search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maduravoyal flyover road"

    பறக்கும் சாலை திட்டப் பணிகள் புதிதாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படுகிறது. மேலும் மதுரவாயல்- பூந்தமல்லி வரை நீடிக்கப்படுகிறது. #MaduravoyalFlyover
    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், துறைமுகத்துக்கு எளிதில் கண்டெய்னர் லாரிகள், சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தி.மு.க. ஆட்சியில் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் நடந்து வந்தது.

    2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி பறக்கும் சாலை திட்டத்தை நிறுத்தி வைத்தார். 6 ஆண்டுகளாக பறக்கும் சாலை திட்டம் முடக்கப்பட்டது.

    இந்த நிலையில் 19 கிலோ மீட்டர் துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.2,400 கோடி மறுமதிப்பீட்டில் எல் அண்ட் டி நிறுவனம் இந்த பணிகளை செயல்படுத்துகிறது. துறைமுகம் நேப்பியர்பாலம் அருகில் 14,000 சதுர மீட்டர் கடற்படை நிலம் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஒப்பந்தப் பணிகள் மூலம் இந்த திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து கூவம் ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை பில்லர் அமைக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    2-வது கட்டமாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் பூந்தமல்லி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகள் ரூ.2,400 கோடியில் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் மதுரவாயல்- பூந்தமல்லி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை திட்டப்பணிகள் நீட்டிக்கப்படுகிறது. எல் அண்ட் டி நிறுவனம் பறக்கும் சாலை திட்டப் பணிகளை மேற்கொள்கிறது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் முயற்சியில் இந்த பணிகள் நிறைவேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduravoyalFlyover
    ×