search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liver donate"

    தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க ஊனமுற்ற தந்தை 45 நாளில் உடல் எடையை 8 கிலோ குறைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் உப்பாலையா (40). சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் 2 கால்களும் ஊனம் அடைந்தவர். தற்போது தையல் தொழிலாளியாக பணிபுரிகிறார்.

    அவரது மனைவி விவசாய கூலி வேலை செய்கிறார். இவர்களது மகன் சசிகிரண் (15). இவன் ‘கிரைப்போ ஜெனி சிர்கோசிஸ்’ என்ற கல்லீரல் நோயினால் அவதிப்பட்டான். அதன் காரணமாக அவனது கல்லீரல் செயல்படவில்லை.

    அதற்காக ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவன ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். மற்றவர்களிடம் இருந்து மாற்று கல்லீரல் தானம் பெற்று பொருத்தினால் தான் சசிகுமார் உயிர் பிழைப்பான் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

    ஆனால் கல்லீரல் தானம் பெற்று ஆபரேசன் செய்வோர் பட்டியலில் சசிகுமார் 12-வது இடத்தில் இருந்தான். இதனால் அவனது உயிருக்கு ஆபத்து நெருங்கி கொண்டே இருந்தது.

    இந்த நிலையில் அவனுக்கு கல்லீரல் தானம் வழங்க அவனது தந்தை உப்பாலையா தயாராக இருந்தார். ஆனால் அதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது.

    அதாவது தானம் செய்பவரின் கல்லீரலில் 5 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அதற்கும் அதிகமாக இருப்பதை லேப்ராஸ்கோப்பி கருவி காட்டிக் கொடுத்தது.

    எனவே உடல் எடையை குறைந்தது 4 கிலோவாவது குறைக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட உப்பாலையா முதலில் தனது மகனுக்காக உடல் எடையை 4 கிலோ குறைத்தார். அது போதாது என டாக்டர்கள் கூறியதால் மீண்டும் 4 கிலோ எடையை குறைத்தார்.

    45 நாட்களில் தனது உடலை வருத்தி 8 கிலோ எடையை குறைத்தார். அதன் பின்னர் சசிகுமாருக்கு கல்லீரல் மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டது. உப்பாலையா உடலில் 330 கிராம் எடை கல்லீரல் எடுக்கப்பட்டு சசிகுமாரின் உடலில் பொருத்தப்பட்டது. டாக்டர் பீரப்பா தலைமையிலான குழுவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இது உயிருடன் இருப்பவரிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்று செய்த முதல் உறுப்பு மாற்று ஆபரேசன் ஆகும்.

    ஆபரேசன் நடைபெற்ற 7 நாளில் உப்பாலையா நலமுடன் வீடு திரும்பினார். சசிகுமார் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    உடல் எடையை குறைத்தது குறித்து உடல் ஊனமுற்ற தந்தை உப்பாலையா கூறும்போது, “தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தேன். அரிசி சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்தேன். ஜுஸ் வகைகளை நிறைய குடித்தேன். முதலில் 4 கிலோ குறைத்தேன். மேலும் உடல் எடை குறைக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியதால் மீண்டும் 4 கிலோ என 8 கிலோ எடை குறைத்தேன்” என்றார். #LiverTransplant #Polio

    ×