search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lightning attack"

    கும்மிடிப்பூண்டி மற்றும் உத்திரமேரூரில் நேற்று பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் ராஜாபாளையம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. ராஜாபாளையத்தில் உள்ள வயல்வெளியில் பெண்கள் நேற்று வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கி பூங்காவனம் என்பவரது மனைவி மகேஸ்வரி (55) உயிரிழந்தார்.

    இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. உத்திரமேரூரை அடுத்த வயலக்காவூரில் மின்னல் தாக்கி பூபாலன் என்பவரது மனைவி பார்வதி (40) உயிரிழந்தார். அவருடன் சென்ற அனிதா (48) என்பவரது கண் பார்வை பாதிக்கப்பட்டது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
    பாடாலூர் அருகே மின்னல் தாக்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே  உள்ள உத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் விவேக் நேற்று மாலையில் அங்குள்ள ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார். கல்குவாரி குட்டை அருகே நின்ற போது இடி,மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் விவேக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விவேக் மின்னல் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு காரணமா?  என விசாரித்து வருகிறார்கள். 
    வேடசந்தூர் அருகே மின்னல் தாக்கியதில் தி.மு.க பிரமுகர் உள்பட 2 பேர் மற்றும் பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. குஜிலியம்பாறையை சேர்ந்த கணேசன்(வயது38). இவர் பாளையம் பேரூராட்சி ராமகிரி தி.மு.க வார்டு செயலாளராக இருந்தார். நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் 100 நாள் வேலைக்கு சென்ற சாமிமுத்தன் பட்டியை சேர்ந்த மரியசெல்வம்(35). மழைக்காக மரத்தின் அடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாத புரத்தை சேர்ந்த உமாசங்கர்(40). தோட்டத்தில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு இரவு பெய்த மழையின்போது மின்னல் தாக்கி சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு பலியானது. இதேபோல் ஆர்.ஜி.வலசை சேர்ந்த மாலதி என்பவரது பசுமாடும் மின்னல் தாக்கி பலியானது.

    திண்டுக்கல் அருகே நேற்று இரவு மழை பெய்தபோது இடி விழுந்து 2 வீடுகள் சேதமானது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மழை பெய்யும் சமயங்களில் வீடுகளுக்குள்ளே முடங்கி விடுகின்றனர்.

    மழை பெய்ய ஆரம்பித்தவுடன் மின் இணைப்பும் துண்டிக்கபடுவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். நேற்று மாலை சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அம்பாத்துரையில் ஜவுளி வியாபாரி மோகன்ராஜ், அருகில் வசிக்கும் கோழிக்கடை மாணிக்கம் ஆகிய 2 பேர் வீடுகளிலும் இடி விழுந்தது. அந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்களே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது இருவரது வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

    மேலும் மின் இணைப்புகள் அனைத்தும் தீ பிடித்து எரியத் தொடங்கியது. கட்டில்கள் மற்றும் ஆடைகளில் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்தவாறு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டில் உள்ள பொருட்களும் சிதறி ஓடியதுடன் மிகப்பெரிய பள்ளம் உண்டானது. இடி விழுந்தால் என்ன ஆகும் என்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு நேற்று கண்கூடாக தெரியவந்தது. மழை பெய்த நேரத்தில் மின்சாரம் இருந்ததால்தான் மின் சாதனங்கள் எரிந்துள்ளதாக மின்வாரிய ஊயர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    காவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூர் பக்கமுள்ளது பெரமன்கொட்டாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னவன், கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பெருமா. இவர்களின் மகள் பிரியா (வயது 13). இவர் பன்னிஅள்ளிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று மாலை சிறுமி பிரியா தனது தாயாருடன் வீட்டு அருகில் உள்ள கிணற்று பக்கத்தில் துணி துவைத்து கொண்டிருந்தாள். அந்த நேரம் திடீரென்று பலத்த இடி சத்தத்துடன் மின்னல் ஏற்பட்டது. இதில் மின்னல் தாக்கி சிறுமி பிரியா பலத்த காயம் அடைந்தாள். மேலும் அருகில் இருந்த தாய் பெருமா மயக்கம் அடைந்தார்.

    இதை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி பிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவளது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் தாய் பெருமாவிற்கு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்னல் தாக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    கமுதியில் நேற்று கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பமான சூழல் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதற்கிடையில் மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் கலையரசு (வயது 32).

    கீழக்கொடுமலூரை சேர்ந்த வேங்கைமுத்து என்பவரின் மகனான கலையரசு, கருவேல மரங்கள் வெட்டியபோது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மின்னல் தாக்கி இறந்த கலையரசுவிற்கு புஷ்பலதா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ×