search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavadis"

    • பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

    புதுச்சேரி:

    தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.

    காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    ×