search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MeTooIndia"

    உண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu
    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

    சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.



    மதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

    ‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.

    சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

    அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.

    படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

    அப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.

    அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.

    தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu

    மீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam
    மீடூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மேலும் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    இந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது. 

    சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுபற்றி கேட்டதற்கு, உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.



    இன்று மாலை இந்த வி‌ஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த வி‌ஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடிவு செய்துள்ளனர். #MeToo #NadigarSangam

    ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தானும் பாலியல் தொல்லைகளை சந்தித்திருப்பதாக கூறியுள்ளார். #MeToo #YaashikaAnand
    பெண்கள் சினிமா உலகில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில், மீ டூ இயக்கத்தின் மூலம் கூறி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கும் இந்தப் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது. நான் பட வாய்ப்பு கேட்டு செல்லும் சமயத்தில் எனது ஆடையைச் சரிசெய்வது போலவும், முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்லித்தருவது போலவும் என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர்.

    இதுதவிர பொதுவெளியில் என்னை இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாகச் சீண்டினார். என் வீடு அருகே இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சி செய்தார். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் எனக் கேட்கும் வீடியோ வெளியானது; அந்தப் பெண் நான் தான்” என்றார்., 



    இது குறித்து புகார் தெரிவித்திருக்கலாமே என்று கேட்டதற்கு, “காவல் துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். சில போலீசார் கூட என்னைத் தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் துணிந்து வெளியில் சொல்லி தவறானவர்களை அடையாளம் காட்டும்போதுதான், பாலியல் தொல்லைகள் குறையும்” என்றும் கூறியுள்ளார். #MeToo #YaashikaAnand

    ‘மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார். #MeToo #RadhaRavi #ChinmayiSripada
    வைரமுத்து, அர்ஜூனை அடுத்து தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பத்திரிகையாளர்கள் காலை பிடித்து கேட்கிறேன். எது உண்மையோ அதை மட்டும் எழுதுங்கள். நாம் எல்லோரும் ஒண்ணு இல்லையா?. யாராவது புகார் கொடுத்தால் அதைப் பற்றி விசாரித்து பதிவு செய்யுங்கள்.

    சின்மயி நல்ல குழந்தைதான். ஆனால் அவங்களை யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது. எங்க டப்பிங் யூனியன்லகூட அந்தப் பொண்ணு உறுப்பினராக இருக்கு.

    சின்மயி இப்போது பாடுறதை விட்டுட்டு பேசுறதுக்கு ஆரம்பிச்சிருச்சு போல. இது இப்படியே வளர்ந்தால் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக மீ டூ இருக்கும். சம்மதம் இல்லாமல் எந்த குற்றமும் நடப்பது இல்லை. ‘மீ டூ’ வை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் ‘பிளாக்மெயில்’ செய்வார்கள்.



    இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அர்ஜூனும் நல்ல பையன்தான். அவர் மேல போய் இப்படி சொல்லியிருக்காங்க. நான் கெட்டவார்த்தை பேசுறேன்னு சொல்றாங்க.. ஒருபடம் முழுக்க கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க. நான் அதற்காக வெற்றிமாறனை பாராட்டுகிறேன். அந்த படமே வடசென்னை மக்களை பற்றிய படம். அந்த மக்கள் பேசுவதை அப்படியே தான் காட்ட முடியும்.

    எப்போது நடந்தது என்று கேட்டால் சின்மயிக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஸ்போர்ட் காணாமல் போனது என்பதை ஒரு காரணமாக சொல்கிறார். இன்று இருக்கும் டெக்னாலஜிக்கு ஒரு சில நிமிடங்களிலேயே நாம் எந்த நாட்டுக்கு எப்போது போனோம் என்பதை கூற முடியும்.

    சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது. இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு சங்கத்தில் பொறுப்புகளில் இருக்கும் விஷால் முன்வர வெண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சினிமா என்றாலே இப்படித் தான் என்று ஆகிவிடும். மீடூவை வைத்து பிளாக் மெயில் பண்ண தொடங்கிவிடுவார்கள். இப்போதே தொடங்கி விட்டார்கள். உடனடி நடவடிக்கை வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #MeToo #TimesUp #RadhaRavi #ChinmayiSripada

    என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுபற்றி தைரியமாக வெளியில் சொல்ல முன்வரவேண்டும் என்று பாடகி சின்மயி மீண்டும் தெரிவித்துள்ளார். #MeToo #Timesup
    கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக இன்று பாடகி சின்மயி தனது முகநூல் நேரலையில் விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்தில் நடந்த வி‌ஷயத்தை நான் தாமதமாக சொன்னதற்கு காரணம் உண்டு. திருமணம் முடியும் வரை என்னை என் தாயார் பார்த்துகொண்டார். திருமணத்துக்கு பின் அவர் ஓய்வெடுத்து வருகிறார். இது அனைவருக்குமே தெரியும்.

    பொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் சிலரால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். நடிகைகளிடம் கேட்டால் நிறைய வெளிவரும். பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், கைதி போல நடத்துவார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்லாமல் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்.



    நான் தந்தையில்லாமல் வளர்ந்தவள். 10-ம் வகுப்புக்கு பின் கல்லூரிக்கு போகவில்லை. தபாலில் படித்து முடித்தேன். கன்னத்தில் முத்த மிட்டால் ரிலீசுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நான் பாட வேண்டிய நேரத்தில் என்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். அப்போது நான் ஒரு சிறிய பாடலை பாடினேன். பாடி முடித்ததும் என்னை தள்ளிவிட்டார்கள். கீழே விழுந்தேன்.

    இது எல்லோருக்கும் தெரியும். அப்போது வைரமுத்து என் தாயாருக்கு போன் பண்ணி நலம் விசாரித்தார். நான் அவர்மீது வைத்திருந்த மதிப்பு அதிகமானது.

    சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன்.

    எனக்கு ஜெர்மன் மொழி நன்றாக தெரியும். நாங்கள் சுரேஷ் வீட்டில் பாதுகாப்புக்காகவும் சுரேஷுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதற்காகவும் அவர் வீட்டில் தங்கினோம். சுரேஷ் தன் சொந்த மகளையே வைரமுத்துவை பார்க்க தனியாக அனுப்ப தயங்கியது நினைவிருக்கிறது.

    நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார்.

    அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை.



    இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும். இருந்தும் ஏன் மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    அப்போதே ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. இப்போதே நான் சொல்வதை நம்பாத இந்த தமிழ் சமூகம் அப்போது சொல்லியிருந்தாலும் ஒப்புக் கொள்ளவா போகிறது? அப்போது சில மீடியாக்கள் தான் இருந்தன. நான் கூறியிருந்தால் அது வெளியிலேயே வந்திருக்காது.

    இப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள். ஆதார் கார்டு முதல் பணமதிப்பிழப்பு விவகரம் வரை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.

    திருமணத்தில் வைரமுத்துவிடம் ஆசி வாங்கியதை கிண்டல் செய்கிறார்கள். திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க பட்டியல் போடும் போது சினிமா பிஆர்.ஓக்கள் முதல் பெயராக வைரமுத்து பெயரைத் தான் சொல்வார்கள். நான் வேண்டாம் என்று சொன்னால் அது தவறாகிவிடும். என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுபற்றி தைரியமாக வெளியில் சொல்ல முன்வரவேண்டும்.



    ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் ஐயா பேசும்போது தான் மற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு வைரமுத்துவுக்காக வந்ததாக கூறினார். இந்த அளவுக்கு அரசியல் பலமிக்க ஒருவரை எதிர்ப்பது என்பது முடியாத காரியம் தான்.

    எனது ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார்கள். நான் ஒழுக்கமானவள் தான். இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பயப்படாமல் தான் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளேன்.

    நான் தனி ஆள் இல்லை. என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சேர்த்தே குரல் கொடுக்கிறேன். ‘மீ டூ’ மூலம் கற்பழிப்பு புகார்கள் கூட வெளியில் வருகின்றன. அது வழக்காக மாறி இருக்கிறது.

    பெண்கள் சமூகத்தில் உடன் பழகும் பல ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படுத்த நாம் இடம் கொடுப்பதில்லை. ஆண்களுக்கு கூட சிறுவர்களாக இருந்தபோது தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு அதிகமாக நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார். #MeToo #Timesup #Chinmayi #MeTooIndia 

    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். #MeToo #Chinmayi #MeTooIndia
    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியாமேனன்.

    இவர் தனது டுவிட்டரில் “பாடலாசிரியர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார்” என்று தகவல் வெளியிட்டு இருந்தார். இதை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

    உடனே பெயர் குறிப்பிடாத பெண்ணின் தகவலை எப்படி நீங்கள் நம்பலாம் என்று சின்மயிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இது உண்மை தான். நம்புங்கள் என்று பதில் அளித்த சின்மயி இறுதியில் தானே வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என்று டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.

    சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பான “விழமாட்டோம்” என்ற நிகழ்ச்சியில் பாடுவதற்காக நான் சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்ட நிலையில் என்னையும், எனது தாயையும் மட்டும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் இருக்கச்சொன்னார்.

    எதற்கு என்று கேட்ட போது, வைரமுத்துவை ஓட்டலில் போய் பாருங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். நாங்கள் கோபத்துடன் மறுத்துவிட்டு உடனே இந்தியா திரும்பிவிட்டோம்.

    இவ்வாறு கூறியிருந்தார்.

    இது தொடர்பாக சின்மயி அளித்த பேட்டியில் கவிஞர் வைரமுத்து அவரது அலுவலகத்தில் 2 பெண்களை முத்தமிட முயற்சித்தார். என்னைப் போல பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் பேசுவார்கள்.

    வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். விளம்பரத்துக்காக இதை நான் சொல்லவில்லை, இதனால் எனக்கு இனிமேல் பாடவாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை என்றார்.

    மேலும் சின்மயி கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து எழுதிய கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் மறுத்துவிட்டேன். இதனால் என்னை அரசியல்வாதியைப் பற்றி தரக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன்” என மிரட்டியதாக கூறினார்.

    முதலில் இதற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்த கவிஞர் வைரமுத்து இப்போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடெங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையை காலம் சொல்லும்” என பதிவிட்டு இருக்கிறார்.

    வைரமுத்து பதில் அளித்த சில நிமிடங்களிலேயே, “அவர் ஒரு பொய்யர்” என சின்மயி தனது டுவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

    இந்த பிரச்சினையில் சின்மயிக்கு ஆதரவாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

    தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக நடிகைகள் ஆன்ட்ரியா, சமந்தா, வரலட்சுமி, இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

    ஆன்ட்ரியா கருத்து:- பாலியல் தொல்லை என்ற குற்றச்சாட்டை ஒழித்து பெண்கள் அனைவரும் நிம்மதியாக வாழும் நிலை ஏற்படவேண்டும்.

    குற்றம் செய்பவர்களுக்கு தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் ஏற்படவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்போ 50 ஆண்டுகளுக்கு முன்போ தவறு தவறு தான்.

    இசை அமைப்பாளர் ஜிப்ரான்:- சின்மயி நான் உங்களை மதிக்கிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். நன்றி.

    சமந்தா:- சின்மயியையும் அவரது கணவர் ராகுலையும் எனக்கு 10 வருடங்களாக தெரியும். அவர் கூறுவது உண்மை தான். சின்மயி உறுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    வரலட்சுமி:- முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பெண்கள் பேசுவது வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்.

    கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து இருப்பதை சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சுரேஷ் மறுத்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு படைப்பாளர் மீது குற்றம் சாட்டும் சின்மயி மீது உலகத்தமிழர்கள் கோபத்தில் உள்ளனர். சின்மயியும் அவரது தாயும் என்னுடைய இல்லத்தில் தான் தங்கினார்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். #MeToo #Chinmayi #MeTooIndia

    ×