search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai court"

    • மதுரை எய்ம்ஸ் தொடர்பான பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
    • மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..?" என்று ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

    அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது.

    கொரோனா 2022-ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
    • விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974-ம் ஆண்டு வரை 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பசுமையான காடுகளாக இருந்தன. இவை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குளங்களுக்கு நீராதாரமாக விளங்கியதோடு, விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது. ஆனால் 1974-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வணிக நோக்கில் யூகலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழக வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.

    இந்த மரங்களை வளர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கிராமங்களில் உள்ள கண்மாய் குளம் நிறையாமல் விவசாயம் தடைபடுகிறது.

    இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது.

    ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நகர் மயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்தால் தான் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது.

    நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம்.

    காகித ஆலை வேண்டுமா, உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால், இதற்காக ஆங்காங்கே ஏற்படுத்தும் தடுப்புகளால், சமவெளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
    • விளக்கம் அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கும் படம் இந்தியன்-2. இந்த திரைப்படம் ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது.

    இதற்கிடையே மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனுவில், லைகா புரெடக்ஸன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது, அந்த படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத் தப்பட்டது. அதற்காக எனது பெயரும் அந்த படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது, இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

    அதில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தின் வர்மக் கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பாக எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்த வில்லை. எனவே படத்தை எந்த தளம் வாயிலாகவும் வெளியிடக்கூடாது. குறிப்பாக திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி. தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட நிரந்தர தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை மதுரை மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி செல்வ மகேஸ்வரி வழக்கு விசாரணைக்கு உகந்ததாக கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக எதிர் மனுதாரர்களான கமல்ஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன் ஆகியோர் மனு குறித்து தங்களது ஆட்சேபனையை நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாக அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
    • இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.

    இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

    இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • இருவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
    • இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சரண்

    மோடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

    பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சரணடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
    • பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள்ளன.
    • ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங் கம் சுவாமி மலையில் மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடை பெறும். நவராத்திரி திரு விழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கபட்டது. ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலிப்குமார் ஆஜரானார்.

    வனத்துறை சார்பில் ஆஜ ரான வக்கீல், சாத்தூர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புலிகள் சரணாலய பகுதியாகவும் உள்ளதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் திருவிழா நேரத்தில் பக்தர்களை அனுமதித்த போது பக்தர்கள் மாற்றுவழியில் வனத்திற்குள் நுழைந்து உணவு சமைத்ததால் வனத்தில் தீ பற்றிய சம்பவம் ஏற்பட்டு வன விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

    குறைந்த அளவில் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களை அனுமதிப்பது என்பது இயலாதது. வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள் ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ளன. போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்று தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, பக்தர்கள் மற்றும் சாதுக்களின் உணவுர்களை புரிந்து கொண்டு ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு அனுமதி வழங்க முடியாதா? பக்தர்களை கோவிலில் தங்க அனுமதிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரமாவது தரிசனத்திற்கு அனுமதிக்கலாமே? அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கலாமே.

    வனத்துறைக்கு நிறைய பணிகள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என கேட்பார்கள். அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல போட்டுவிட்டு செல்வார்கள். இது தான் வாடிக்கையாக நடக்கிறது.

    அன்னதானம் போடுகிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணத்தை வசூல் செய்து கோவில் பெயரை சொல்லி வனத்தை மொத்தமாக குப்பைக்காடாக மாற்றுகிறீர்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    மேலும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வனப்பகுதியில் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் மதுரை விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

    • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    • முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து விழா தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். #ParliamentEelection #HCMaduraiBench

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட அங்கு கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமி‌ஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ParliamentEelection #HCMaduraiBench

    பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் இன்று மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    மதுரை:

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் பொட்டு சுரேஷ் இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ல் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

    இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டியை சேர்த்தனர். இதில் தொடர்புடைய பலரை கைது செய்தனர்.



    ஆனால் அட்டாக்பாண்டி தொடர்ந்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். பின்னர் 2015-ம் ஆண்டு மும்பையில் அவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தனக்கு ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்த மனுக்களை 5க்கும் மேற்பட்ட முறை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சபா ரத்தினம் என்பவர் கடந்த 5 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

    அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று காலையில் அவர் மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.


    ஸ்டெர்லைட் அலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. #ThoothukudiIncident #SterliteProtest

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி எஸ்.ஜே. வசிப்தார் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஜே. வசிப் தார் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாவார்.

    நீதிபதி வசிப்தார் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.


    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா கூறுகையில், நீதிபதி வசிப்தார் பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ஆனால் அவர் தன்னிச்சையாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதை ஏற்க முடியாது என்றார். #ThoothukudiIncident #SterliteProtest

    சிவகாசி வங்கி ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார்.
    மதுரை:

    சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன் (வயது 25). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து பாலமுருகனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் செங்மலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவலின்பேரில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை கடத்தி சென்றது யார் என்பது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துராமலிங்கபுரம்காலனியை சேர்ந்த சித்திரைவேல், மணி என்ற பள்ளமணி, ஜோதி, கார்த்திக் என்ற குட்டைகார்த்திக் உள்பட சிலர் மீது சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகாசி விவேகானந்தர்காலனியை சேர்ந்த ராஜபாண்டி மகன் சிவசக்திபாண்டியன்(23), சர்க்கரை மகன் கிருஷ்ணன் (25), முருகன் மகன் பாலமுருகன் (24), ராமசாமி மகன் சித்திரைவேல் (30) ஆகிய 4 பேரும் நேற்று மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.

    ×