என் மலர்
நீங்கள் தேடியது "killing threat"
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி புதுநகரை சேர்ந்தவர் மீனாட்சி. (வயது 50). இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மதனகோபாலபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண் மூலம் அருணகிரி என்ற மகன் உள்ளார்.
விவாகரத்து பெற்றாலும் ராதாகிருஷ்ணன் அடிக்கடி மீனாட்சியிடம் பணம் கேட்டு மிரட்டி வாங்கி செல்வார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் லாரியை பழுது பார்ப்பதற்காக மீனாட்சியிடம் ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், மீனாட்சி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தனது 2-வது மனைவி மகன் அருணகிரியுடன் சேர்ந்து மீனாட்சியை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனாட்சி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அருணகிரி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.
பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.
மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.