search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karur collector anbalagan"

    மாணவ பருவத்திலிருந்தே மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
    கரூர்:

    ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒருவார காலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கரூர் தாந்தோனி மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மனித நேய வார தொடக்க விழா நடந்தது. இதில் மாணவ-மாணவிகளால் "மனித நேயம் காப்போம்'' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் அடங்கிய கண்காட்சியினை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனித நேயத்தை மக்கள் மனதிலும், மாணவர்களின் மனதிலும் விதைக்கும் வகையில் கருத்தரங்குகள், கலை இலக்கியப்போட்டிகள், மேடை நாடகங்கள் என பல்வேறு வகையிலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

    மாணவ சக்தி என்பது அளப்பரியது. மாணவப் பருவத்தில் இருந்தே மனித நேயத்தை வளர்க்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனித நேயமே அன்பையும், இரக்கத்தையும், நேசத்தையும் உங்களிடத்தில் ஏற்படுத்தும். நல்ல மனிதனாக வாழ மனிதநேயமே அடிப்படைத்தகுதியாகும்.

    எனவே, மாணவர்களாகிய நீங்கள் உங்களிடத்தில் மட்டு மல்லாது, உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்திலும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இங்கே உங்களால் வரையப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ள அருமையான ஓவியங்கள், மனிதநேயம் சார்ந்த வரை படங்கள் வெறும் படமாக மட்டும் இருந்திடாமல் அனைவருக்கும் பாடமாகவும் அமைய வேண்டும். இணையதளம் இன்றியமையாததாகி இருக்கும் காலம் இது. உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் "இந்தகாலத்தின் அற்புத விளக்கே'' இணையதளம். மாணவர்கள் இணைய தளத்தை முறையாகப் பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் துறையில் வல்லுநர்களாக உயர வேண்டும். 

    அதே போல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. நமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செய்திகளையும் அன்றே தொகுத்து பாடல்களாக வழங்கியிருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அனைவரும் திருக்குறள் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் லீலாவதி, அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் அம்பாயிரநாதன், கற்பகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×