search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kottai mariamman"

    • ஆடித்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
    • 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். ஆடித்திருவிழா தொடங்கிய நாள் முதல் விழா முடியும் வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி இந்த ஆண்டு ஆடித்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி இரவு சக்தி அழைத்தல் நடக்கிறது. 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 16-ந்தேதி பால் குடம் எடுத்தல், மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற உள்ளன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராசாராம், விழாக்குழு தலைவர் எஸ்.டி. ஹார்டுவர்ஸ் வி.சக்திவேல், பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    இதே போன்று அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதே போன்று அம்மாபேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாநகரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினமும் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், அனந்தசயன கோலத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்கி, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், கொடியிறக்கம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று முன்தினம் அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக அம்மனின் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணியளவில் அம்மனுக்கு பால், சந்தனம், வாசனை திரவியங்கள் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணியளவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மாலை 6 மணியளவில் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவில் கருவறை முன்பு 8 அடி நீளம், 8 அடி அகலம், 1½ ஆடி ஆழத்தில் புதிய தெப்பம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தெப்பத்தில் மரிக்கொழுந்து, தாமரை, மல்லிகை போன்ற மலர்கள் மிதக்க அதில் அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன் இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனின் அனந்தசயன கோலம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

    மாசித்திருவிழாவின் நிறைவுநாள் என்பதால் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தலைமையில் கோவில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர்.
    உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.
    சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார்.

    இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இறந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள். உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.

    அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு ஆகும். அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கி.பி.1788- 1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்ரகமும் அமைத்து வழிபட்டனர்.

    அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி, பால்குடம் ஆகியவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 31-ந்தேதி, பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் நேற்று பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. அதையொட்டி காலையில் அம்மனுக்கு திருமஞ்சனம், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மேலும் முளைப்பாரி, பால்குடம் ஆகியவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டது. அதேபோல் அம்மன் கரகத்துடன் எழுந்தருளி மெயின்ரோடு, கிழக்குரதவீதி உள்பட முக்கிய பகுதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படியில் அம்மன் இறங்கினார். அங்கு அம்மனுக்கு பூஜைகள், நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மின்அலங்கார தேர் மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோவில், பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம், கிழக்குரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. 
    திண்டுக்கல் பக்தர்களின் கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. மறுநாள் 1-ந் தேதி பூச்சொரிதல் விழா, 3-ந் தேதி சாட்டுதலும் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துபடி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துபடி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை சாத்துபடி, திருமாங்கல்யம் சாத்துபடி செய்தல் நடந்தது.

    அதேபோல் திண்டுக்கல் டவுண் மார்க்கெட் குமரன் தெரு சாம்பன் குலத்தார் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு பாலக்கொம்பு ஊன்றப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெண்கள் பாலகொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர்.

    கோவிலுக்கு மஞ்சள்நீர் எடுத்து வந்த பெண் பக்தர்கள்.

    அதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கொடியில் உள்ள அம்மன் படத்துக்கு கண் திறப்பு நடந்தது.

    அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். இதில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், விஸ்வகர்ம மகாஜன சபா அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, நிர்வாகிகள் முத்து, காளிராஜ் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக் கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. 8 மணியளவில் கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம பொற்பணியாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசைக்கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று 2-வது நாளாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

    இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது நேற்று தொடங்கியது. எனினும் நேற்று முன்தினமே ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து இரவு விடிய, விடிய கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    சேலம் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்ததையும் படத்தில் காணலாம்.


    நேற்று 2-வது நாளாக கோவில் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினார்கள். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலில் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆடிப்பண்டிகையை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களிலும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 14-ந் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது.

    இதேபோல் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன்கோவில், கடைவீதி சின்ன மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புது மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
    ×