search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markandeyar"

    • எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டு பூஜித்தான்.
    • பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபு.

    கால பைரவர் வழிபட்டுப் பூஜை புரிந்த லிங்கம் காசி லிங்கம் என்ற பெயருடன் உள்ளது. சப்தரிஷிகள் காளத்தீஸ்வரரைப் பூஜித்த பின்னர் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர். இவர்கள் பூஜை செய்த ஏழு லிங்கங்களும் மற்றும் எமன் பூஜை செய்த எமலிங்கமும் சித்திரகுப்தன் வழிபட்ட சித்திரகுப்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டுப் பூஜித்தான்.

    மார்கண்டேயர், அகத்தியர், வியாசர் போன்ற பலப்பல முனிவர்களும் வாயுநாதனை வழிபட்ட பிறகு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் மார்கண்டேய லிங்கம், அகத்திய லிங்கம், வியாச லிங்கம் என்ற திருநாமங்களுடன் விளங்குகின்றன. மகாபாரதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பு வியாசர் வழிபட்ட திருத்தரங்களில் திருக்காளத்தியும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களான சீனிவாசன், ராமன், கண்ணன் ஆகியோர் காளத்தி ஞானப்பிரகாசத்தைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.

    சீனிவாசனும், வேணுகோபாலன் கோவிந்தராஜன் என்ற பெயர்களுடன் கண்ணனும் உள்ளனர். ராமன் பிரதிட்சை செய்து பூஜித்த லிங்கம் ராமச் சந்திரலிங்கம் என்ற திருநாமத்துடன் உள்ளது.

    சீதை, அனுமன், பரதன் ஆகியோர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களும் ராமன் சீதை உருவங்களும் உள்ளன. ராமனுக்கு அருள் புரிந்த காளத்தீஸ்வரர் ராமேஸ்வர் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியில் உள்ளார். இந்த லிங்கம் வெண்மையாக உள்ளது.

    பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் பிரதிட்டை செய்து பூஜித்த லிங்கம் தருமலிங்கம் என்ற பெயருடன் திகழ்கின்றது. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களுக்கு உரிய ஆறு ஆதாரச் சக்கர லிங்கங்களும் ஐந்து முகம் கொண்ட பஞ்சானன லிங்கமும் பூஜை செய்வதற்கு மிகச் சிறப்பாக விளங்குகின்ற ஸ்படிக லிங்கமும் உள்ளன. பின்புறம் எரிந்து கொண்டிரக்கும் விளக்கினால் ஸ்படிக லிங்கத்தில் அடிமுடியில்லாத ஜோதி தரிசனம் கிடைக்கின்றது.

    திருக்காளத்திக் கோவிலுக்குக் கல்லாலமரம், வில்வ மரம் ஆகியவை தலமரங்களாகவும் பொன்முகலி எனப்படும் ஸ்வர்ணமுகி நதி புனிதத் தீர்த்தமாகவும் விளங்குகின்றது. காளத்தி நாதர்த் திருக்கோயில் கோபுரங்களையும் மண்டபங்களையும் பிரகாரங்களையும் பலப்பல சன்னதிகளையும் கொண்டுள்ள பெரிய கோயிலாகும்.

    சோழர், பாண்டியர், விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், நகரத்தார் ஆகியோர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நூற்றியெட்டு லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் ஆகியவற்றோடு சோழலிங்கம், பாண்டிய லிங்கம், தெனாலி லிங்கம் ஆகிய லிங்கங்களும் உள்ளன.

    இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த ராமநாதன் செட்டியாரின் ஆள் உயரச் சிலையும் கோவிலில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் மிகப்பெரிய திருப்பணிக்கான திட்டம் வகுத்து அது அவருடைய வாழ்நாளுக்குள் முற்றுப் பெறாமல் நின்று போய் விட்டது என்பதைக் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரிய கோபுரம் தெரியப்படுத்துகின்றது.

    கோவிலின் உள்ளே கல்வெட்டுக்களால் நிரம்பிய காசி விஸ்வநாதர்க் கோவில் மிகவும் சிதலமடைந்து உள்ளது. கொடி மரத்திற்கு அருகே பலிபீடம் லிங்கம் ஆகியவற்றை எட்டு யானைகள் சுமந்து நிற்பது போல் அமைந்துள்ளன. அருகே யோகியுடன் கூடிய சிறிய லிங்கம் உள்ளது.

    ஓங்கார வடிவமாகிய லிங்கத்தில் மகரப் பகுதியாகிய பீடமும் உகரப் பகுதியாகிய ஆவுடையாரும் இல்லாமல் அகரப் பகுதியாகிய பாணம் மட்டுமே உள்ள லிங்கமும் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சன்னதியும் மற்றும் பலப்பல லிங்கங்களும் காணப்படுகின்றன. சிற்பத் தூண்களுடன் கூடிய லிங்க சன்னதிகளும் சிலந்தி, யானை, பாம்பு ஆகியவை சிவபூஜை செய்யும் திருக்காளத்தில் தல வரலாற்றைக் காட்டுகின்ற தனிச் சன்னதியும் உள்ளன.

    திரும்பிய பக்கமெல்லாம் சன்னதிகள்

    திருவண்ணாமலையில் மாணிக்க வாசகப் பெருமானுக்குக் காட்சி தந்தருளிய பரமனின் திருவடிகளுக்குச் சன்னதியுள்ளது போன்று திருக்காளத்தியிலும் ஈசன் திருவடிகள் காணப்படுகின்றன. திருவடிச் சன்னதியில் திருவடிகளுக்கு முன்பு நந்தியும் எழுந்தருளியுள்ளது.

    ஒருபுறம் விஸ்வநாதர் கோவில் சிதலமடைந்துள்ளது போன்றே மறுபுறம் மலையேறும் பாதையுள்ள கோபுரத்தின் அருகே மணிகங்கை என்னும் பொன் முகலி நதியைத் தோற்றுவித்த மணிகங்கேசர்க் கோவில் முற்றிலும் சிதைந்துள்ளது. உள்ளிருக்கும் மண்டபத்தின் சுவர்களில் பாம்பு சிலந்தி யானை ஆகியவை வாயுலிங்கப் பொருளை வழிபடுவதைக் காட்டும் வண்ண வண்ண அழகிய ஓவியங்கள் சிதைந்து போயுள்ளன.

    இந்த மண்டபத்தில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் மேலே நான்கு முக லிங்க சன்னதி உள்ளது. நான்கு முகங்களையும் நன்றாகச் தரிசனம் செய்யும் வகையில் நான்கு புறமும் சிறு சிறு சாளரங்கள் உள்ளன. எல்லாச் சிவலாயலங்களிலும் உள்ளது போல் திருக்காளத்தீஸ்வரர்க் கோவிலிலும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    பெரிய நடராஜர், சிறிய நடராஜர் என்று இரண்டு ஆடல்நாயகன் திருவுருவங்கள் உள்ளன. அறுபத்து மூவர் சன்னதியோடு திருமுறைச் சன்னதியும் உள்ளது. நந்தியும் சண்டீசரும் பைரவரும் தங்கள் தங்கள் பதவிக்கு ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபாக உள்ளது.

    பிரம்மன் சிரம் அரிவதற்காக பைரவரைத் தோற்றுவித்த பைரவநாதர் எனப்படும் சிவ பைரவரும் வேட்டை நாய்கள் சூழத் தனிச் சன்னதியில் எதிரே நந்தியோடு எழுந்தருளியுள்ளார். பிரணவப் பெருமாள் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் இந்தக் கோலத்தைப் போற்றியுள்ளார்.

    சுந்தர கணபதி, பாலகணபதி, வல்லப கணபதி, இலக்குமி கணபதி, உக்தி கணபதி, பூத கணபதி, சக்தி கணபதி என்று பலப்பல விநாயகர் திருவுருவங்களும் சன்னதிகளும் உள்ளன. இவையே யன்றி பாதாள விநாயகர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. கிணற்றில் இறங்குவது போன்று குறுகலான படிகள் வழியே இறங்கிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    உடுப்பி பால சுப்பரமணியர் சன்னதி, முருகன் சன்னதி என்று முருகனுக்குச் சன்னதிகள் உள்ளன.

    திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் திருக்காட்சி பெற்ற மாணிக்க வாசகப்பெருமானுக்கு ஆதியண்ணாமலையார்க் கோவில் கோவில் இருப்பது போன்று காளத்தியில் மலையுச்சியில் குடுமித் தேவரின் திருக்காட்சி பெற்ற கண்ணப்பருக்கு கோவில் உள்ளது. மலையுச்சியில் வில்வ மரத்தடியில் எழுந்தருளியுள்ள குடுமித் தேவரை சிவகோசரியார்எ ன்ற முனிவரும் கண்ணப்பரும் வழிபட்டனர்.

    பதினாறே வயதான கண்ணப்பர் முதல் முறையாக வேட்டைக்குச் சென்ற போது மலைமேலுள்ள குடுமித் தேவரைக் கண்டு ஆராத அன்பு கொண்டு அங்கேயே தங்கி விட்டார். ஆறு நாட்கள் உணவும் உறக்கமும் இன்றி சதாசர்வ காலமும் சிவ நினைவோடு குடுமித்தேவரின் அருகே இருந்தார்.

    ஒரு உறுப்புக்கு மாற்று உறுப்பு வைத்து சிகிச்சை செய்யும் மருத்துவம் உள்பட பல விதமான கலைகளையும் பதினாறே வயதான கண்ணப்பர் கற்றுத் தேர்ந்ததை Ôகலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்குÕ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றுகின்றார். வேறு யாருக்குமே இருக்க முடியாத இறையன்பினைக் கண்ணப்பர் கொண்டிருந்ததை இறைவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.

    திண்ணன் ஈசனுக்குக் கண்டு அப்பியதால் கண்ணப்பன் என்று பெயர் பெற்றார். திருமாலும் இறைவனுக்குத் தாமரை மலராகத் தன் கண்ணை வைத்துப் பூஜை செய்ததால் தாமரைக் கண்ணன் என்று பெயர் பெற்றார். இருவருடைய வழிபாட்டிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வேறுபாடு உள்ளது.

    விஷ்ணுவின் வழிபாடு பிரதிபலனை எதிர்ப்பார்த்து. பரம்பொருளிமிருந்து சுதர்சனச் சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபூஜை செய்தார். சிவபூஜை தடைப்பட்டு விட்டால் சக்கரம் கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் பூஜையைத் தடையின்றி முடிப்பதற்காக குறைந்து போன தாமரை மலருக்குப் பதிலாகத் தன் கண்ணைப் பறித்து வைத்து அதிர்த்துப் பூஜையை முடித்தார். இத்தகைய அன்பினை, பக்தியை எல்லோரிடத்திலும் காண முடியும்.

    ஆனால் கண்ணப்பர் வழிபாடு செய்தது இறைவனுக்காக எந்தவிதமான பிரதிபலனும் கருதாது ஈசனுக்காக தன் ஒரு விழியை மட்டுமன்று இரண்டாவது கண்ணையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். இத்தகைய பக்தியை யாரிடத்திலும் காண முடியாது.

    தாட்சாயிணியாக, பார்வதியாக, மீனாட்சியாகப் பிறந்து வளர்ந்த போதும் மற்றும் காமாட்சி, விசாலாட்சி என்று எந்தப் பெயரில் எங்கு வந்த போதும் பல்லாண்டுகள் தவமும் பூஜையும் செய்த பின்புதான் பராசக்தியால் பரமேஸ்வரனைக் காண முடிந்தது. பரம்பொருளைக் கணவனாக அடைய வேண்டும், குற்றம் குறை நீங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

    ஆனால் கண்ணப்பரோ ஆறே நாட்களில் அகிலாண்டேஸ்வரரின் திருக்காட்சி கண்டு அவனது திருக்கரத்தால் தீண்டப் பெறும் பெறுதற்கு அரிய பெரும் பேறு பெற்றார். அவருடைய தன்னலமில்லாத பக்தி, இறைவனுக்காக இறைவனை வழிபட்ட மெய்யன்பு ஆயிரம் ஆண்டுகள் தேடித் திரி¢ந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாத பரமேஸ்வரனது திருக்காட்சியை ஆறே நாட்களில் கூட்டு வித்தது. மீண்டும் வந்து பிறக்காத பேரின்ப முக்தியையும் அருளச் செய்தது.

    கண்ணப்பரைப் போற்றாத பக்தர்கள் இல்லை எனலாம். சங்கப் புலவர்களின் பாடல் முதல் தற்காலத்துக் கீர்த்தனைகள் வரை கண்ணப்பர் போற்றப்படுகின்றார். கிடைத்துள்ள தேவாரத் திருமுறைகளை நோக்கும்போது ஏழு வயது வேதியர் சண்டீசரும் பதினாறு வயது கண்ணப்பருமே மிக அதிகமாகப் போற்றப்பட்டுள்ளனர்.

    மலையுச்சியில் உள்ள கண்ணப்பர்க் கோவிலில் ஆள் உயரப் பெரிய கண்ணப்பருக்கு அருகே அப்புனிதப் பெருமனைப் பெற்றெடுத்து உலகத்திற்குத் தந்த தாயாரின் சிறிய உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. கண்ணப்பர் சிவகோசரியார் வழிபட்ட லிங்க மெய்ப்பொருள் இன்றும் வில்வ மரத்தடியில் திறந்த வெளியிலேயே உள்ளது.

    கண்ணப்பருக்கும் சிவகோசரியாருக்கும் திருக்காட்சி தந்த காட்சியருளிய நாதர்க் கோவிலும் கண்ணப்பர்க் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. மலையுச்சியில் மட்டுமன்றி கீழே ஞானப்பிரகாசம் எழுந்தருளியுள்ள அடிவாரக் கோவிலில் கொடி மரத்திற்கு அருகேயும் கண்ணப்பர் உள்ளார்.

    காளத்திக் கணநாதரை தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அஞ்ஞானம் விலகுகின்றது. தீராத நோய் தீர்கின்றது. பிறவிப் பிணி நீங்கிப் பிறவாப் போரின்பம் உண்டாகின்றது. எல்லாவிதமான கிரக தோஷங்களும் குற்றங்குறைகளும் நீங்குகின்றன.

    • புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் மடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
    • தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதி வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் மடத்தில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

    புதுவை ஆதீனம் சாய் சித்தர் சந்திரசேகர சாமிகள் முன்னிலையில் சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரர் பெருமானுக்கு 4 கால பூஜை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.

    தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதி வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் நாகராஜ், ராஜ்குமார், சிவகந்தன், சிவகிரி, சாய்மணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×