என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Assembly election"

    • பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.
    • காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது.

    சிக்கமகளூரு:

    சிக்கமகளூருவில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதையடுத்து கடந்த 19-ந் தேதி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் சந்திரதிரிகோண மண்டபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி,முருகன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் விழாவில் மத்திய மந்திரி முருகன் பேசியபோது கூறியதாவது:-

    ஒரே பாரதம், ஒரே தாய். நாம் அனைவரும் ஒரே பாரத தாயின் குழந்தைகள் ஆவோம். அந்த வகையில் காசியில் தமிழ்ச்சங்கத்தின் மூலம் பிரதமர் மோடி யாகம் நடத்தினார். அப்போது மக்களிடையேயான ஒற்றுமை, உறவு குறித்து பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இனியும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

    கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கநாதர் உள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் உள்ளார். இரண்டும் ஒரே கடவுள்தான். காவிரி நீரை அண்ணன் - தம்பி போல் பங்கிட்டு விவசாயம் செய்து வருகிறோம். அந்த ஒற்றுமை உணர்வுடன் நாம் வாழ்வது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அவர் தனது உரை முழுவதையும் தமிழிலேயே பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    உலக அளவில் இந்தியா 5-வது வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இங்கிலாந்தைவிட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.

    சூரியனும், சந்திரனும் உதயம் ஆவது எவ்வளவு உண்மையோ, அதேபோல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடக சட்டமன்ற தேர்தலை தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திப்போம். மீண்டும் அவரே முதல்-மந்திரி ஆவார். காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது. ராகுல் காந்தி, சித்தராமையா போன்றோர் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம்.
    • தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    மண்டியா :

    மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.

    காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.

    இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    • காங்கிரஸ் கட்சியினரும் சூறாவளியைபோல் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
    • காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சார்பில் டிக்கெட் பெற அக்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆயத்தமாகி வருகின்றன.

    மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வினர் இப்போதே பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஏற்றார்போல் பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி கர்நாடகம் வந்த வண்ணம் உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியினரும் சூறாவளியைபோல் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சார்பில் டிக்கெட் பெற அக்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கட்சிகளின் மீது அதிருப்தி கொண்டவர்கள் மாற்று கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தலைவர்கள் தொடங்கி உள்ளனர். அதன்படி, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், பிரசாரக்குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்பட தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது 130 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம் என்பதால், அந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்து தலைவர்கள் முதலில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் 150 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியலை காங்கிரஸ் மேலிட தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைத்து, ஒப்புதல் பெற தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜனதாளதளம் (எஸ்) கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பஞ்சரத்னா யாத்திரை நடைபெற்று வருகிறது.

    குமாரசாமி செல்லும் பகுதியெல்லாம், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பஞ்சரத்னா யாத்திரை நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயாரிப்பது குறித்து பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் சி.எம். இப்ராகிம், குமாரசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்து 2-ம் கட்ட பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன.

    தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும்.

    அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என எண்ணி பார்த்தால் பிரசாந்த் கிஷோர் தான் நினைவிற்கு வருவார்.

    தற்போது இவர் தேர்தல் வியூக நிபுணர் பதவியில் இருந்து ஓய்வுபெற்று விட்டு பீகார் மாநிலத்திற்கு சென்று விட்டார். அங்கு அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவரது நிறுவனம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

    பிரசாந்த் கிஷோரிடம் பயிற்சி பெற்ற அவரது சீடர்கள் தற்போது அந்த பணியை செய்து வருகிறார்கள். தற்போது இவர்களை கர்நாடக அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐபேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகமும் தான். அதன்பிறகு பிரசாத் கிஷோரின் எனும் பி.கே.யின் புகழ் பரவியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் பகுதி பி.கே.வை அழைக்க தொடங்கினர்.

    கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்களும் தனியாக தேர்தல் வியூக நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். பி.கே. சீடர்கள் மூலம் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் கள நிலவரத்தை அறிந்து, பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்காக சுமார் 50 தேர்தல் வியூக நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு களப்பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் பணியாற்றும் நபர்கள், 'நாங்கலாம் பி.கே பாய்ஸ்' என்று பெருமையாக கூறி வருகிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த பெயரால் ஒரு நம்பகத்தன்மையும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை 'வராஹி' என்ற பெயரில் தேர்தல் வியூக நிறுவனத்தை கட்டமைத்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் தேர்தல் பணிகளை ஆற்ற முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது 'மைண்ட் ஷேர்' என்ற நிறுவனத்தை வேலையில் அமர்த்தியுள்ளது. இவை இரண்டில் பணியாற்றும் நபர்களும் பிரசாந்த் கிஷோரிடம் அரசியல் பாடம் கற்றவர்கள்.

    இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பலரை தேர்தல் வியூகத்திற்காக நியமித்துள்ளது. இவர்களும் பி.கே மற்றும் ஐபேக் உடன் தொடர்புடையவர்கள். தேர்தல் அரசியலில் வியூக நிபுணர்களை பயன்படுத்துவதில் மூத்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    • ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார்.

    கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றன.

    கடந்த ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய பேருந்து பயணமான 'பிரஜா த்வனி யாத்ரே'யின்போது கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

    இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் இலவச மின்சாரம் தருவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்களின் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் (பாஜக) 24 மணி நேர மின்சாரம் வழங்க முடிந்தது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
    • விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    பெலகாவி:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத் மட்டத்திலும் இத்தகைய யாத்திரைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்கள் கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். போட்டி போட்டு செயல்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிட யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஒவ்வொருவராக கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார்கள். அசாம், மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் வந்துவிட்டு சென்றுள்ளனர். மத்திய மந்திரிகள் வந்து விஜய சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டுவிட்டு செல்கிறார்கள். இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாது. உத்தரவாத அட்டை வழங்கினாலும் அதை செயல்படுத்த மாட்டார்கள்.

    பெலகாவியில் சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்க எம்.இ.எஸ். அமைப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்கள் மீண்டும் எங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்த தயாராக உள்ளனர். நாங்கள் நடத்தும் விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
    • தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

    தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

    கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • டி.கே.சிவக்குமார் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

    ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா், தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அந்த சமயத்தில், டி.கே.சிவக்குமார் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்தார். அந்த பணத்தை மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வருணா பா.ஜனதாவின் கோட்டை.
    • கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர் என கருதப்படும் சித்தராமையா, மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    இதனால், சித்தராமையாவை வீழ்த்த பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சிகள் ஆலோசித்து வருகிறது. பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், எடியூரப்பா இதனை மறுத்துள்ளார். விஜயேந்திரா வருணாவில் போட்டியிட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜயேந்திரா கூறுகையில், வருணா பா.ஜனதாவின் கோட்டை. அங்கு பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். வருணாவில் சித்தராமையாவை விட பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இதை யாரும் உடைக்க முடியாது. வருணாவில் என்னை போட்டியிடும்படி கட்சி மேலிடம் கூறினால், கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால் எனது தந்தை, சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

    • சட்டசபை தேர்தல் பிரசாரம், கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
    • 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் பாக்கி உள்ள 100 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் இடையே பலத்த போட்டியிட்டுள்ளது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-க்கும் அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வருகின்றனர்.

    இதனால் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, அவரது வீட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது 2 பேரும், சட்டசபை தேர்தல் பிரசாரம், வருகிற 9-ந் தேதி கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்திருக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜனதா பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கர்நாடகத்திற்கு 7 முறை பிரதமர் மோடி வந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், 80 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    இதனால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தன்னுடைய தேர்தல் வியூகங்களை மாற்றி அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார்.

    அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணி களை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான கலபுரகி, அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்துவதற்கு பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    அத்துடன் மே 6-ந் தேதியில் இருந்து பிரசாரம் முடியும் கடைசி நாளான 8-ந் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் கர்நாடகத்திலேயே பிரதமர் மோடி முகாமிட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம் காரணமாக கூடுதலாக 15 முதல் 25 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மக்களின் நாடித்துடிப்பே கட்சியின் நாடித்துடிப்பு.
    • களத்தின் உண்மை நிலையை அறிந்து கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி முதல்கட்டமாக ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மூன்று கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    கர்நாடக காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்-மந்திரி பதவி விஷயத்தில் அவர்கள் 2 பேரின் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது, மறைமுகமாக கருத்து மோதல் வந்தது உண்டு. இதில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடம், முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்றும், முதலில் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் இருவருக்கும் அறிவுறுத்தியது.

    சட்டசபை தேர்தல் குறித்து இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரசின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவரை ஒரு தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நேரில் சந்தித்து பேட்டி எடுத்தது. முதல்-மந்திரி பதவி குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் உள்ளேன். டி.கே.சிவக்குமாரும் அதில் உள்ளார். ஜனநாயகத்தில் இது சகஜமாக நடைபெறும் விஷயம் தான். இதில் தவறு ஒன்றும் இல்லை. டி.கே.சிவக்குமாரோ அல்லது நானோ முதல்-மந்திரி ஆனால் தவறு இல்லை. இறுதியாக புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் தான் முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்வார்கள்.

    களத்தின் உண்மை நிலையை அறிந்து கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். மக்களின் நாடித்துடிப்பே கட்சியின் நாடித்துடிப்பு. அதாவது மக்களின் மனநிலையே கட்சியின் மனநிலையாக இருக்கும். முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமாரை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுவது இல்லை. ஜனநாயக முறைப்படி முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இதை சித்தராமையா முற்றிலுமாக மறுத்துள்ளார். தான் அவ்வாறு கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "முதல்-மந்திரி பதவி குறித்து நான் கூறாத கருத்துக்களை ஒரு தனியார் ஆங்கில சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது ஆகும். நான் கூறிய கருத்து திரிக்கப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சி உடனடியாக அந்த செய்தியை நீக்க வேண்டும். எங்கள் கட்சியின் முதல்-மந்திரியை கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி மேலிடம் சேர்ந்து முடிவு எடுக்கும் என்று 100 முறை கூறியுள்ளேன். எனக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு ஊடகங்கள் ஆயுதமாக இருக்க கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தில் பா.ஜனதாவின் பலம் குறைந்து வருகிறது. தினமும் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அதனால் தான் பா.ஜனதா அதானியின் கீழ் இயங்கும் செய்தி தொலைக்காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர்கள் இடையே செயற்கையாக கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அதனால் பா.ஜனதாவை காப்பாற்றும் வேலையை நிறுத்த வேண்டும். 40 சதவீத பா.ஜனதா அரசு அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் தன்னிச்சையாக முதல்-மந்திரி ஆக்காது என்ற ரீதியில் சித்தராமையாவின் கருத்து அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×