search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanishk Gold"

    கனிஷ்க் நிறுவனத்தின் மேலும் ரூ.138 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். #Kanishk #BankFraud

    சென்னை:

    சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் கனிஷ்க் நகைக்கடை உள்ளது. இந்த கடையை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையை சேர்ந்த பூபேஷ் குமார் ஜெயின் நடத்தி வந்தார். இங்கு தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற நகைகள் விற்கப்பட்டன.

    இந்த நிறுவனம் நகை இருப்பை அதிகம் காட்டியும், போலியான ஆவண நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்றது.

    இந்த கடனுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டித்தொகையையும், நிலுவைத்தொகையையும் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செலுத்தவில்லை. இதை கண்டறிந்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவித்தது.

    அந்த புகாரின் அடிப்படையில் பூபேஷ் குமார் உள்பட 6 பேர் மீது கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இந்த மோசடி குறித்து கனிஷ்க் நிறுவனம், அதன் இயக்குனர்கள் பூபேஷ் குமார் ஜெயின், அவரது மனைவி நீட்டா ஜெயின், பங்குதாரர்கள் உள்பட 6 பேர் மீது கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக் கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதையடுத்து மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்புள்ள நகை தொழிலகத்தை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது. வங்கியில் இருந்த ரூ.143 கோடி பணமும் முடக்கப்பட்டது. இதையடுத்து பூபேஷ் குமார் ஜெயினை அமலாக்கத்துறையினர் கடந்த மே 25-ந் தேதி கைது செய்தனர்.

    இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக செங்கல்பட்டு அருகே புதுப்பாக்கத்தில் பூபேஷ் குமாருக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலம், சென்னை நுங்கம்பாக்கம் வீடு, மும்பை அடுக்குமாடி குடியிருப்பு வீடு, குன்றத்தூர் 4 ஏக்கர் 41 சென்ட் நிலம், பூந்தமல்லி பிடாரி தாங்கலில் உள்ள 3 ஏக்கர் 63 சென்ட் நிலம், கொளப்பஞ்சேரியில் இருக்கும் 1.48 ஏக்கர் நிலம், தர்மபுரி மாவட்டம் பன்னிக்குளத்தில் உள்ள 7.09 ஏக்கர் நிலம், சென்னை அருகே முட்டுக்காட்டில் இருக்கும் 83.20 சென்ட் நிலம், மயிலாப்பூர் கத்தீட்ரல் சாலையில் உள்ள 2290 சதுர அடி நகைக்கடை, தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள 4200 சதுர அடியில் 4 தளங்களுடன் கூடிய அலுவலகம், பெரம்பூரில் 7,184 சதுர அடியில் உள்ள கட்டிடம் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். இந்த 14 சொத்துக்களின் மதிப்பு ரூ.138 கோடி ஆகும்.

    ×