என் மலர்
நீங்கள் தேடியது "Mastan"
- டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராகவும், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் என்று முதலமைச்சர் கூறினார்.
சென்னை:
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத் தலைவருமான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
டாக்டர் மஸ்தான் உடல் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது.
தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஸ்தான் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.
அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறு பான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.