search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Machapurana"

    • செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.
    • எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாய்க்கு, `அங்காரகன்' என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தை புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளை கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்கு சென்று அங்குத்தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி. தேவியைப்பிரிந்து யோகத்தில் இருந்த சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வியர்வை உண்டாகி பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு `பூமி புத்திரன்' என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரிய பதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும் பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும், அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும் பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    பழனி

    முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய்ப்பகவன் வழிபட்டார்.

    பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும். பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும். பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனைத்தரிசிக்க வேண்டும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

    அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக்கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும். சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும். திருமண தோஷத்திற்கு மட்டும் கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மேலக்கடம்பூர்

    சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு செல்லும் சாலையில் மேலகடம்பூர் உள்ளது. கருவறையின் அடிப்பாகம் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் சக்கரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    செவ்வாய் பகவான் வழிபட்டதோடு அவரது அதிதேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டுவில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும். எனவே இத்திருத்தலம் செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.

    திருச்சிறுகுடி

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதை யில் சென்று கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையை கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம். இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு. அதனால்தான் செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர்-மங்கள விநாயகர் என்றும், இறைவன்-மங்கள நாதர் என்றும், அம்பாள்-மங்கள நாயகி என்றும், தீர்த்தம்-மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள் விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்று செல்ல வேண்டும். முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும். மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித்தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    ×