என் மலர்
நீங்கள் தேடியது "ker assembly"
மீடியா சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்களை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என சமீபத்தில் அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு அலுவலகங்களில் செய்தியாளர்கள் திடீரென கூடுவதால் பெரும் பிரச்சினை ஆவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு கூறியது. ஆனால், இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் இன்று கேரள சட்டசபையில் எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.ஜோசப் இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியிட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் சார்பில் அமைச்சர் ஜெயராமன் பேசினார். அப்போது அரசு வெளியிட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவும், ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார். அத்துடன், சுற்றறிக்கையில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
எனினும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி முழக்கமிட்டனர். சுற்றறிக்கை நகல்களையும் கிழித்து எறிந்தனர். பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout