என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka"

    • சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    கர்நாடகாவின் பெலகாவியில் நடைபாதையில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வியாபாரியின் மூக்கை சக வியாபாரி நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெலகாவி நகரின் காடே பஜாரின் காஞ்சர் கல்லி என்கிற பகுதியில் தனது கடையை அமைக்க 42 வயதான சுஃபியான் பதான் விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, மற்றொரு வியாபாரியான அயன் தேசாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இது வாக்குவாதமாக தொடங்கி பின்னர் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    சண்டையின்போது, அயன் தேசாய் திடீரென கத்தியை எடுத்து சுஃபியானின் மூக்கை நறுக்கினார். இதில், சுஃபியான் பலத்த காயமடைந்தார். மேலும், இந்த கைகலப்பின்போது சமீர் பதான் என்ற நபரும் காயமடைந்துள்ளார்.

    இந்நிலையில், சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    • சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
    • சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.

    அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

    தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நந்தினி ப்ளூ பால் பாக்கெட் தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

    கர்நாடகாவில் வருகிற 1-ஆம் தேதியில் இருந்து பால் விலை பாக்கெட்டுக்கு (1050 மி.லி.) 4 ரூபாய் உயர்த்தப்பட இருக்கிறது. கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தல் காரணமாக விலை உயர்த்தப்பட இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் கே.என். ரஞ்சனா கூறியதாவது:-

    பால் கூட்டமைப்பு லிட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து தரும்படி கேட்டது. இதனால் பால் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்படும் 4 ரூபாயும், விவசாயிகளுக்குச் செல்லும்" என்றார்.

    கர்நாடகாவில் பேருந்து கட்டணம், மேட்ரோ ரெயில் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பால் விலை உயர்த்தப்பட இருக்கிறது.

    முன்னதாக, கர்நாடக மாநில பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக், பால் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

    கடந்த வரும் ஒரு லிட்டர் பாக்கெட்டில் 50 மி.லி. பால் அதிகரிக்கப்பட்டு, 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது 1050 மி.லி. கொள்ளளவு கொண்ட நந்தினி ப்ளூ பால் பாக்கெட் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    • திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம்

    கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.

    37 வயதான லோக்நாத் சிங் பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் லோக்நாத் சிங்கின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
    • எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

    கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

    முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

    குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.

    இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

    கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.

    மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.

    இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.  

    • ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
    • அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.

    • நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
    • ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"

    • மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு கடந்த மாதம் கர்நாடக அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டார்.

    இந்த பிரச்சினை இருமாநிலத்திலும் மொழி பிரச்சினையாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த சம்பவத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.


    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கன்னட அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்கம் போல் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடியது.

    பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகளுக்கு இன்று விடுமுறை என்பதால் வங்கிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ரெயில், மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் ஓடியது.

    இந்த நிலையில் சிக்கமகளூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது போராட்டக்காரர்கள் பஸ்நிலைய வளாகத்தில் திறந்து இருந்த கடைகளை அடைக்க சொன்னார்கள்.


    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. மேலும் வலுகட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்ல கூடாது என்று போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இதேபோல் கர்நாடக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மைசூர் கிராமப்புற பஸ்நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை போராட்டக்காரர்கள் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விஜயநகர மாவட்டத்திலும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், கார் ஓடியது. பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் திறந்து இருந்தன.

    பெலகாவி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் மற்றும் மராட்டியத்தில் இருந்து பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெலகாவி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் பெலகாவி மாவட்டத்தில் சாலைகளில் டயர்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் மட்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    • கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன.
    • பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.

    பெங்களூரு:

    பெலகாவியில் கடந்த மாதம்(பிப்ரவரி) 21-ந் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சனையாக மாறியது. கர்நாடகத்தில் மராட்டிய மாநில பஸ்களும், மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. இந்த விவகாரம் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

    பேச்சுவாா்த்தைக்கு பிறகு இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் 22-ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அந்த கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழுஅடைப்பு நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்ஷண வேதிகே(சிவராமே கவுடா அணி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.

    கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. ஆனால் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். பல்வேறு வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும். தியேட்டர்களில் ஒரு காட்சியை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர்.முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலுக்கட்டாயமாக கடைகளை மூடும்படி கூறினால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது.

    கர்நாடகாவில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த ராஜ நாகத்துடன் பிட் புல் வகை வளர்ப்பு நாய் 'பீமா' போராடி சண்டையிட்டு, தனது உயிரை கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளது.

    ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷமந்த் கவுடா என்பவரின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது. அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடி வந்துள்ளது. ராஜ நகத்தை கவனித்த வளர்ப்பு நாய் 'பீமா' ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் சண்டையிட்டு 10 துண்டுகளாக குதறி கொன்றது. இந்த சண்டையில் விஷம் ஏறி 'பீமா' உயிரிழந்தது.

    வளர்ப்பு நாய் 'பீமா' குறித்து பேசிய அதன் உரிமையாளர், "பாம்புகளுடன் சண்டையிடுவது பீமாவுக்குப் புதிதல்ல. இந்த தோட்டத்தில் புகுந்த சுமார் 15 விஷ பாம்புகளை பீமா கொன்றுள்ளது" என்று தெரிவித்தார்.

    • இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி.
    • எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது.

    கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

    மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக பல மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இந்த முடிவு எடுத்துக் காட்டுவதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

    மேலும், மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்று பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.

    ×