என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka Assembly Elections"
- கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
- முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 கட்சிகளும் யாத்திரை பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சி மேலிடம் அமைத்துள்ள தேர்வு குழு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 9 கட்டங்களாக நடந்தது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் சிபாரிசு செய்திருந்த பெயர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளி்ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, அதை கட்சி மேலிட வேட்பாளர் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
இதில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தேவனஹள்ளியில் முனியப்பா, பெங்களூரு ராஜாஜிநகரில் புட்டண்ணா, ஆர்.ஆர். நகர் குசுமா, பெல்காம் ஊரகத் தொகுதியில் லட்சுமி ஹெப்பால்கர், தாவாங்கேரே தெற்குத் தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பா, எம். பி பாட்டீலுக்கு பாபலேஷ்வர் சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.
- சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான பலப்பரீட்சை இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
- கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு:
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இதை தவிர ஒரு சில சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இருந்த போதிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி மோதல் நிலவுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா 104 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரசுக்கு 40.1 சதவீத ஓட்டுகளும், பா.ஜ.க.வுக்கு 34.7 சதவீத ஓட்டுகளும், மத சார்பற்ற ஜனதாதளத்திற்கு 17.9 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான பலப்பரீட்சை இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
அடுத்த முதல் மந்திரியாக யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39.1 சதவீதம் பேர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு 3.2 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பாரதிய ஜனதா ஆட்சி மோசம் என கருத்து தெரிவித்து உள்ளனர்
கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் சமீபத்தில் லஞ்ச புகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விபாட்சப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மேலும் சமீபத்தில் கர்நாடக பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் கடுமையான போராட்டங்கள் நடந்தது. போலீஸ் தேர்வில் நடந்த ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் சிக்கினார்கள்.
இதனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.
இருந்த போதிலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி பல தடவை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளதால் எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு என பாரதிய ஜனதாவினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.
- கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- போலீசார் 66 கிலோ வெள்ளிப் பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹெப்பால் சுங்கச்சாவடி அருகே பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் அதிகாரிகளும் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அந்த வழியாக மராட்டிய பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் குவியல், குவியலாக வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அதாவது வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி கிண்ணங்கள், கரண்டிகள், வெள்ளி தட்டுகள் என்று மொத்தம் 66 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தன.
இதுபற்றி கார் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கார் டிரைவர் சுல்தான் கான் என்பதும், மற்றொருவரின் பெயர் ஹரிசிங் என்பதும் தெரியவந்தது. அந்த வெள்ளி பொருட்கள் மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து போலீசார், 66 கிலோ வெள்ளிப் பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி பொருட்களுடன் சிக்கிய கார், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பைவியூ புராஜெக்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது என்பதும், சென்னையில் இருந்து அந்த காரில் வெள்ளி பொருட்களை மும்பைக்கு கொண்டுபோவதும் தெரியவந்தது. அதுபற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
- வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள்.
வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைன் மற்றும் நேரிலும் டெபாசிட் தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மனுதாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
- 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது. இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். மேலும், 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. இதைத்தவிர இன்னும் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இரண்டாவது பட்டியலில் ஹூப்பள்ளி தொகுதி இடம்பெறவில்லை. 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 5 நாட்களில் 2,968 பேர் வேட்புமனு வழங்கினர்.
- வேட்புமனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
மனுதாக்கலின் 5-வது நாளான நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே நல்ல நாள் என கருதி பசவராஜ் பொம்மை கடந்த 15-ந் தேதி மனு தாக்கல் செய்தார். நேற்று 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில், உப்பள்ளி-தார்வார் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் நேற்று மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 935 பேர் 1,110 மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்களில் ஆண்கள் 873 பேரும், பெண்கள் 62 பேரும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி 91 மனுக்களையும், பா.ஜனதா 164 மனுக்களையும், காங்கிரஸ் 147 மனுக்களையும், ஜனதா தளம்(எஸ்) 108 மனுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 46 மனுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளன.
பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகள் சார்பில் 193 மனுக்களும், சுயேச்சைகள் 359 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மொத்தத்தில் இதுவரை 5 நாட்களில் 2,968 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகம் பேர் மனுக்களை தாக்கல் செய்ய அலுவலகங்களில் குவிந்தனர்.
பலர் மேள, தாளத்துடன் ஆரவாரமாக வந்ததால் மனுதாக்கல் அலுவலகங்கள் விழா கோலமாக காட்சியளித்தன.
- மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
- தினமும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. தினமும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் தொண்டர்களுடன் படையெடுத்தனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று மட்டும் 1,691 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 3,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். இன்று (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் களத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.
- அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
- ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார். புலிகேசி நகர் தொகுதி மற்றும் கோலார் தங்க வயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். இந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
மேலும் ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாததால் மனுவை நிராகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுக வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓபிஎஸ் சார்பில் புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
- புலிகேசி நகர், கோலாரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
ஓபிஎஸ் தரப்பு சார்பில் புலிகேசி நகர் மற்றும் கோலார் தங்கவயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவின் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றது.
ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்த ஆனந்தராஜ் கோலார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
- ராகுல் காந்தி கர்நாடகாவில் இரண்டு சுற்றுப்பயணம் செய்து கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.
- ராகுல் காந்தி நாளை பெலகாவியில் ராம்துர்க்கில் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
ஏற்கனவே அவர் கர்நாடகாவில் இரண்டு சுற்றுப்பயணம் செய்து கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். இதற்கிடையே இன்று மீண்டும் கர்நாடகாவுக்கு செல்கிறார்.
டெல்லியில் இருந்து ஹுப்பள்ளிக்கு செல்லும் ராகுல்காந்தி, சங்கமநாதர் கோவில் மற்றும் ஐக்ய லிங்கத்தை தரிசனம் செய்ய ஹெலிகாப்டரில் கூடல் சங்கமத்துக்கு செல்கிறார். 12-ம் நூற்றாண்டின் கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ப.சவேஸ்வரா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவரது பிறந்தநாளான பசவ ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை விஜயபுராவுக்கு செல்லும் அவர் அங்கு ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
நாளை பெலகாவியில் ராம்துர்க்கில் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஹங்கலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன்பின் ராகுல்காந்தி டெல்லிக்கு புறப்படுவார்.
- கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26) நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை அவர் கர்நாடகத்திற்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார்.
அதனை தொடர்ந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
ராகுல் காந்தியும் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 3-ந் தேதி மங்களூரு அருகே மூடபித்ரி, கார்வார், பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளர்.
- வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதால், பிரதமர் மோடி மாநிலத்தில் தொடர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
குறிப்பாக 16 மாவட்டங்களுக்கு செல்லும் அவர், 23 இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்டவற்றில் பங்கேற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 6 நாட்களும் 3 கட்டங்களாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதற்கட்டமாக வருகிற 29-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் பீதர் மாவட்டம் உம்னாபாத், பெலகாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புரா மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார்
மேலும் வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அன்றைய தினம் இரவு அவர் பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் வருகிற 30-ந் தேதி கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, ஹாசன் மாவட்டம் பேளூருவில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.
அன்றைய தினம் மைசூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் அவர் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக வருகிற 2-ந் தேதி சித்ரதுர்கா மாவட்டம், விஜயநகர் மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூருவில் பொதுக்கூட்டங்களிலும், கலபுரகியில் ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பின்னர் வருகிற 3-ந் தேதி மங்களூரு அருகே மூடபித்ரி, கார்வார், பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக மே மாதம் 6-ந் தேதி கலபுரகி மாவட்டம் சித்தாபுரா, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, துமகூரு, பெங்களூரு தெற்கு தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். மறுநாள் (7-ந் தேதி) பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி, ஹாவேரி, சிவமொக்கா மற்றும் பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதற்கிடையில், சட்டசபை தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள 50 லட்சம் பா.ஜனதா தொண்டர்கள், பூத் மட்டத்திலான தலைவர்களுடன் இன்று காலை (வியாழக்கிழமை) ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடி பேசுகிறார். அதாவது மாநிலத்தில் உள்ள 58 ஆயிரத்து 112 பூத் மட்டத்திலான தொண்டர்கள், 1,680 மாவட்ட பஞ்சாயத்து மட்டத்திலான தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளார்.