search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala nur"

    கன்னியாஸ்திரி பிஷப் மீது கற்பழிப்பு புகார் கூறியதால் சட்டப்பூர்வ விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று போப் ஆண்டவருக்கு பிஷப் கடிதம் அனுப்பியுள்ளார். #Keralanun #Jalandharbishop

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ முல்லக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால் அவர் அதுபற்றி போலீசில் புகார் செய்தார். மேலும் போப் ஆண்டவர் அலுவலகத்திற்கும் பி‌ஷப் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து ஜலந்தர் பி‌ஷப்பை விசாரணைக்கு வருகிற 19-ந்தேதி ஆஜராகும் படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதுபற்றி பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் கூறும்போது தன்மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணைக்கு அஜராகி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார். மேலும் அவர் தனது பி‌ஷப் பொறுப்புகளையும் மூத்த பாதிரியாரிடம் ஒப்படைத்துள்ளார்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல், வாடிகனில் உள்ள போப் ஆண்டவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து பி‌ஷப் பொறுப்பில் இருந்து விலகி பொறுப்புகளை ஒப்படைத்து உள்ளேன். சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன். அதன்படி 19-ந்தேதி நடைபெறும் போலீஸ் விசாரணையில் பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டுள்ளதால் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும் பெருகி வருகிறது. கிறிஸ்தவ அமைப்புகள், இந்து, முஸ்லிம் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாதிரியார்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நேற்று கொச்சி பகுதியை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். தேவைப்பட்டால் சாலைக்கு வந்து போராடவும் தாங்கள் தயார் என்று மாணவர்கள் அறிவித்தனர்.

    மேலும் சமூக சேவகி கவுரி அம்மா நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறும்போது கேரள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கன்னியாஸ்திரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களை பற்றி என்ன கூறுவது? பி‌ஷப்பை கைது செய்வதில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இதற்காக பொதுமக்களை திரட்டி போராடுவோம் என்றார். இன்றும் உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாலியல் புகார் கூறி உள்ள கன்னியாஸ்திரியின் சகோதரி தலைமை தாங்கினார். பலரும் திரண்டு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். #Keralanun #Jalandharbishop

    ×