search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "koenigsegg"

    • அந்த காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
    • எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும்?

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலகின் விலை உயர்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி ஆல்ட்மேன் கோனிக்செக் ரெகரா ஹைப்பர் கார் மாடலை ஓட்டுகிறார்.

    இது லிமிட்டெட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோனிக்செக் ரெகரா உலகளவில் மொத்தம் 80 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இது ஒரு ஹைப்ரிட் ரக கார் ஆகும். இதன் ஆரம்ப விலையே 1.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.

    இந்த காரை பயன்படுத்திய நிலையில் வாங்கும் போது விலை மேலும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், இதன் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி ஆகும்.

    ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ரெகரா மாடலை ஓட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் 40 லட்சத்திற்கும் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியால் எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்த எக்ஸ் தள பதிவு ஒன்றில், "ஓபன்ஏஐ சிஇஓ உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டி வருகிறார். லாப நோக்கற்ற நிறுவனமாக துவங்கப்பட்ட ஓபன்ஏஐ எப்படி லாபகர வியாபாரமாக மாறியது?" என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் "நல்ல கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.


    முன்னதாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கவும், அதில் அதிக கவனம் செலுத்துவதிலும் எலான் மஸ்க் தீவிரம் காட்டினர். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ஓபன்ஏஐ. பிறகு, அந்நிறுவன நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் இதர காரணங்களால் எலான் மஸ்க் ஓபன்ஏஐ-இல் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×