாள்

    என்னவரம் வேண்டுமென்று இப்பொழுதே கேட்டுவிட்டாள்

    முழுமனதாய் வழங்குதற்கு முன்வருவாள் காளிகாம்பாள்

    சென்னபுரி வாழுகின்ற காளியிடம் வேண்டுதலை

    ஓரிருநாள் சொல்லுங்கள், ஒருகோடி வெல்லுங்கள்.

    • கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கொல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின.
    • சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாக காண்கிறோம்.

    கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின. மும்பாதேவியின் பெயரால் மும்பையும், காளியின் பெயரால் கல்கத்தாவும், சென்னம்மன் பெயரால் சென்னப்பட்டினமும் விளங்குகின்றன.

    கி.பி. 17-ம் நூற்றாண்டில் வழங்கிய `மராட்டா டவுன்' என்பதே இன்றுள்ள முத்தியால்பேட்டையும், பவழக் காரத் தெருவுமாகும். சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாகத் காண்கிறோம்.

    கி.பி. 1639-ல் ஆங்கிலேயர் விலைக்கு வாங்கிய சென்னக் குப்பம், வடவாறு குப்பம், மதராஸ் குப்பம். இவைகளையடுத்த நெய்தல் நிலங்கள் யாவும் யாருமற்ற காடுகளாக இருந்தன. இக்காட்டினுள் சிறு புதர்களை அழித்துக் குறும்பர்கள் பூந்தமல்லி வரையில் களிமண் கோட்டைகள் கட்டி வசித்தனர்.

    இந்நிலப்பகுதியை நோ மேன்ஸ் லேண்ட் என ஆங்கிலேயர் தம் குறிப்பில் கூறியுள்ளனர்.

    கடற்கரைக் குப்பங்களில் பட்டினவர் வசித்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய- கட்டு மரங்களையும், துடுப்புகளையும், படகுகளையும், பாய்மரங்களையும், நங்கூரங்களையும் செய்து தர 5 தொழிலாளர்கள் சென்னம்மன் கோவில் மாட வீதிகளில் வாழ்ந்தனர்.

    5 தொழிலாளர்களை `பஞ்ச புத்திரர்' என்றும் `விசுவகருமர்' என்றும் கூறினர். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தம் குல தெய்வமாக விசுவ கருமர்கள் தாமே பூசித்துப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள்.

    `சென்ன' - என்னும் சொல்லிற்கு - முருகு, அழகு, இளமை, வலிமை, கம்பீரம் எனப் பல பொருள் உண்டு.

    கடவுள் பெயரையே குழந்தைகளுக்கு இடும் வழக்கம் அன்றும் இன்றும் என்றும் உள்ளது. சென்னப்ப நாய்க் கனுக்கும் அவனது தங்கை சென்னம்மாவுக்கும் பெயரிடக் காரணமாயிருந்தவள் சென்னைக் குப்பத்தின் காளியம்மனே.

    இக்காளியம்மனுக்கு பட்டின வரும், விசுவகர்மர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி `சென்னம்மன்' ஆயினாள்.

    புராணங்களில் சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகாம்பாளை `நெய்தல் நிலக்காமாட்சி' என்று கூறப்பட்டுள்ளது.

    கேட்ட வரங்கொடுக்கும் தேவியாக விளங்கியதால்- நெய்தல் நிலக் காமாட்சியைச் செல்வரும், வறியவரும், கல்லாரும் கற்றாரும `சென்னம்மனை' வணங்கிச் சென்றார்கள்.

    இக்குப்பத்தின் தேவியருளால் பிறந்த ஒரு செல்விக்கு `சென்னம்மா' என்று பெயர் அச்சென்னம்மா கீழ்த்திருப்பதியில் கோவில் திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகின்றது.

    சென்ன பட்டினம் காவிரிப்புகும் பட்டினம் போன்று சங்க காலப் பட்டினமாகும். பழைய கற்கால ஆயுதங்களும் பொருட்களும் சென்னை கிண்டியருகே அரசினரால் கண்டெடுக்கப்பட்டது.

    சென்னம்மனுக்குச் சார்த்தும் சிவப்பு புடவை திருவிழா காலங்களில் ஊர்வலத்துக்காகக் காளிக்கு கட்டும் ஒரு வகை ஆடையைக் குறிப்பதே சென்னை எனும் சொல்.

    `சென்னை' `கூறை நாடு' வாங்கி வந்தேன் எனில் இடவாகு பெயராக அவ்விடங்களில் குறும்பரால் நெய்த துணி களையே குறிக்கும்.

    `சென்னை' ஆடைகளையும்- புடவைகளையும் நெய்து விற்கவே காஞ்சியில் இருந்தும் வாலாஜாவில் இருந்தும் நெசவாளர்களைச் சிந்தாதிரிப்பேட்டையில் குடியேற்றினர் ஆங்கிலேயர். இன்றும் அன்று வந்த பட்டு நூற்காரர் எனும் இனத்தவரை சிந்தாதிரிப்பேட்டையில் காணலாம்.

    பேரிச் செட்டி மார் தம் சரக்குகளை விற்க பேரிகை (சென்னை) கொட்டி மக்களை அழைப்பர். வேலூரில் பேரிகாளிகாம்பாள் கோவில் பேரிப்பேட்டை விசுவ கருமர் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

    காளி கோவில் விழா வினையும், கோவில் மூர்த்தியின் புறப்பாட்டினையும் அறிவிக்கும் டமாரத்தைச் சென்னை என்றே கூறினார்கள் பக்தர்.

    சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகோவிலை ஆங்கிலேயர்

    1. கல்யாண டெம்பிள்

    2. கவுளியான பகோடா

    3. காரணேஸ்வரி டெம்பிள்

    4. காமீஸ்வரி பகோடா என்றும் அழைத்தனர்.

    சென்னம்மாள்- அழகான அம்மை

    சென்ன புரி- அழகான கோட்டை

    இத்தகைய எடுத்துக் காட்டுகள் மூலம் சென்னை மாநருக்கு பெயர் கொடுத்தது காளிகாம்பாள் என்பது உறுதியாகிறது.

    காளிகாம்பாள் தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.
    சென்னையில் அம்பிகை வீற்றிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தலங்கள் உள்ளன. அவற்றுள் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் தலம் தனித்துவம் கொண்டது. சென்னை மாநகருக்கு பெயர் தந்த இந்த அம்மன், இத்தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.

    கருணை தெய்வமான இவள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே ‘காளி’ என்று சொல்வார்கள். ஆனால், அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.

    ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

    அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமே ஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். காளிகாம்பாள் வரப்ரதாயினி. வேத நாதமாய், சுக வாரிதியாய், ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.

    என்னே அவளின் அழகு! என்னே அவளின் கருணை! என்னே அவளின் அன்பு! என்னே அவளின் பரிவு! என்னே அவளின் அரிய சாந்தம்! என்னே அவளின் பிரகாசம்! ஆகா! சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆம், காளிகாம்பாளை நேரில் தரிசித்து உள்ளம் உருகி நின்று அவளது கருணையை அனுபவித்தவர்களுக்கே அது விளங்கும். புரியும்!! ஆம்! உண்மையில் இவள் காளி இல்லை! கருணை உள்ளம் கொண்ட தாய்.

    உண்மையில் கொடுமைகளை அழித்து நல்லவர்களை காக்கும் பொருட்டு அன்னை எடுத்து அவதாரமே காளிகாம்பாள் திருஅவதாரம். காலனையே விரட்டுவதனால் அவள் ‘காளி’ என பெயர் பெற்றாள். அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞான ஒளியை ஏற்றும் பரிபூரண ஞானமாகிய ஆனந்த ரூபிணியே ஸ்ரீகாளிகாம்பாள்.

    அன்னை போகங்களை அருளும் காலத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியாகவும், புவனேஸ்வரியாகவும் காட்சி தந்து இகபர சவுபாக்கியங்களை நல்குகின்றாள். அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலைநாட்ட வேண்டும் பொழுது அவளே தர்ம சம்வர்த்தினியாக, ஸ்ரீதுர்க்கையாக மாறுகின்றாள். சும்பன், நிசும்பன், மகிஷன் போன்றவர்களை அழித்து தர்மங்களை நிலைநிறுத்தி நல்லவர்களைக் காக்கின்றாள். உலக வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை-காளிகாம்பாள் ஆவாள்.

    அன்னை காளிகாம்பாளினாலேயே நம் மாநகருக்கு சென்னை என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி நாளில் அன்னை காளிகாம்பாளைச் சென்னம்மன் என்ற பெயரால் போற்றி அழைத்து வந்தனர். அன்னைக்குச் சென்னம்மன் என்ற பெயர் ஏற்பட்டது போன்றே கமடேசுவரருக்கும் சென்னப்பன் என்ற பெயர் வழங்கியுள்ளது. சென்னம்மன் என்ற அன்னையின் பெயரே மாநகருக்கும் சென்னை என்று அமைந்துள்ளது.

    அன்னை காளிகாம்பாளுக்கு அட்சாசொரூபிணி என்ற பெயரும், கோட்டையம்மன் என்ற பெயரும் உண்டு. ஒரு காலத்தில் அன்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோவில் கொண்டு விளங்கிய காரணத்தால் கோட்டையம்மன் என்ற பெயர் பூண்டாள் என்று கூறுவர். கோட்டைக் கடைக்காரர்களின் உபயம் இன்றும் அன்னை கோவிலில் ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வருகின்றது.

    ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் இன்றும் அன்பர்கள் தரிசிக்கக்கூடிய நிலையில் காளிகாம்பாள் கோவிலில் உள்ளது ஒரு தனிச்சிறப்பு.
    இத்தலத்தில் அன்னை காளிகாம்பாள் மேற்கு நோக்கித் திருக்கோவில் கொண்டு விளங்குகின்றாள். பொதுவாக மேற்கு முகமாக எழுந்தருளிக் காட்சி தரும் அன்னையருக்கு அருளும், சிறப்பும் மிக அதிகம். அன்னை காளிகாம்பாளின் அருட் சிறப்பு சொல்லில் அடங்காதது.

    இத்திருக்கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தகைய சிறப்புகள் நிறைந்த காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை தொடங்கி 9 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
    அதுபோல வருகிற 22-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 10 வாரங்களுக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகை அபிகேஷம் நடைபெறும். அந்த அபிஷேகங்களை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    எனவே ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் எந்த கிழமை காளிகாம்பாள் ஆலயத்துக்கு செல்ல முடிகிறதோ அன்று சென்று வழிபடுங்கள். அம்மன் ஆலயத்துக்குள் செல்லும் போது சும்மா கையை வீசிக் கொண்டு செல்லக்கூடாது. உங்களால் முடிந்த அளவுக்கு மலர்கள் வாங்கிக்கொடுங்கள்.

    தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி செல்லுங்கள். பூஜைக்கு தேவையானதை வாங்கிக் கொடுங்கள். இவையெல்லாம் உங்கள் தோஷங்களை நீக்கி புண்ணியத்தைப் பெற்றுத்தரும். நீங்கள் காளிகாம்பாளுக்கு என்னென்ன வாங்கிக் கொடுக்கலாம் என்ற விவரம் கீழே ஞாயிற்றுக்கிழமை அபிஷேக பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் :

    காளிகாம்பாள் கோவிலில் ஆடிப்பெரு விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22.7.18அன்று தொடங்கி 23.9.18 வரை மொத்தம் 10 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் காளிகாம்பாளுக்கு நடத்தப்படும் அபிஷேகங்களை பக்தர்கள் நேரில் கண்டுகளித்து பலன் பெறலாம்.

    ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு விதமான பொருட்கள் 108 குடங்களில் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    எந்தெந்த வாரங்களில் என்னென்ன பொருட்களில் அபிஷேகம் நடைபெற உள்ளது என்ற விவரம் வருமாறு:-

    22-7-18 (முதல் வாரம் 108 குடங்களில் பால் அபிஷேகம் நடைபெறும்).
    29-7-18 (2-வது வாரம் 108 குடங்களில் இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறும்)
    5-8-18 (3-வது வாரம் 108 குடங்களில் தயிர் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும்)

    12-8-18 (4-ம் வாரம் அன்று 108 குடங்களில் மஞ்சள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)
    19-8-18 (5-ம் வாரம் அன்று 108 குடங்களில் சந்தனம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    26-8-18 (6-ம் வாரம் அன்று 108 குடங்களில் விபூதி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)

    2-9-18 (7--ம் வாரம் - அன்று 108 குடங்களில் பன்னீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படும்)
    9-9-18 (8-ம் வாரம் - அன்று 108 குடங்களில் பஞ்சாமிர்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்)
    16-9-18 (9-ம் வாரம் - அன்று 108 குடங்களில் புஷ்பங்கள் எடுத்து வந்து அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும்)
    23-9-18 (10-ம் வாரம் - அன்று 108 குடங்கள் நிறைய புஷ்பங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்)

    ஞாயிறு தோறும் இந்த சிறப்பு அபிஷேகத்தை பகல் 11 மணிக்கு செய்வார்கள். காளிகாம்பாளுக்கு நடக்கும் இந்த அபிஷேக, ஆராதனையை ஒரு தடவை நேரில் தரிசனம் செய்தாலே போதும், ஆடி மாத அம்மன் தரிசனத்துக்கான முழு திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.மூர்த்திஆச்சாரி, அறங்காவலர்கள் டி.ஜெகதீசன் ஆச்சாரி, கே.யுவராஜ் ஆச்சாரி, இரா.ராஜேந்திரகுமார் ஆச்சாரி, பி.பஞ்சாட்சரம் ஆச்சாரி ஆகியோர் செய்துள்ளனர்.

    அபிஷேக ஆராதனைகள் தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 044- 25229624 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
    ×