search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kuladeiva valibadu"

    • துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
    • குலதெய்வ வழிபாட்டு முறை பற்றி கிராமங்களில் வாழ்பவர்களுக்குதான் தெரியும்.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியை பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள்.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளை தொடங்குவது வழக்கம்.

    சுப நிகழ்ச்சிகளை தொடங்கு பவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடரா மல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால் சோதனைகள் ஏற்படும்போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்த கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம்.

    குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது, ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    குலதெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள்.

    கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.

    குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர் களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரிய வர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பி இருக்கிறார்கள்.

    சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.

    • பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.
    • பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

    ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி வெவ்வேறு சிறப்புகளை நமக்கு தருவதாக அமைகின்றது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.

    பொதுவாக `பங்குனி உத்திரம்' என நட்சத்திரத்துக்கு சிறப்பு தரும் பவுர்ணமி நாள் என்றவுடன் அனைவரது உள்ளமும் குதூகலம் அடையக் காரணம் முருகனுக்கு விழா எடுக்கும் நாள் என்ற சிறப்பை பெறுகின்றது.

    தமிழ் கடவுள் சுப்பிரமணியின் ஆலயங்கள் அனைத்தும் விழா கோலம் அடையும் தினம் என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருப்போம்.

    இந்நாளில்தான் தெய்வ திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை.

    பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது. பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடிச்சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது. பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.

    இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம் குலதெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.

    பன்னாரியம்மன் குண்டம்

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர். பங்கு மாத உத்திரத்திறகு முன்தினம் 15-ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும். இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும், அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும். மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப்பகுதி மக்களும் பெரிய தனக்காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர். இந்த ஊர்வலம் 8-ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும். மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15-ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள். மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும். முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்த கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர். அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும்.

    தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும். மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார். பிறகு வரிசையாய் ஆண்களும், பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும். இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    • தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள்
    • ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது.

    தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற்றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்க செய்பவை. கேட்கக் கேட்க திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது.

    பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.

    அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். ஒரு விவசாய இளைஞன் போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களை தழுவ முயன்றார். "யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே' என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியளிந்தனர்.

    இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.

    மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, ""உனக்கு ஏது இந்த குழந்தை?'' என கேட்டனர்.

    அதற்கு காத்தாயி, `பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்த குழந்தை'' என்றாள்.

    ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை.

    "என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அழுதபடி கேட்டாள்.

    "நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என்றனர் மற்ற சகோதரிகள்.

    அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

    அப்போது அவர்களுக்கு காட்சி கொடுத்த சிவ பெருமான், "இவையெல் லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மை கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக- காவலர்களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப் பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்'' என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.

    சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம் ஆகியோரே அந்த ஏழு தெய்வங்கள். இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

    "இந்த ஏழு ஊர்களிலும் இந்த ஏழு அம்மன்களின் ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஏழு ஊர்களில் மட்டுமல்ல; மற்ற கிராமங்களிலும் தீமிதித் திருவிழா நடைபெற இதுவே காரணம்'' என்கிறார்கள்.

    ஆடி மாதம் முதல் வெள்ளியன்று சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கும். அதற்கு அடுத்த வெள்ளி புலியூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி சித்தூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி குமாரை பச்சையம்மன் மற்றும் காளிங்கராய நல்லூர் அருந்தவத்திற்கும், அடுத்து வெங்கனூர் காத்தாயிக்கும், கடைசி வெள்ளி அரகண்ட நல்லூர் பூங்காவனத்தம் மனுக்கும் தீமிதித் திருவிழா நடக்கும். இப்படி வரிசையாக நடப்பது இங்கு மட்டுமே என்கிறார்கள்.

    இந்த ஏழு கோவில்களையும் பச்சையம்மன் கோவில்கள் என்றே அழைக்கின்றனர். ஆனால் குமாரை அம்மனுக்குதான் பச்சையம்மன் என்று பெயர். அடர்ந்த வனம் போன்ற பகுதி, கோவிலுக் கு எதிரே ஓடை, அதன் கரைகளில் அடர்ந்த ஆல மரங்கள், நாக மரங்கள் என மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது குமாரை பச்சையம்மன் கோவில்.

    "இங்குள்ள ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ் வொரு பெருமைகள் உண்டு'' என்ற ஊர் பெரியவர்கள் வெங்கடாசலம், கலிய பெருமாள் ஆகியோர், "இந்தப் பச்சையம்மன் நிகழ்த்திய அதிசயங்கள் ஏராளம். 1995-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம், அழகாபுரம், வயலூர் உட்பட பல கோவில்களில் சிலை திருட்டுகளும், உண்டியல் திருட்டுகளும் தொடர்ந்து நடந்தன. இதைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனி போலீஸ் படையும் திணறிக் கொண்டிருந்தது.

    சிலை தடுப்பு போலீஸ் சாமி சிலைகள் தயார் செய்யப்படும் கும்பகோணம் பகுதிக்குச் சென்று சிலை செய்பவர்களிடம், "சாமி சிலைகளை யாராவது விற்கவோ பரிசோதிக்கவோ இங்கு கொண்டு வந்தால் எங்களுக்கு உடனே தகவல் கொடுங்கள்' என்று சொல்லியிருந்தனர். அதே சமயத்தில் அழகாபுரம் என்ற ஊரில் சாமி சிலை கள் களவு போனது. அதில் அழகான பால முருகன் சிலையும் உண்டு. இந்த சிலையில் தங்கம் கலந்திருக்கிறதா என்று பரிசோதனை செய்ய ஒரு கும்பல் காரில் சிலையோடு கும்பகோணத்திற்குச் சென்றது.

    அங்கு சிலை செய்பவர்களிடம் கொடுத்து சோதித்து, தங்கம் இல்லை என்று தெரிந்ததும் சிலையோடு மீண்டும் அந்த கும்பல் புறப் பட்டது. உடனே சிலை செய்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். காரில் வந்த கும்பல் ஓலையூர் என்ற கிராமத்தில் இருந்து வந்ததாக சொன்னார்கள்.

    உடனே போலீஸார் புலன் விசாரணை செய்து, ஓலையூரைச் சேர்ந்த ஒரு பூசாரி தலைமையிலான ஏழு பேர் கொண்ட கும்பல்தான் சிலை, உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்தனர்.

    உடனே போலீசார் மாறு வேடத்தில் ஓலையூர் பூசாரியிடம் சென்று, "நாங்களும் சிலை கடத்து பவர்கள்தான். வெளிநாடுகளுக்கு விற்க எங்களுக்கு அழகான சாமி சிலைகள் வேண்டும்' என்று சொல்ல, பூசாரி கும்பலும் நம்பி விட்டது. "கையில் இருக்கும் சிலைகள் சிதைந்தவை. அதனால் இரண்டு நாள் கழித்து வாருங்கள். உங்களுக்கு மிக அழகான சிலைகளைத் தருகிறோம்' என்று உறுதி கொடுத்தனர். போலீசும் திருடர்களுக்கு வலைவிரித்துப் பிடிக்கும் எண்ணத்தில் சென்று விட்டனர்.

    ஏற்கெனவே பூசாரி கும்பல் காட்டின் நடுவே இருந்த குமாரை அம்மன் கோவிலை நோட்டம் பார்த்து வைத்திருந்தது. அன்று மாலையே மூன்று பேர் சாக்குப் பைகளோடும், பூசாரி தன் மனைவியோடும் யாரும் சந்தேகப்படாதபடி ஓலையூரில் இருந்து குமாரைக்கு இரவோடு இரவாக சைக்கிளில் வந்தனர். கோவில் மதில் சுவரில் ஏறி உட்கதவின் பூட்டை உடைத்து, அங்கிருந்த விநாயகர், பச்சையம்மன், முருகன் ஆகிய மூன்று சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு ஓலையூர் சென்றுவிட்டனர்.

    போலீசார் பூசாரி சொன்னபடி இரண்டு நாட்கள் கழித்து சிலை வாங்க வந்தனர். பூசாரி கும்பல் வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குமாரை கோவில் சிலைகளை எடுத்துக் கொடுத்து விலை பேசும்போது, போலீஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தனர். பூசாரி கும்பலிடம் விசாரணை செய்ததன் மூலம் திருடு போன மற்ற கோவில் சிலைகளையும் போலீசார் மீட்டனர்.

    இந்த விஷயத்தை போலீஸ் அதிகாரிகள் எங்கள் ஊருக்கே வந்து விளக்கிச் சொன்னதோடு, சிலை களை ஒப்படைத்து, "உங்க ஊர் பச்சையம் மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அம்மனே திருடர்களைப் பிடிக்க எங்களுக்கு உதவி செய்ததுபோல் உள்ளது' என்று கூறி, மிகவும் சக்தி வாய்ந்த அம்மனை வழிபாடு செய்துவிட்டுச் சென்றனர்'' என்றார்கள்.

    "இந்த அம்மன் கோவில் உலுள்ள பூமாலையப்பர், முத்தையா ஆகிய காவல் தெய்வங்கள் இருவரும் அண்ணன்- தம்பிகள். இவர்கள் இருவரும் அடிக்கடி தென் பகுதி காட்டுக்கு இரவில் வேட்டையாடவும் அம்மனின் கட்டளையை நிறைவேற்றவும் போவதுண்டு. ஒருமுறை இருவரும் வேட்டைக்குப் போய்விட்டு பெருமுளை கிராமத்தை ஒட்டிய ஏரிக்கரையில் சங்கமுள் காட்டில் வரும் போது முத்தையா காலில் முள் தைத்துவிட்டது. உடனே அண்ணன் பூமாலையிடம், "நீங்க முன்னாடி போங்க. என் காலில் பட்ட முள்ளை எடுத்துவிட்டு பின்னாடி வருகிறேன்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண் டார் முத்தையா. முள்ளை எடுப்பதற்குள் விடிந்து விட்டது.

    விடிந்தும் தம்பி வராததைக் கண்டு பூமாலையப்பர் மீண்டும் பெருமுளையை நோக்கி குதிரையில் வேகமாக வந்தார். அப்போது அந்த ஏரிக்கரையில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த சிறு தெய்வங்கள் கும்பலாகச் சூழ்ந்துகொண்டு, "இந்த இடத்தைவிட்டு எழுந்து போ. இது எங்க இடம்' என்று முத்தையாவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தன.

    இதைப் பார்த்த பூமாலையப்பர் குதிரைமீது இருந்தபடியே கோபமாக தனது ஈட்டியைத் தூக்கி வீசினார். உடனே சிறு தெய்வ கும்பல் பயந்து ஓடிவிட்டது. தம்பி முத்தையாவை, "இனி இங்கு இருக்க வேண்டாம்; புறப்படு. குமாரைக்குப் போகலாம்' என்று கூப்பிட்டார்.

    "அண்ணா! எனக்கு இந்தப் பெருமுளை ஏரிக்கரையே ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்' என்று முத்தையா சொல்ல, அண்ணன் பூமாலையின் முகம் வாடிப்போனது. "என்னண்ணா ஒருமாதிரியா ஆகிட்டீங்க' என முத்தையா கேட்க, "எனக்கு நீ தம்பியா இருந்தாலும் இனி உனக்கு தான் மக்கள் முதல் மரியாதை தருவார்கள்.

    ஏனென்றால் உன்னைத் தாண்டிதான் மக்கள் என்னைப் பார்க்க குமாரைக்கு வரவேண்டும்' என்று பூமாலையப்பர் வருத்தம் மேலிடச் சொல்லவே, பதறிப் போன தம்பி, "என்னண்ணா இப்படிச் சொல்லிட்டீங்க? உங்களுக்குதான் எப்போ தும் முதல் மரியாதை. முதலில் உங்களை வந்து வணங்கிப் பூஜை செய்த பிறகே மக்கள் என்னிடம் வருவார்கள். இது சத்தியம்' என்று அண்ணன் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார் முத்தையா.

    அதேபோன்று இன்று வரை எவ்வளவு மக்கள் இவர்களைக் கும்பிட வந்தாலும் பெருமுளையைத் தாண்டி உள்ள குமாரைக்குச் சென்று பூமாலையப்பரை வழிபட்டபிறகு, மீண்டும் திரும்பி வந்துதான் முத்தையா சாமியை வழிபாடு செய்து வருகிறார்கள்.

    இதுமட்டுமல்ல; ஒவ்வொரு பங்குனி மாதம் நடைபெறும் பாரிவேட்டைத் திருவிழா முதல் நாள் குமாரை யில் நடைபெறும். அதற்கு மறுநாள் அதே மாதிரி பாரிவேட்டைத் திருவிழா பெருமுளை முத்தையா வுக்கு நடத்துகிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது'' என்கிறார்கள் வெங்கடாசலமும் கலியபெருமாளும்.

    நாமக்கல் மாவட்டம், மலை வேப்பன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர், "எங்கள் குலதெய்வம் இந்தக் கோவில்தான். எங்களுக்கு மட்டுமல்ல; இந்த ஏழு அம்மன் களையும் காவல் தெய்வங்களையும் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் உட்பட பத்திற்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள். இந்த தெய்வஅருள் மிக அபாரமானது.

    என்னையே இந்த கோவில் திருப்பணி செய்யும் பணிக்கு அம்மன் அழைத்து வந்த அதிசயத்தை எப்படிச் சொல்வது? கடந்த ஆண்டு ஒரு நாள் நல்ல தூக்கத்தில் நான் இருந்தபோது ஒரு கனவு. மஞ்சள் பாவாடை, சட்டையோடு சிறுமி ஒருத்தி என்னிடம் வந்து, "என்னை மறந்துவிட்டாயா? என்னைப் பார்க்க வர மாட்டாயா?' என்று கேட்டு தட்டி எழுப்பியது.

    திடீரென விழித்துக் கொண்டேன். பிறகு தூங்கவே இல்லை. விடியற்காலை யிலேயே புறப்பட்டு குமாரை அம்மனை வந்து வணங்கி நின்றேன். என்ன அதிசயம்! நான் கனவில் பார்த்த அதே மஞ்சள் பாவாடை, சிவப்பு சட்டையில் அம்மன் காட்சி அளித்தாள்!

    அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் கோவில் கட்டும் திருப்பணி சம்பந்தமாகப் பேசி முடித்தனர். அவர்களோடு நானும் இணைந்து கொண்டேன். இந்த திருப் பணியின் கணக்கு, வழக்குகள் பொறுப்பை அம்மன் உருவத்தில் இவ்வூர் மக்கள் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இனி கோவில் திருப்பணி செய்து கும்பாபிஷே கம் முடிந்த பிறகே ஊருக்கு செல்வது என முடிவெடுத்தேன். என் முடிவு மட்டுமல்ல; அம்மனின் கட்டளை என்பதையும் உணர்ந்து கொண்டேன்'' என்றார் குமாரசாமி.

    "எனக்குத் திருமணமாகி 18 ஆண்டு களாக குழந்தைப்பேறு இல்லை. காலை, மாலை காளிங்கராயநல்லூர் அம்மனே கதி என்று நடையாய் நடந்து கும்பிட்டேன். அதன் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது மகன், மகள், பேரன், பேத்தி என்று சந்தோஷமாக எங்கள் வம்சம் தழைத்துள்ளது. இந்த ஏழு அம்மன்களில் ஒருத்தியான பட்டத்தாள் என்ற பெயரையே எனக்கும் எனது பெற்றோர்கள் வைத்துள்ளனர்'' என்கிறார் பட்டத்தாள் என்ற மூதாட்டி.

    குமாரை கோவிலில் ஆங்கிலேயர் காலத்தில் தீமிதித் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர் ஒருவர், "என்னங்கடா திருவிழா, தீமிதி' என்று கிண்டலாகக் கேட்டபடியே பார்க்க வந்தார். மக்கள் அம்மனுக்கு தீ மிதிப்பதை தனது பைனாகுலர் மூலம் பார்த்தார் பிரபு.

    அப்போது தீக்குழிக்கு மேலே அம்மன் தன் முந்தானையை இரு கைகளாலும் விரித்தபடியே இருக்க, பெண்கள் உட்பட பக்தர்கள் எல்லாரும் அதன்மீது நடந்து போனார்கள். "என்ன வியப்பு இது! இப்படியும் மக்களைக் காக்குமா சாமி?' என்று தான் பைனாகுலர் மூலம் பார்த்த காட்சியைத் தன்னுடன் வந்தவர்களுக்கு விளக்கிச் சொன்னதோடு, கோவிலுக்குள் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டுச் சென்றாராம் அந்த ஆங்கிலேயர்.

    தமிழகம் முழுவதும் எண்ணற்ற பச்சையம்மன்கள் ஊருக்கு ஊர் இருந்தா லும், அவர்களுக்கெல்லாம் முன்னோடி யான தெய்வம்தான் இந்த பச்சையம்ம னும் இவளது சகோதரிகளும் என்கிறார் கள் குமாரை உட்பட ஏழு கிராம மக்க ளும்!

    கோவில்களின் இருப்பிடம்

    கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெருமுளை முத்தையா கோவிலும்; அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் குமாரை பச்சையம்மன், பூமாலையப்பர் கோவி லும்; திட்டக்குடியிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தூர், வெங்கனூர் அம்மன் கோவில்களும், திட்டக்குடியிலிருந்து தென்கிழக்கே வெள்ளாற்றைக் கடந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் காளிங்கராய நல்லூர் அம்மனும், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சன்னாசி நல்லூர் அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை யாற்றின் வடகரையில் உள்ளது அரகண்ட நல்லூர் அம்மன் கோவில்.

    • குலதெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது.
    • வருடம்தோறும் இரண்டு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

    பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குலதெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது.

    ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்கு சென்று வருவது நல்லது.

    குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா? இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால், எங்கள் ஊரில் அய்யனாருக்கு குதிரை கட்டி பலரும் ஆண் பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கின்றதா?

    எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். மதம் இருக்கிறது. மதத்தில் ஜாதி இருக்கிறது. அந்த ஜாதியிலேயே 4 பிரிவு இருக்கும். ஒவ்வொரு ஜாதியிலுமே நான்கைந்து பிரிவுகள் உண்டு. ஆனால், இந்த நான்கைந்து பிரிவுகளையுமே ஒற்றுமைப்படுத்துவதுதான் இந்தக் குலதெய்வம்.

    அடுத்து, குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம்.

    குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

    எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார்.

    அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் நேரடியாகவே கனவில் வந்து பேசக்கூடியதெல்லாம் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

    ஒருவர் வந்தார். குழந்தையே இல்லை என்றார். குலதெய்வக் குறைபாடு இருக்கிறது, போயிருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், எங்களுக்கு குலதெய்வம் திருப்பதிதான் என்று சொன்னார். கண்டிப்பாக திருப்பதி கிடையாது. மரத்தடியில் இருக்கிற பெண் தெய்வம்தான் உங்களுக்கு குலதெய்வமாக வருகிறது என்று சொன்னேன். அவருடைய பாட்டியும் வந்திருந்தார்கள்.

    அவர் சொன்னார், இவன் பொய் சொல்கிறான் தம்பி, எங்களுக்கு ஆரணிக்கு பக்கத்தில் பச்சையம்மன் என்கிற குலதெய்வம் இருக்கிறது. வேப்ப மரம் இருக்கும். நடுவில் நான்கு கல் இருக்கும். அவ்வளவுதான். ஒருதடவை கூட்டிக் கொண்டு போனேன். இதெல்லாம் கல் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

    இனிமேல் திருப்பதிதான். குழந்தை பிறந்தால் முதல் மொட்டை திருப்பதிக்குதான் என்று அடம் பிடிக்கிறான். இதை குலதெய்வம் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னான். நீங்களாவது கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

    இப்படியெல்லாம் குலதெய்வத்தில் கூட பேஷன் பார்க்கிறவர்கள், அதைகூட பெருமையாக புகழ்பெற்ற கோயிலாக சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

    இவருக்கு 7 வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. அங்கு சென்று அருகில் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து உங்கள் விளை நிலத்தில் இருக்கக்கூடிய நெல்லை எடுத்து பொங்கல் வைத்து வணங்குங்கள் என்று் கூறினேன்.

    இதெல்லாம் அறிவியல் ரீதியாக நமக்கு என்னவென்று தெரியாது. பொங்கல் வைத்த 60-வது நாள் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    புகழ்பெற்ற டாக்டர்கள் பெயரெல்லாம் சொன்னார். எங்கெங்கேயோ போனேன். டாக்டர் இந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் என்று எனக்குத் தெரியவே தெரியாது என்று அழுதுவிட்டார். குலதெய்வத்திற்கு அவ்வளவு சக்தியா சார், இப்பவும் சொல்கிறேன், நாலு மரம், நாலு கல்லு சார். எப்படி சார் அது என்று கேட்டார்.

    அப்படியில்லீங்க, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம். அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா?

    அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான் குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

    குழந்தைகளுக்கு குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

    ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும். கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின.

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வ கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும்.

    ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

    • ஆன்மீகத்தில் மகா பெரியவா ஒரு என்சைக்ளோபீடியா.
    • குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு.

    ஆன்மீகத்தில் மகா பெரியவா ஒரு என்சைக்ளோபீடியா என்பது நாம் அறிந்ததே. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவர் விளக்கம் தராத சந்தேகங்களே இல்லை. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா கூறியதாக திரு.இந்திரா சௌந்தர்ராஜன் 'தீபம்' ஆன்மீக இதழில் கூறியதை நண்பர் பால்ஹனுமானின் தளம் வாயிலாக அறிந்துகொண்டதை இங்கு தருகிறேன்.

    இன்று ஏதாவது ஒரு சிக்கல் என்றால், நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதலில் போய்ப் பார்ப்பது நல்ல ஒரு ஜோசியரைத்தான்! ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம்! இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி?

    நமக்கு நேரம் நன்றாக இருந்து விதியும் இருந்தால், நன்றாக சரியான ஜோசியரிடம்தான் நாம் போய் நிற்போம். அவரும் நம் கட்டங்களைப் பார்த்து, சரியாக கணக்குப் போட்டு பின்னர் பிசகு எதுவுமில்லாமல் நமக்குத் தீர்வை சொல்லுவார்.

    நம் நேரத்தில் பிசகு இருக்கும் பட்சத்தில், ஒரு அரைகுறை ஜோசியரிடம்தான் போய் மாட்டுவோம். அவரும் அவர் அறிந்ததை கூறி, நம்மைத் தவறாக வழிநடத்தி விடுவார். இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாக இருக்கிறது. இனிப்பென்றால் கசப்பு, நெருப்பென்றால் குளிர், அதேபோல நல்லவிதமாய் ஒருவர் என்றால், தீயவிதமாய் ஒருவர்.

    இவர்கள் எப்படி இருக்கலாம் என்றெல்லாம் கேட்க முடியாது. மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே இதுதான் நிலைப்பாடு. இனியும் அது இருந்தே தீரும். ஜோதிடர்களுக்கும் இது பொருந்தும்.

    சரி, இந்த ஜோதிடர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தவறாமல் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார். அதுதான் குலதெய்வம் பற்றியது. 'உங்கள் குலதெய்வம் எது? அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா?' என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் ஒருவரே என்பதுதான் சர்வமத சித்தாந்தம்.

    நம் இந்து மதம்தான், அந்த ஒருவரைப் பலவாக ஆக்கி நாம் பக்தி செய்திட பகிர்ந்து அளித்திருக்கிறது. இது அந்தக் கடவுளை எளிதாக உணரவும், நெருங்கவும் நமக்கும் மிக வசதியாக உள்ளது. நமது தெய்வங்கள் அலங்காரமாக, ஆயுதங்களோடு இருப்பதன் பின்புலம், நம் உளவியல் நிமித்தமே என்பதுதான் நம் கடவுளர்களின் சிறப்பே!

    இதனால்தான் கடவுளோடு நாம் மிகவும் நெருங்க முடிகிறது. 'வாடா போடா' எனலாம், அப்பா அம்மா எனலாம், நண்பன் எனலாம், குருவாகவும் கொள்ளலாம். நம் குழந்தையாகவும் கருதி தூக்கி வைத்துக் கொஞ்சலாம்.

    அன்பும் பக்தியும் இருந்துவிட்டால் போதும். யோகியரும் ஞானியரும் காட்டிலும் மேட்டிலும் காலம் காலமாக தவம் செய்தும் அடைய முடியாமல் தவிக்கின்ற அந்தக் கடவுளை, நாம் மிக இலகுவாக நம் அன்றாட வாழ்வில் அடைந்து விடலாம். இதற்காகவே நமக்கே நமக்கு என்று நம் முன்னோர்கள் வீடு வாசல் என்று சொத்து சுகங்களை விட்டுச் செல்வது போல் ஒரு தெய்வத்தையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதுதான் குலதெய்வம்!

    எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும், இந்த தெய்வத்திடம் ஒரு வணக்கம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களுக்கும் எண்ணம். குலதெய்வம் என்று ஒன்று இருந்தாலே, சில சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தே தீரும். குழந்தை பிறந்தால் அதன் முதல் முடியை காணிக்கையாகத் தருவது. அதுபோக, பிள்ளை பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் குலதெய்வ வழிபாட்டு சடங்கை ஒட்டியே இருக்கும்.

    சில குடும்பங்களில், குலதெய்வ வழிபாடு என்பதே மறந்து, குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு.

    இதெல்லாமே நம் ஜாதகக் கட்டத்தைப் பார்த்தால் கணக்குப் போட்டு உணர முடியும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு இடம் உண்டு. அதில் நம் பக்தி, சாபம், திமிர், வியாதி, தரித்திரம் என்று எல்லாம் பளிச்சென்று தெரியும் விதமாக டேரா போட்டிருக்கும். இதை வைத்துத்தான் ஜோதிடரும் கேட்பார்!

    என்றால், குலதெய்வ வழிபாட்டோடு பிறதெய்வ வழிபாடுகளை குறைவின்றிச் செய்பவர்கள் எல்லோருமே ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களுக்கு துன்பமே இல்லையா என்று குயுக்தியாகக் கேட்கக் கூடாது.

    ஆக, குலதெய்வத்தை மறவாமல் போற்றி வருபவர்கள் குடும்பங்களில் பெரிய துன்பங்களுக்கு இடமில்லை. பெரிதாக ஏதாவது வந்தாலும், அது நிச்சயம் நீங்கி அந்தக் குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கையை இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுகிறது என்பது தான் அடிப்படைச் சிறப்பாகும்.

    வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.

    இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்! இந்தக் குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.

    பெரியவர் ஊர் ஊராக சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களை கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,

    சாமி, ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு" என்று துயரத்தை சொல்லி அழுதார்.

    பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?" என்று கேட்டார். குலதெய்வமா, அப்படின்னா?" – திருப்பிக் கேட்டார் அவர். சரிதான், உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?"

    ஆமாம் சாமி. வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்" என்றார்.

    உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?" ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்." அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா."

    ஏன் சாமி, அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?" அப்படித்தான் வெச்சுக்கோயேன்."

    என்ன சாமி நீங்க. ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?"

    நான் அப்படிச் சொல்லவே இல்லையே!"

    அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!"

    காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?"

    அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா. அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?"

    நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்த குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்" என்று அவரை அனுப்பி வைத்தார்.

    அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதை செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்" என்றார்.

    சபாஷ். அந்த கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்" என்றார் பெரியவர்!

    சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே. எதுவுமே சொல்லலியே?"

    அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே. பேச்சாயியை விட்டுடாதே!"

    அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

    சாமி. நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்கஞ் இந்த அதிசயம் எப்படி நடந்தது?" – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது?

    ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் 'குலதெய்வம்' என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

    நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் 'கோத்திரம்' என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

    பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

    அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

    இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?"

    பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

    அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

    ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்ஞ் நாம் யார்? அந்த தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

    இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?"

    - பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்கு புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

    நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

    இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

    ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

    எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்த கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

    ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்த குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

    • குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
    • தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

    ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

    நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

    குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

    ×