search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Bishop"

    பாலியல் புகாரில் சிக்கிய ஆயர் பிராங்கோ முல்லக்கல் ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. #FrancoMulakkal
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இப்புகார் தொடர்பாக கோட்டயம் போலீசார் ஜலந்தர் சென்று ஆயர் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடத்தினர். மேலும் வருகிற 19-ந்தேதி அவர், கோட்டயம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இதற்கிடையே கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் தலையிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தது.

    கேரளாவில் இருந்து ஏராளமானோர் இது தொடர்பாக போப் ஆண்டவருக்கும் புகார்கள் அனுப்பினர். இதையடுத்து வாடிகன் தலைமையகம் இப்புகார் குறித்து விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே புகாருக்கு ஆளான ஆயர் பிராங்கோ முல்லக்கல் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதே நேரம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அவர், ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

    அதில், ஆயர் பிராங்கோ முல்லக்கல், மறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். அவருக்கு பதில் 3 பேர் கொண்ட கமிட்டி நிர்வாகப்பொறுப்பை மேற்கொள்ளும். நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகினாலும் அவர், ஆயராக தொடர்வார்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் ஜலந்தர் மறை மாவட்ட பாதிரியார்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகி இருக்கும் தகவல் கொச்சியில் போராட்டம் நடத்தி வரும் கன்னியாஸ்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

    அதே நேரம் ஆயர் பிராங்கோ முல்லக்கல் கைதாகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.  #FrancoMulakkal

    ×