search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "late coming"

    மானாமதுரை பகுதியில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறுவதற்காக சிறு கிராமங்களில் கூட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்த ஊராட்சிக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வருவது இல்லை என புகார் எழுந்துள்ளது.

    ஒரு பள்ளியில் 2ஆசிரியர்கள் பணியாற்றினால் அதில் ஒருவர் மட்டும் பணிக்கு வருவது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் கதவு சாவியை உள்ளூரில் உள்ள மாணவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதையடுத்து அந்த மாணவர்கள் காலை நேரத்தில் வந்து அந்த பள்ளியை திறப்பது, வகுப்பு நேரம் முடிந்தவுடன் பின்னர் அந்த பள்ளியை மூடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    பொதுவாக அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமைஆசிரியர் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் நடைமுறை உள்ளது. ஆனால் மானாமதுரை பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு மேல்தான் ஆசிரியர்கள் பணிக்கு வருகின்றனர். அதன் பின்னர் அந்த பள்ளியில் முறையான இறை வணக்கம் கூட நடத்துவது இல்லை. பின்னர் மாலை 3 மணிக்கு பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களும் புறப்பட்டு சென்று விடுவாதாக கூறப்படுகிறது. இதனால் இதுபோன்று உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் கிராமப்புற பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவனுக்கு தாய் மொழியான தமிழைக்கூட வாசிக்க திணறும் அளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உள்ளது. மேலும் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது 26 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினந்தோறும் கால தாமதமாக வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நேற்று காலை 9.40 மணி வரை இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் காலை முதல் ஆசிரியர்களின் வருகைக்காக பள்ளி வாசலில் காத்திருந்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிவர ஆய்வு நடத்துவது இல்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த காரணத்தினால் கிராமப்புறத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் அந்த பள்ளிகளுக்கு வருவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுபோல் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து சென்று சரியான நேரத்திற்குள் ஆசிரியர்கள் அங்கு வருகின்றார்களா என்று ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×