search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalayam"

    • பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர்.
    • கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும்.

    மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என வலியுறுத்துகிறது இந்து மதம். அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர். தென்புலத்தார் வழிபாடு என இதன் சிறப்பை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' என்று இல்லறத்தானின் கடமையாக வலியுறுத்தியுள்ளார்.

    இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களும்!

    பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளயபட்சமாகும்.

    நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவர செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.

    இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள்.

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

    மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

    மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். `மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது' என்பது பழமொழி.

    இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள்- குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

    மஹாளய பட்ச தர்ப்பண பலன்கள்!

    பிரதமை : செல்வம் பெருகும் (தனலாபம்)

    துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)

    திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்

    சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

    பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

    சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

    சப்தமி : மேலுலகோர் ஆசி

    அஷ்டமி : நல்லறிவு வளரும்

    நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

    தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

    ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

    துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

    திரியோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

    சதுர்த்தசி : முழுமையான இல்லறம் (கணவன் - மனைவி ஒற்றுமை)

    அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்

    (ஆதாரம்: யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்)

    ×