search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kozhikode hospital"

    ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்ட நர்சு, வாலிபர் கவலைக்கிடமாக உள்ளதால் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 79 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைதொடர்ந்து அந்த 22 பேரும் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு நர்சு மற்றும் வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 50 டோஸ் வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்த பிறகுதான் அந்த மருந்தை நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கோழிக்கோடு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே மண்ணாச்சேரியில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து என்று கூறி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டனர்.

    மாத்திரை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக 30 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது டாக்டர்களின் அனுமதி இல்லாமல் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு ஊழியர் இந்த மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுபோன்ற வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

    ×